Skip to content
ஆமான்

ஆமான் என்பது காட்டுப்பசு,காட்டு எருது.

1. சொல் பொருள்

(பெ) காட்டுப்பசு,காட்டு எருது, காட்டா

2. சொல் பொருள் விளக்கம்

இஃது ஆவைப் போன்றது என்று பழந்தமிழர் கருதினர். இதை ஆமாவென்றும் அழைப்பர்.

ஆபோன்று, (பசுமாட்டைப் போன்று) இன்றும் காட்டில் காணப்படும் விலங்கை விலங்கு நூலார் The Bison என்பர். இது மாட்டினத்தைச் (oxen) சார்ந்த காட்டில் வாழும் மாடு (wild oxen) என்பர். உரையாசிரியர்களும் காட்டுப்பசு, காட்டு எருது, காட்டா என்று பொருள் கூறி இருப்பதைக் காணலாம்.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Bison, Gaur

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

ஆமான்
ஆமான்

பனைமருள் எருத்தின் பல்வரி இரும்போத்து
மடக் கண் ஆமான் மாதிரத்து அலறத்
தடக்கோட்டு ஆமான் அண்ணல் ஏஎறு
நனந்தலைக் கானத்து வலம்படத் தொலைச்சி – அகம் 238/5-8

பனம் துண்டினைப் போன்ற பிடரியினையுடைய பலவரிகளையுடைய பெரிய ஆண்புலி
மடப்பம் பொருந்திய கண்களையுடைய காட்டுப்பசு அலற
வளைந்த கொம்பினையுடைய, காட்டுப்பசுவின் தலமைப்பண்புள்ள காளையை
அகன்ற இடமுள்ள காட்டினில் வலப்பக்கம் வீழக் கொன்று

ஆமான் சூட்டின் அமைவர பெறுகுவிர் – சிறு 177

புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 253

மட நடை ஆமான் கயமுனி குழவி – மலை 500

செம் கோட்டு ஆமான் ஊனொடு காட்ட – பதி 30/10

குறிஞ்சிப்பாட்டிலும் , சிறுபாணாற்றுப்படையிலும், பதிற்றுப்பத்திலும் காடும் குன்றும் சேர்ந்த குறிஞ்சியிலேயே ஆமானைப் பற்றிப் பாடியிருப்பதைக் காணலாம்

தடம் கோட்டு ஆமான் மடங்கல் மா நிரை – நற் 57/1

நற்றிணை 57 ஆம் பாட்டு ‘குன்றத்திலும்‘ மாமலையிலும் ஆமான் காணப் பட்டதைக் குறிப்பிடுகின்றது

அமர் கண் ஆமான் அரு நிறம் முள்காது – நற் 165/1

அமர் கண் ஆமான் அம் செவி குழவி – குறு 322/1

கொடும் கோட்டு ஆமான் நடுங்கு தலை குழவி – புறம் 319/10

புலிபால் பட்ட ஆமான் குழவிக்கு – புறம் 323/1

சங்கச் செய்யுள்களிலே ஆமானைப்பற்றி வரும் முக்கிய செய்தி மலையினும் குன்றிலும் உள்ள காடுகளில் ஆமான் காணப்பட்டதாகக் கூறுவது

நாலடியாரிலும் நிரையாமா சேக்கு நெடுங்குன்ற நாட என்று கூறுமிடத்தில் ஆமாக்கள் நிரையாக நெடுங்குன்றில் வாழ்வதாகக் கூறியிருப்பது அரிய செய்தியாகும்.

