சொல் பொருள்
1. (வி) 1. உடன்படு, 2. முடிவுசெய், துணி, 3. வலியுறுத்து, நிர்ப்பந்தி, 4. இழு, 5. கடினமாய் வாங்கு, இறுக்கு, 6. உடன்படச்செய், ஒருப்படுத்து, 7. கருது, 8. உறுதிகொள், உறுதியானதாகு, 9. கருத்தோடுசெய், மனம் ஒன்றிச் செயல்புரி, 10. தானாக முன்வந்து செய், தானாக (அறியாமல்) ஒன்றில் மாட்டிக்கொள்தல்,
2. (பெ) வலிமை,
சொல் பொருள் விளக்கம்
உடன்படு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
agree to, consent to, decide, compel, force, draw, pull, tighten, cause to consent, consider, be firm, become strong, become hard, execute with undivided attention, as a work, act of one’s own free will; be caught up on one’s own act, strength, power
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: திறம் புரி கொள்கையொடு இறந்து செயின் அல்லது அரும் பொருள் கூட்டம் இருந்தோர்க்கு இல் என வலியா நெஞ்சம் வலிப்ப சூழ்ந்த வினை இடை விலங்கல போலும் – நற் 252/3-6 திட்டமிட்டுச் செயலாற்றும் கொள்கையுடன் சென்று பொருள்சேர்த்தால் அன்றி அரிய பொருளைச் சேர்ப்பது சோம்பியிருப்போர்க்கு இல்லை என்று, இதுவரையிலும் உடன்பட்டெழாத நெஞ்சம் ஒருப்படுதலால், ஆராய்ந்து தொடங்கிய செயல்முனைப்பினைத் தடுக்கவில்லை போலும் காதலர் பேணார் ஆயினும் பெரியோர் நெஞ்சத்து கண்ணிய ஆண்மை கடவது அன்று என வலியா நெஞ்சம் வலிப்ப வாழ்வேன் தோழி என் வன்கணானே – குறு 341/3-7 காதலர் தம் சொல்லைக் காவாராயினும், பெரியோர்களின் நெஞ்சத்தில் கருதிய ஆண்மைச் செயல்கள் நிறைவேற்றப்படுவது இல்லை என்று முன்னர்த் துணியாத என் நெஞ்சம் இப்போது துணிந்தமையால் வாழ்கின்றேன் தோழி என் மனவுரத்தாலே. அரும் சுர கவலை நீந்தி என்றும் இல்லோர்க்கு இல் என்று இயைவது கரத்தல் வல்லா நெஞ்சம் வலிப்ப நம்மினும் பொருளே காதலர் காதல் – அகம் 53/12-15 அரிய பாலை நிலத்தின் கிளைத்துச் செல்லும் வழிகளைக் கடந்துசென்று, என்றும் இல்லாதவர்களுக்கு இல்லையென்று கூறி இயன்றதைத் தராமல் மறைப்பதற்கு வலிமையற்ற நெஞ்சம் வற்புறுத்தலால், நம்மைக்காட்டிலும் பொருளே காதலரின் விருப்பம்; தொடி நிலை நெகிழ்த்தார் கண் தோயும் என் ஆர் உயிர் வடு நீங்கு கிளவியாய் வலிப்பென்-மன் வலிப்பவும் நெடு நிலா திறந்து உண்ண நிரை இதழ் வாய் விட்ட கடி மலர் கமழ் நாற்றம் கங்குல் வந்து அலைத்தரூஉம் – கலி 29/18-21 என் வளையல்களைக் கழன்றோடச் செய்த அவரையே நோக்கிச் செல்லும் என் ஆருயிரை, குற்றமற்ற சொற்களையுடையவளே! இழுத்து நிறுத்துகின்றேன், அவ்வாறு நிறுத்தினாலும் நீண்டிருக்கும் நிலவொளி விரித்துவிட்டுத் தன் கதிர்களைப் பரப்ப, அதனால் வரிசையான இதழ்கள் மலர்ந்து மணமிக்க மலர்கள் வீசும் நறுமணம் இரவில் வந்து