சொல் பொருள்
(பெ) ஆரவாரம், பேரொலி
சொல் பொருள் விளக்கம்
ஆரவாரம், பேரொலி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
loud, tumultuous noise
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 619 சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே தலைவன் – தலைவிக்குள்ள மறைவான காதல் ஒழுக்கத்தை ஒருவாறு தெரிந்துகொண்ட ஊர்ப்பெண்கள் பேசுகின்ற பழிச்சொற்கள் முதலில் அம்பல் என்றும் பின்னர் ஊரார் அறிந்து பேசும் பேச்சு அலர் என்றும் கூறப்படும். இவ்வாறு அம்பலும், அலரும் ஊர் முழுதும் பெரிதும் பேசப்படுகிறது என்பதைத் தலைவனுக்கு உணர்த்தவந்த தலைவியோ, தோழியோ, இந்தப்பேச்சு ஒரு பெரும்பொரில் வெற்றிகொண்டவர் எழுப்பும் ஆரவாரத்தினும் பெரிதாக இருந்தது என்று கூறுவது வழக்கம். இத்தகைய செய்திகளின் மூலமாக, அன்றைக்கு நடந்த பல போர்களைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் நமக்குக் கிடைக்கின்றன. சிறு வீ ஞாழல் வேர் அளை பள்ளி அலவன் சிறு_மனை சிதைய புணரி குணில் வாய் முரசின் இரங்கும் துறைவன் நல்கிய நாள் தவ சிலவே அலரே வில் கெழு தானை விச்சியர் பெருமகன் வேந்தரொடு பொருத ஞான்றை பாணர் புலி நோக்கு உறழ் நிலை கண்ட கலி கெழு குறும்பூர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 328/8 சிறிய மலரையுடைய ஞாழல்மரத்தின் வேரில் அமைக்கப்பட்ட வளையில் படுத்திருக்கும் நண்டினுடைய சிறிய வீடு சிதையுமாறு, அலைகள் குறுந்தடியால் அடிக்கப்பெறும் முரசைப்போல முழங்கும் துறையைச் சேர்ந்த தலைவன் அருள்புரிந்த நாட்கள் மிகச் சிலவே!, இதனால் எழுந்த பழிச்சொல்லோ, விற்படையைக் கொண்ட சேனைகளையுடைய விச்சியரின் தலைவன் அரசர்களோடு போரிட்டபோது, பாணர்களின் புலிப்பார்வை போன்ற நிலையினைக் கண்ட ஆரவாரமிக்க குறும்பூர்க்காரர்கள் எழுப்பிய முழக்கத்தைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது. ஒளிறு வாள் கொங்கர் ஆர்ப்பினும் பெரிதே – குறு 393/6 வென்றி கொள் வீரர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 36/23 இன் இசை ஆர்ப்பினும் பெரிதே யானே – அகம் 45/12 ஆடு கொள் வியன் களத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 116/19 ஆலங்கானத்து ஆர்ப்பினும் பெரிது என – அகம் 209/6 பொராஅது ஓடிய ஆர்ப்பினும் பெரிதே – அகம் 226/17 தொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே – அகம் 246/14 இன் இசை ஆர்ப்பினும் பெரிதே ஈங்கு யான் – அகம் 253/7 வீறு சால் அவையத்து ஆர்ப்பினும் பெரிதே – அகம் 256/21 என்பன போன்ற அடிகள் அகச்செய்தியைக் காட்டிலும் நிறைய புறச்செய்திகளை நமக்குத் தெரிவிக்கின்றன.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்