ஓமைஒரு பாலை நிலத்து மரம்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு மரம்,
2. சொல் பொருள் விளக்கம்
ஒரு பாலைநிலத்து மரம்.இம்மரம் பற்றிய பல குறிப்புகள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன. உவர்நிலப்பாங்கான வறண்ட பாலை நிலச் சுரத்திலே ஓமை மரங்கள் காடாக வளரும் எனவும், இதன் அடி மாத்தைப் ‘புன்தாள்’, ‘பொரிதாள்’, ‘முடத்தாள்’ எனவும் குறிப்பிடுகின்றன. இம்மரம் புல்லிய இலைகளை உடைய தென்றும், இது மிக ஓங்கி வளரும் என்றும், கவடுகளை உடையதென்றும், இதில் பருந்துகள் ஏறியமர்ந்து கூவும் என்றும், இதில் ‘சிள் வீடு’ என்ற வண்டொன்று தங்கி வெப்பம் மிக்க நடுப் பகலில் கறங்கும் என்றும், உடன்போக்கில் பாலை வழிப் பேவாரும் பிறரும் இம்மரத்தின் நிழலில் தங்கி இளைப்பாறுவர் என்றும். இதன் பட்டையை உரித்து யானை உண்ணும் என்றும் கூறப்படுகின்றன
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Tooth-brush tree, Dillenia indica, Salvadora persica
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இது ஒரு பாலை நில மரம். இன்றைய கருவேலமரத்தை ஒத்தது. உவர் எழு களரி ஓமை அம் காட்டு வெயில் வீற்றிருந்த வெம்பு அலை அரும் சுரம் – நற் 84/8,9 உப்புப்பூத்துக் கிடக்கும் களர் நிலத்து ஓமைக்காட்டு, வெயில் நிலைத்திருந்த வெப்பம் அலையிடும் அரிய காட்டுவழியில் இதன் உச்சிக்கிளைகள் காய்ந்து பரந்து இருக்கும் உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி – நற் 252/1 கிளைகள் பரந்த ஓமை மரத்தின் காய்ந்த நிலையில் அதனை ஒட்டிக்கொண்டு அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி – ஐங் 321/2 உச்சியில் பரந்த தலையைக் கொண்ட ஓமை மரத்தின் அழகிய பிரிந்திருக்கும் கிளையில் சென்று இதன் அடிமரம் பருத்து இருக்கும் பணை தாள் ஓமை படு சினை பயந்த – நற் 318/2 பருத்த அடிமரத்தைக் கொண்ட ஓமை மரத்தின் தாழ்ந்த கிளை தந்த இதன் அடிமரம் பொரிந்துபோன பட்டைகளை உடையது பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை – குறு 79/2 பொரிந்த அடிமரத்தையுடைய ஓமையின் காற்றால் புடைக்கப்பட்ட நீண்ட கிளையின் இதன் அடிமரம் கருப்பாய் இருக்கும் கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை – அகம் 3/2 கருத்த அடிப்பகுதியை உடைய ஓமை மரத்தின் காண்பதற்கு இனிய பெரிய கிளையில் இதன் இலைகள் மிகச்சிறியவாய் அழகிழந்து இருக்கும் புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் – நற் 107/6 புன்மையான இலையையுடைய ஓமை மரங்களுடைய புலிகள் நடமாடும் கடிய பாதையில் உவர் எழு களரி ஓமை அம் காட்டு - நற் 84/8 பெரும் களிறு தொலைத்த முட தாள் ஓமை/அரும் சுரம் செல்வோர்க்கு அல்கு நிழல் ஆகும் - நற் 137/7,8 ஓமை நீடிய கான் இடை அத்தம் - நற் 198/2 உலவை ஓமை ஒல்கு நிலை ஒடுங்கி - நற் 252/1 பசி பிடி உதைத்த ஓமை செம் வரை - நற் 279/7 பணை தாள் ஓமை படு சினை பயந்த - நற் 318/2 பொரி தாள் ஓமை வளி பொரு நெடும் சினை - குறு 79/2 ஊர் பாழ்த்து அன்ன ஓமை அம் பெரும் காடு - குறு 124/2 அத்த ஓமை அம் கவட்டு இருந்த - குறு 207/2 ஓமை குத்திய உயர் கோட்டு ஒருத்தல் - குறு 396/4 புல் அரை ஓமை நீடிய - ஐங் 316/4 அலறு தலை ஓமை அம் கவட்டு ஏறி - ஐங் 321/2 கரும் கால் ஓமை காண்பு இன் பெரும் சினை - அகம் 3/2 முளிந்த ஓமை முதையல் அம் காட்டு - அகம் 5/8 பருந்து இளைப்படூஉம் பாறு தலை ஓமை/இரும் கல் விடர்_அகத்து ஈன்று இளைப்பட்ட - அகம் 21/15,16 கரும் கால் ஓமை ஏறி வெண் தலை - அகம் 117/6 ஓமை அம் பெரும் காட்டு வரூஉம் வம்பலர்க்கு - அகம் 191/9 நிழல் இல் ஓமை நீர் இல் நீள் இடை - அகம் 223/8 சூர் முதல் இருந்த ஓமை அம் புறவின் - அகம் 297/11 ஓமை நீடிய உலவை நீள் இடை - அகம் 369/17 போழ் புண் படுத்த பொரி அரை ஓமை/பெரும் பொளி சேய அரை நோக்கி ஊன் செத்து - அகம் 397/11,12 புல் இலை ஓமைய புலி வழங்கு அத்தம் - நற் 107/6 புன் தாள் ஓமைய சுரன் இறந்தோரே - குறு 260/8 பொரி புற ஓமை புகர் படு நீழல் - ஐந்70:37/1 கள்ளி சார் கார் ஓமை நார் இல் பூ நீள் முருங்கை - திணை150:91/1 அரக்கு ஆர்ந்த ஓமை அரி படு நீழல் - கைந்:19/1 நீர் விளை மாராஅமும் நிழல் செய் ஓமையும் ஏர் விளை முகத்து இடம் கிடந்த இ நெறி - தேம்பா:19 38/1,2 அலறு தலை மராமும் உலறு தலை ஓமையும் பொரி அரை உழிஞ்சிலும் புல் முளி மூங்கிலும் - மது: 11/75,76 அடு கணை மறவர் அகல் இலை ஓமை நெடு நிலை திரள் தாள் நேர் துணித்து அதர்வை - உஞ்ஞை:55/52,53 ஓமையும் உழிஞ்சிலும் உலவையும் உகாயும் - உஞ்ஞை:52/37 உரிந்த பாரை எறிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே - கலிங்:76/2 வீரையும் கரிய ஓமையும் நெடிய வேரலும் முதிய சூரலும் - சீறா:4210/2 ஓமையன கள்ளியன வாகையன கூகை முரல் ஓசை - தேவா-சம்:3680/1
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்