வருத்துகின்றதே! தாது உண் வேட்கையின் போது தெரிந்து ஊதா வண்டு ஓர் அன்ன அவன் தண்டா காட்சி கண்டும் கழல் தொடி வலித்த என் பண்பு இல் செய்தி நினைப்பு ஆகின்றே – நற் 25/9-12 தேனை உண்ணும் வேட்கையினால் மலரின் தன்மையை ஆராயாமல் போய் விழுகின்ற வண்டின் ஒரு தன்மையை ஒத்த அவனது அமையாத தோற்றத்தைக் கண்டும் கழன்றுபோன வளையல்களை மீண்டும் செறித்துக்கொண்ட எனது பண்பற்ற செய்கை என்னில் நினைப்பாகவே இருக்கின்றது. கோள் வல் பாண்_மகன் தலை வலித்து யாத்த நெடும் கழை தூண்டில் நடுங்க – பெரும் 284,285 (மீனைக்)கொள்ளுதலில் வல்ல பாண்மகனுடைய தலையில் இறுக்கிக் கட்டின நெடிய மூங்கில் கோலாகிய தூண்டில் நடுங்கும்படியும், பெரு விதுப்பு உறுக மாதோ எம் இல் பொம்மல்_ஓதியை தன் மொழி கொளீஇ கொண்டு உடன் போக வலித்த வன்கண் காளையை ஈன்ற தாயே – நற் 293/6-9 பெரிதாக மனம் ‘விதுக்’கென்று போகட்டும்; எமது வீட்டுப் பொங்கிநிற்கும் கூந்தல்காரியான என் மகளைத் தன் சொற்களால் மயக்கித் தன்னுடன் கூட்டிக்கொண்டுபோய்விடுவதற்கு மனத்தை ஒருப்படுத்திய கொடுமைக்கார இளைஞனைப் பெற்றெடுத்த தாய்க்கு நல் இசை வலித்த நாண் உடை மனத்தர் – அகம் 231/4 நல்ல புகழைக் கருதிய நாண் உடைய மனத்தராய நம் தலைவர் சுரன் இடை விலங்கிய மரன் ஓங்கு இயவின் வந்து வினை வலித்த நம்_வயின் என்றும் தெருமரல் உள்ளமொடு வருந்தல் ஆனாது – அகம் 289/4-6 பாலை நிலத்தே குறுக்கிடும் மரங்கள் உயர்ந்துள்ள நெறியில் வந்து பொருளீட்டும் தொழிலில் உறுதிகொண்டுள்ள நம்மிடத்தே எப்பொழுதும் நினைந்து சுழலும் உள்ளத்தால் வருந்துதல் குறையாமல் நீர் நுங்கின் கண் வலிப்ப – புறம் 389/1 நீர் உள்ள பனை நுங்கு வற்றிக் கல் போல் கெட்டியாக களம் புகல் ஓம்பு-மின் தெவ்விர் போர் எதிர்ந்து எம்முளும் உளன் ஒரு பொருநன் வைகல் எண் தேர் செய்யும் தச்சன் திங்கள் வலித்த கால் அன்னோனே – புறம் 87 போர்க்களத்தில் புகுதலைத் தவிருங்கள், பகைவர்களே, போரின்கண் மாறுபட்டு எங்களுக்குள்ளும் ஒரு வீரன் உளன், ஒருநாள் எட்டுத் தேரைச் செய்யும் தச்சன் ஒரு மாதம் கூடிக் கருதிச் செய்த தேர்க்காலை ஒப்பவன் தொழுதி போக வலிந்து அகப்பட்ட மட நடை ஆமான் – மலை 499,500 (தன்)கூட்டமெல்லாம் ஓடிப்போய்விட (ஓடமுடியாமல்) வலிய அகப்பட்ட மெல்லிய நடையையுடைய காட்டுப்பசுவின் கன்றும் மத வலி நிலைஇய மா தாள் கொழு விடை – திரு 232 மிகுந்த வலிமை நிலைபெற்ற பெரிய காலையுடைய கொழுவிய கிடாயின் கன்று அரைப்பட்ட கயம்தலை மட பிடி வலிக்கு வரம்பு ஆகிய கணவன் ஓம்பலின் – மலை 307,308 கன்றை வயிற்றுக்குக் கீழே(கால்களுக்கிடையே) கொண்ட இளந் தலையுடைய பேதைமையுள்ள பெண்யானை, வலிமைக்கு ஓர் எல்லை என்று கூறத்தக்க அதன் கணவன் பாதுகாத்துநிற்பதினால்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்