சொல் பொருள்
(வி.அ) 1. சிறிதுசிறிதாக, 2. மெல்லென, 3. மெதுவாக, 4. மெத் என்று, 5. மெல்ல, 6. இலேசாக, சிறிதளவாக, 7. சிறிது நேரம் கழித்து,
சொல் பொருள் விளக்கம்
சிறிதுசிறிதாக
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
little by little, gradually, gently, slowly, softly, not loudly, slightly, after some time
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: மரல் நார் உடுக்கை மலை உறை குறவர் அறியாது அறுத்த சிறியிலை சாந்தம் வறன்_உற்று ஆர முருக்கி பையென மரம் வறிது ஆக சோர்ந்து உக்கு ஆங்கு என் – நற் 64/4-7 மரல் நாரினால் செய்த உடையினையுடைய மலையில் வாழும் குறவர்கள் அறியாமல் மேல் பட்டையை அறுத்த சிறிய இலைகளைக் கொண்ட சந்தனமரம் காய்ந்துபோய் மிகவும் கெட்டுச் சிறிதுசிறிதாக மரமே வெறுமையுற்று சோர்ந்து விழுவதைப் போல பையென வடந்தை துவலை தூவ – நற் 152/5,6 மெல்லென வாடைக்காற்று மழைத்துளிகளைத் தூவ கரும் கால் வேங்கை செம் வீ வாங்கு சினை வடு கொள பிணித்த விடு புரி முரற்சி கை புனை சிறு நெறி வாங்கி பையென விசும்பு ஆடு ஆய் மயில் கடுப்ப யான் இன்று பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி செலவுடன் விடுகோ தோழி – நற் 222/1-6 கருமையான அடிமரத்தையுடைய வேங்கையின் செம்மையான மலர்களையுடைய வளைந்த கிளையில், தழும்பு உண்டாகுமாறு இறுகக் கட்டிய சற்றுத்தளர்ந்த முறுக்கினைக் கொண்ட கயிற்றாலாகிய கையால் செய்யப்பட்ட சிறிய வளைவைக் கொண்ட ஊஞ்சலை இழுத்து, மெதுவாக விசும்பில் பறக்கும் அழகிய மயிலைப் போன்று, நான் இன்று பசும்பொன்னால் ஆகிய மணிகள் பதித்த வடத்தையுடைய அல்குலைப் பற்றி, தள்ளிவிட்டு உயரே செல்ல விடுக்கிறேன் தோழி! ஒய்யென சிறிது ஆங்கு உயிரியர் பையென முன்றில் கொளினே நந்துவள் பெரிது என – நற் 236/3,4 விரைவாக, நான் சிறிதாகிலும் உயிர்த்திருக்க, “மெத்தென்று முற்றத்தில் இவளை இருத்தினால் நலம்பெறுவாள் பெரிதும்” என்று மன்றல் அம் பெண்ணை மடல் சேர் வாழ்க்கை அன்றிலும் பையென நரலும் இன்று அவர் – குறு 177/3,4 பொதுவிடத்தில் உள்ள அழகிய பனையின் மடலில் இருந்து வாழ்கிற அன்றில் பறவையும் மெல்லக் கூவும்; தளவின் பைம் கொடி தழீஇ பையென நிலவின் அன்ன நேர் அரும்பு பேணி கார் நயந்து எய்தும் முல்லை – ஐங் 454/1-3 செம்முல்லையின் பசிய கொடியைத் தழுவிக்கொண்டு, இலேசாக நிலவைப் போன்ற அழகிய வெண்மையான அரும்புகளைக் கொண்டு கார்ப் பருவத்தை விரும்பித் தோன்றியிருக்கின்றன முல்லை மலர்கள் வினை வெஃகி நீ செலின் விடும் இவள் உயிர் என புனை_இழாய் நின் நிலை யான் கூற பையென நிலவு வேல் நெடுந்தகை நீள் இடை செலவு ஒழிந்தனனால் செறிக நின் வளையே – கலி 10/21-24 பொருள்தேடும் தொழிலை நாடி நீ பிரிந்து சென்றால் இவள் உயிரை விட்டுவிடுவாள் என்று, சிறப்பாகச் செய்த அணிகலன்களைச் சூடியவளே! உன்னுடைய நிலையை நான் எடுத்துக்கூற, சிறிது நேரம் கழித்து ஒளிவீசும் வேலையுடைய நெடுந்தகையாளர், நீண்ட அந்தப் பாலை வழியில் பயணம் செய்வதைத் தவிர்த்துவிட்டார், கழன்றுபோகாமல் செறிந்து நிற்கட்டும் உன் வளையல்கள். இந்த இடத்தில், ’பையென’ என்பதற்கு ‘உடனே’ (immediately) என்று பொருள்கொள்வார் டாக்டர்.இராசமாணிக்கனார் ’நன்கு சிந்தித்து’ என்று பொருள்கொள்வார் டாக்டர்.ச.வே.சுப்பிரமணியன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்