சொல் பொருள்
(வி) 1. துவளு, வாடு, 2. நெகிழ், 3. இளகு, 4. உடல் தளர்,மெய் துவளு, 5. மென்பதமாகு, 6. தன்னல நோக்கத்தில் நயமாக நடந்துகொள், 7. உழக்கு, கூழாக்கு, 8. தழையச்செய், 9. துவளச்செய், 10. இளகுபதமாகு,
2. (பெ) 1. குண்டலம், காதணி, 2. தளிர்
சொல் பொருள் விளக்கம்
துவளு, வாடு
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
wither, fade, become loose, melt, become tender, be tired, be weighed down, become a paste, fawn on somebody, mash, cause to shoot forth, cause to wither, well-boiled, a kind of earring, Tender leaf, sprout, shoot
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சென்று அவண் வருந்த பொரேஎன் ஆயின் பொருந்திய தீது இல் நெஞ்சத்து காதல் கொள்ளா பல் இரும் கூந்தல் மகளிர் ஒல்லா முயக்கு இடை குழைக என் தாரே – புறம் 73/10-14 மேற்சென்று அவ்விடத்து வருந்தும்படி பொருதிலேனாயின் கூடிய தீதில்லாத நெஞ்சத்தால் காதல் கொள்ளாத பலவகைப்பட்டகரிய கூந்தலையுடைய பொதுப்பெண்டிரது பொருந்தாத புணர்ச்சியிடை என் மாலை துவள்வதாக பயன் நிலம் குழைய வீசி பெயல் முனிந்து விண்டு முன்னிய கொண்டல் மா மழை – அகம் 235/4,5 பயந்தரும் நிலங்கள் நெகிழப் பெய்து, பின் பெய்தலை வெறுத்து மலையைச் சேர்ந்த கொண்டலாகிய கரிய மேகம் இன் உயிர் குழைய முயங்கு-தொறும் மெய் மலிந்து நக்கனென் அல்லனோ யானே – அகம் 22/18,19 இனிய உயிர் இளகும்படி முயங்கொதோறும் உடல் பூரித்துச் சிரித்தே அல்லனோ யான்? சிறு கண் யானை பெரும் கை ஈர் இனம் குளவி தண் கயம் குழைய தீண்டி – நற் 232/1,2 சிறிஉஅ கண்ணையும் பெரிய கையையுமுடைய யானையின் களிறும் பிடியுமாகிய இரண்டினம் மலைப்பச்சையைச் சுற்றிலுமுடைய நீர்ச்சுனையிலே மெய்துவளப் புணர்ந்து – பின்னத்தூரார் உரை. அடுத்தடுத்து ஆடுவார் புல்ல குழைந்து வடு படு மான்_மத_சாந்து ஆர் அகலத்தான் – பரி 16/43,44 மீண்டும் மீண்டும் நீராடும் பரத்தையரைத் தழுவியதால், குழைந்துபோய் உருக்குலைந்துபோன கத்தூரிச் சாந்து நிறைந்த மார்பினையுடைவன், கூனி குழையும் குழைவு காண் – கலி 94/30 கூனி குழைகின்ற குழைவினைப் பாரேன்!” பெரும் தண் குளவி குழைத்த பா அடி இரும் சேறு ஆடிய நுதல கொல் களிறு – நற் 51/8,9 பெரிய குளிர்ந்த காட்டு மல்லிகைக் கொடியை மிதித்து உழக்கிய பரந்த அடியையுடையதும், கரிய சேற்றைப் பூசிக்கொண்ட நெற்றியையுடையதுமான கொல்லவல்ல ஆண்யானை கொண்டல் மா மழை குடக்கு ஏர்பு குழைத்த சிறு கோல் இணர பெரும் தண் சாந்தம் – நற் 140/1,2 கிழக்குக்காற்று கொண்டுவந்த பெரிய மேகம் மேற்குத்திசையில் எழுந்து பெய்தலால் தழைத்த சிறிய கிளைகளில் பூங்கொத்துக்களையுடைய மிகவும் குளிர்ந்த சந்தனத்தை நுனை குழைத்து அலமரும் நொச்சி மனை கெழு பெண்டு யான் ஆகுக மன்னே – அகம் 203/17,18 முனைகள் தளிர்க்கப்பெற்று அசைந்திடும் நொச்சி சூழ்ந்த மனைக்குரிய பெண்டாக யான் ஆவேனாக அலமரல் உண்கண்ணார் ஆய் கோதை குழைத்த நின் மலர் மார்பின் மறுப்பட்ட சாந்தம் வந்து உரையா_கால் – கலி 73/12,13 சுழலுகின்ற மைதீட்டிய கண்களையுடைய பரத்தையரின் அழகிய மாலைகளைத் துவளச் செய்த உன் மலர்ந்த மார்பில் பூசிய கலைந்துபோன சந்தனம் வந்து சொல்லாதபோது; குறு முயலின் குழை சூட்டொடு – புறம் 395/3 குறுமுயல்களின் குழைந்த சூட்டிறைச்சியுடன் நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86 ஒளி தங்கி அசையும் வகையாக(-நன்றாக) அமைந்த பொன்னாலான மகரக்குழை சிறு குழை துயல்வரும் காதின் பணை தோள் – பெரும் 161 சிறிய குழை அசைகின்ற காதினையும், மூங்கில் போன்ற தோளினையும் அர வாய் வேம்பின் அம் குழை தெரியலும் – பொரு 144 அர(த்தின்) வாய் (போலும் வாயையுடைய)வேம்பின் அழகிய தளிரால் செய்த மாலையினையும், பைம் குழை தழையர் பழையர் மகளிர் – அகம் 331/5 பசிய தளிர்களாலாய தழையுடையராகிய எயினர் மகளிர்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்