சிதடி என்பது சிள்வண்டு, சுவர்க்கோழி,
1. சொல் பொருள்
(பெ) சிள்வண்டு, சுவர்க்கோழி
2. சொல் பொருள் விளக்கம்
சிள்வண்டு, சுவர்க்கோழி,
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அலந்தலை உன்னத்து அம் கவடு பொருந்தி
சிதடி கரைய பெரு வறம் கூர்ந்து
நிலம் பைது அற்ற புலம் கெடு காலையும்
வாங்குபு தகைத்த கலப்பையர் ஆங்கண்
மன்றம் போந்து மறுகு சிறை பாடும்
வயிரிய மாக்கள் கடும் பசி நீங்க
பொன் செய் புனை இழை ஒலிப்ப பெரிது உவந்து
நெஞ்சு மலி உவகையர் உண்டு மலிந்து ஆட
சிறு மகிழானும் பெரும் கலம் வீசும்
போர் அடு தானை பொலம் தார் குட்டுவ
நின் நயந்து வருவேம் கண்டனம் புல் மிக்கு
வழங்குநர் அற்று என மருங்கு கெட தூர்ந்து
பெரும் கவின் அழிந்த ஆற்ற ஏறு புணர்ந்து
அண்ணல் மரையா அமர்ந்து இனிது உறையும்
விண் உயர் வைப்பின காடு ஆயின நின்
மைந்து மலி பெரும் புகழ் அறியார் மலைந்த
போர் எதிர் வேந்தர் தார் அழிந்து ஒராலின்
மருது இமிழ்ந்து ஓங்கிய நளி இரும் பரப்பின்
மணல் மலி பெரும் துறை ததைந்த காஞ்சியொடு
முருக்கு தாழ்பு எழிலிய நெருப்பு உறழ் அடைகரை
நந்து நாரையொடு செ வரி உகளும்
கழனி வாயில் பழன படப்பை
அழல் மருள் பூவின் தாமரை வளை_மகள்
குறாஅது மலர்ந்த ஆம்பல்
அறாஅ யாணர் அவர் அகன் தலை நாடே – பதி 23/2
காய்ந்துபோன உச்சியையுடைய உன்ன மரத்தின் பிரிவுபட்ட கிளையினில் இருந்து சிள்வண்டு ஒலிக்கும் அளவுக்குப் பெரிய வறட்சி உண்டாகி நிலம் பசுமை இல்லாமற்போன, விளைநிலங்கள் சீர்குலைந்த காலத்திலும் இழுத்துக் கட்டிய இசைக்கலங்களைக் கொண்ட பையினராய், அங்குள்ள ஊர்ப்பொதுவிடத்துக்குப் போய் தெருவின் இரண்டு பக்கங்களிலும் பாடுகின்ற கூத்தரும் பாணருமான மக்களின் கடும் பசி நீங்க, அவர்களின் பொன்னால் செய்யப்பட்ட அழகிய அணிகலன்கள் ஒலிக்க, பெரிதும் உவந்து நெஞ்சு நிறைந்த மகிழ்ச்சியினராய், உண்டு கூட்டமாய் ஆட, சிறிதளவு கள்ளுண்ட மகிழ்ச்சியிலும் பெரும் செல்வத்தை வாரி வழங்கும் போரில் வெற்றிகொள்ளும் சேனைகளையுடைய பொன்னாலான மாலையைச் சூடிய குட்டுவனே! உன்னைக் காணவிரும்பி வந்த நாங்கள் கண்டோம், புற்கள் மிகுந்து, நடமாடுவோர் இல்லாமற்போனதால் ஓரங்கள் உருக்குலைந்து தூர்ந்துபோய் தமது பெரும் அழகு அழிந்துபோன வழிகளில் காளைகளைக் கூடி, பெரிய காட்டுப்பசுக்கள் அமைதியாகவும் இனிமையாகவும் வாழ்ந்திருக்கும் அளவுக்கு, வானளாவ உயர்ந்த மாடங்களைக் கொண்ட ஊர்கள் காட்டுநிலம் ஆயின; உன் வலிமையால் நிறைந்த பெரும் புகழை அறியாதவராய், உன்னோடு பகைகொண்டு போரிட எதிர்த்துவந்த வேந்தர், உன் முன்னணிப்படைக்கே தோற்று ஓடிப்போனதால்; மருதமரங்கள், தம்மிடம் பல பறவைகள் தங்கி ஒலிக்கும்படி நிற்கின்ற செறிவான பெரிய பரப்பிடமாகிய, மணல் நிறைந்த பெரிய ஆற்றுத்துறையில் நெருங்கிவளர்ந்த