மாட்டுக் கொம்புகள் போலன்றி இதன் கொம்புகள் ஒரே சீராக வளைந்து உள்பக்கமாகத் திரும்பித் தடித்துக் காணப்படும் . உள்ளே துளையுடையதாக இருக்கும். இதன் கொம்பைச் சங்கப் புலவர்கள் பொருத்தமாக விளக்கியுள்ளனர். தடவு கோட் டாமான் ( நற்றிணை . 57 , 238 ) என்றும் கொடுங்கோட் டாமான் ( புறம் . 319) என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

குறுந்தொகை 363 ஆம் பாடலில் ஆமானின் எருத்திற்குக் கண்ணி மருப்பு இருப்பதாகக் கூறியுள்ளதைப் பார்க்கலாம் . கண்ணி என்பது வளை வான ஒரு தலைமாலை. அதுபோல நன்கு வளைந்திருப்பதாகக் கூறியிருப்பதை நோக்குக . புழற்கோட்டாமான் ( குறிஞ்சிப்பாட்டு ) என்று அதன் உட்டுளையுடைய கொம்பையும் குறிப்பாகக் கூறியுள்ளதைக் காணலாம் .

  1. இரலை மானின் கொடம்பை , திரிமருப் பிரலை ( spiralled horn ) என்றும் க
  2. லைமானின் கொம்பை கவைமருப் பெழிற்கலை என்றும் ( branched horn ) ,
  3. ஆமானின் கொம்பை தடவுகோட் டாமான் என்றும் கூறியதைக் கவனிக்கவேண்டும் .

அழகிய , சிறிய சொற்களால் இவ்விலங்குகளின் கொம்பை விளக்கியிருப்பது போற்றற் குரியது .

பதிற்றுப்பத்தில் ஆமானின் கொம்பை செங்கோட் டாமான் என்று கூறியிருப்பதைக் காண்க .

பருவத்தில் இருந்த ஆமானின் ஊனையே வேட்டுவர் உண்ணக் கொடுத்ததாகக் கூறப்பட்டுள்ளது. பருவஆமான் ( Young gaur ) கருஞ்சிவப்பு நிறமாக அல்லது காப்பி ( coffee ) நிறமாக இருக்கும் என்று கூறுவர். முதிய ஆமானின் விரும்பி உண்பது வழக்கமன்று. பருவ ஆமானைக் குறிக்கவே செங்கோட்டாமான் என்று கூறினர்.

சிலைத்தல் எனுஞ் சொல் இசைப் பொருளைக் குறிக்கும் சொல். காளைமாடு மகிழ்ச்சியுடன் வெளியிடும் ஒலியையே சிலைத்தல்.

ஆமான்
ஆமான்

ஆமானரறு முதியதாகவும் , வலிமை மிக்கதாகவும் மிகக் கரியதாகவும் இருக்கும் . பாலுணர்ச்சியற்ற காலத்துப் பல எருதுகள் கலந்து ஒரே நிரையில் காண்பதுண்டு. நிரையில் தலைமை வகிக்கும் ஆமான்ஏற்றை ( Master Bull ) சங்க நூல்கள் அண்ணல் ஏறு ( அகம் ,238 , குறுந்தொகை , 363 ) என்றும் நல்லேறு ( முருகு 315 ) என்றும் குறிப்பாக அழைப்பதைக் கவனிக்க வேண்டும் . அண்ணல் என்பது தலைமையைக் குறிக்கும் சொல்லாகும் .

சங்க நூல்களில் யானை , மான் முதலிய விலங்குகளுக்குத் தலைமை என்ற பொருளில் இச்சொல் பயின்று வருகின்றது . ஆதலின் ஆமான் அண்ணல்ஏறுஆமான் நிரைக்குத் தலைமையான ஆமான் ஏறு என்பதில் ஐயமில்லை . இதை ஆமான் நிரைக்குப் பொலி காளை ( Master Bull) எனலாம்.மற்றும் நல்லேறு என்று கூறுவதையும் கவனிக்க வேண்டும் .

நல்லேறு என்பதும் இதே பொருளில் வழங்குகின்றது . பெரிதாகும் ( தொல் . 343 ) என்றபடி பெரிய ஏறு என்பதே இதன் பொருள் . நிரையில் பெரிய , வலிய ஏறு தலைமை கொள்ளுவது வழக்கம் . கல்லேறு என்ற சொல்லும் சங்க நூல்களில் பொலியெருது என்ற பொருளுடன் வழங்கியிருப்பதைக் காணலாம் .