காஞ்சி மரங்களோடு முருக்க மரங்களினின்று உதிர்ந்த பூக்களால் நெருப்பைப்போன்று தோன்றும் மணல் அடைத்த கரையில் நன்கு வளர்ந்த நாரையோடு, செவ்வரி நாரையும் ஓடித்திரியும் கழனிகளுக்கு வாயிலாக அமைந்த பொய்கையைச் சார்ந்த விளைநிலங்களில் நெருப்பினைப் போன்ற பூவையுடைய தாமரையும், வளையணிந்த பெண் பறிக்காமல் விட்டுவிட்ட ஆம்பலும் உள்ள, அற்றுப்போகாத புதுவருவாயையுடைய பகைவரின் அகன்ற இடத்தையுடைய நாடு
ஆடுக விறலியர் பாடுக பரிசிலர்
வெண் தோட்டு அசைத்த ஒண் பூ குவளையர்
வாள் முகம் பொறித்த மாண் வரி யாக்கையர்
செல் உறழ் மறவர் தம் கொல் படை தரீஇயர்
இன்று இனிது நுகர்ந்தனம் ஆயின் நாளை
மண் புனை இஞ்சி மதில் கடந்து அல்லது
உண்குவம் அல்லேம் புகா என கூறி
கண்ணி கண்ணிய வயவர் பெருமகன்
பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின்
எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை
ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை
வானவரம்பன் என்ப கானத்து
கறங்கு இசை சிதடி பொரி அரை பொருந்திய
சிறியிலை வேலம் பெரிய தோன்றும்
புன்_புலம் வித்தும் வன் கை வினைஞர்
சீர் உடை பல் பகடு ஒலிப்ப பூட்டி
நாஞ்சில் ஆடிய கொழு வழி மருங்கின்
அலங்கு கதிர் திரு மணி பெறூஉம்
அகன் கண் வைப்பின் நாடு கிழவோனே – பதி 58/13
ஆடுவீர்களாக விறலியர்களே! பாடுவீர்களாக பரிசில் மாக்களே! வெண்மையான பனந்தோட்டில் கட்டிய ஒளிவிடும் குவளைப்பூவையுடையவராய், வாளின் கூரிய பக்கம் ஏற்படுத்திய சிறப்புப் பொருந்திய தழும்பினைக் கொண்ட உடம்பினராய், இடியைப் போன்ற மறவர்கள் தம்முடைய கொல்லுகின்ற ஆயுதங்களைக் கொண்டுவர, இன்று இனிதே நுகர்ந்தோம் என்றாலும், நாளை மண்ணால் கட்டப்பட்ட கோட்டைமதில்களைக் கடந்தபின் அன்றி உண்ண மாட்டோம் உணவினை என்று கூறி போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன், தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும், பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும், உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற, வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர்; காட்டினில் ஒலிக்கின்ற ஓசையையுடைய சிள்வண்டுகள் பொரிப்பொரியான அடிப்பகுதியில் தங்கியிருக்கும் சிறிய இலைகளைக் கொண்ட வேல மரங்கள் மிகுதியாய் இருக்கும் புன்செய் நிலங்களை உழுது விதைக்கும் வலிமையான கைகளையுடைய உழவர்கள் சிறப்பினை உடைய பல காளைகள் ஒலியெழுப்ப அவற்றைக் கலப்பையில் பூட்டி உழுது கலப்பையின் கொழுச் சென்ற சாலின் பக்கத்தில் அசைகின்ற கதிர்களில் அழகிய தானிய மணிகளைப் பெறுகின்ற அகன்ற இடங்களைக் கொண்ட ஊர்களையுடைய நாட்டுக்குரியவன்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்