பிற்காலத்தில் இதே சொல் நல்லெருது என்று சாசனத் தமிழில் பொலி காளைக்கு வழங்கியது .ஆமானின் நல்லேறு நிரையைவிட்டுத் தனியாக வாழும் போது மரையான் ( Nilgai ) ஏற்றுடன் போரிட்டதை மலைபடுகடாம் பாடல் குறிப்பிட்டுள்ளது . மழைக் காலம் கழிந்தபின் புல் வெளியில் அறுகம்புல்லைத் தின்று .

ஆமான்
ஆமான்

செருக்குற்ற நடையோடு நீரைப் பருகுவதை அகப்பாடல் 341 குறிப்பிட்டிருப்பதைக் கவனிக்க வேண்டும் .

ஆமான் காட்டில் வாழும் விலங்குகளில் பெரிய விலங்கானதால் வரிப்புலியைத் தவிர வேறெந்த விலங்கும் ஆமானை ஊறுசெய்ய நெருங்கா என்று விலங்கு நூலார் கூறுவர் . ஆமானின் எதிரி வரிப்புலியாகும் . சங்க நூலிலும் பனை போன்ற பெரிய கழுத்தையுடைய வரிப்புலி ஆமானின் எருதைக் கொன்று அகன்ற பாறை சிவக்கும்படி இழுத்துச் சென்றதாகக் கூறியிருப்பது , தாம் கண்டதைப் புலவர் உண்மையாகக் கூறியதாகும் .

புலியும் கூட ஆமானைத் தனித்துக் காணும்போதோ , நிரையிலிருந்து ஆமான் பிரிந்து மேயும்போதோ அடித்துக் கொல்லுமாம் . புலிப்பாற்பட்டஆமான் குழவியைச் சினம் கழிந்த மூதா கன்று மடுத்தூட்டும் என்று புறநானூறு ( 323 ) கூறுவதைக் கவனிக்கவும் . நிரையில் காணப்படும் கன்றைச் சில சமயங்களில் புலி தாக்குவதுண்டு .

ஆனால் நிரையிலுள்ள ஆமான்கள் புலியை எதிர்த்துத்தாக்கிக் கன்றை மீட்டுவிடும் . ஆமானின் கன்றை மீட்க ஒரு மூதா சினத்தோடு தாக்கிப் புலியிடமிருந்து மீட்டுச் சினம் தணிந்து கன்றுக்குப் பால் கொடுத்ததாகப் புறப்பாடல் கூறுவது உண்மையாக நடந்த நிகழ்ச்சியெனவே தெரிகின்றது.

பாதுசா ( M. A. Badsha ) என்ற தமிழ்நாட்டு விலங்கு நூல் அறிஞர் ஆமானைப் புலி கொன்று இழுத்துச் சென்றதையும் , ஆமான் குட்டியைப் புலி தாக்கியதையும் நேரில் கண்டு எழுதிய செய்தியை இதுசார் பாகப் படித்து மகிழலாம் . { In Mudumalai wild life sanctuary ( Madras State ) a fight between a fully grown tiger and a huge bull gaur ( Indian bison ) lasted for a day before the gaur fell. The scene of fight bore unmistakablc proof of their prowess. The Surrounding vegetation was smeared with blood …………

On the 28th July 1963. I saw a calf in a herd of 46 gaurs with a ghastly wound on his right thigh with a piece of flesh hanging down . The mother gaur who was also licking this wound had also an injury on her right leg. The story is that, this calf was rescued from the tiger by the herd and in the bargain the mother gaur also was wounded.- ( The Hindu, September 29, 1963 )

இவ்வறிஞர் கூறும் இந்த இரண்டு செய்திகளைப் போலவே சங்க நூற் செய்திகள் காணப்படுவது மீகுந்த வியப்பையும் மகிழ்ச்சியையும் தருமென்பதில் ஐயமில்லை

பார்க்க – ஆமா

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *