Skip to content
நெடுமான் அஞ்சி

நெடுமான் அஞ்சி என்பவன் ஒரு சிற்றரசன்

1. சொல் பொருள்

‌(பெ) அதியமான் நெடுமான் அஞ்சி, ஒரு சிற்றரசன்

2. சொல் பொருள் விளக்கம்

சதியபுத்திரர்கள்

மௌரிய அரசர் அசோகர் தனது 32 கல்வெட்டுகளில், இரண்டு கல்வெட்டுகளில் மட்டுமே தனது எல்லைக்கப்பாலுள்ள அரசுகளின் பெயர்களைக் குறிப்பிடுகின்றார். இரண்டிலும் (2வது, 13வது) தமிழரசுகளின் பெயர்கள் வருகின்றன. 2வது கல்வெட்டில் மனிதர்களுக்கும், விலங்குகளுக்குமான மருத்துவப் பணிகளை எந்தெந்த பகுதிகளில் செய்து வருகிறேன் என்று சொல்ல வந்த அசோகர், சோழர்கள், பாண்டியர்கள், சத்ய புத்திரர்கள், கேரள புத்திரர்கள் ஆகிய தமிழக நாடுகளின் நான்கு அரசகுலப் பெயர்களையும் முதலில் சொல்லிவிட்டு, அதன் பின்னரே கிரேக்க அரசர்களின் பெயர்களைக் குறிப்பிடுகிறார். 13வது கல்வெட்டில், தர்ம நெறி எந்தெந்த நாடுகளில் பரவ வேண்டும் என்று சொல்ல வந்த அசோகர் முதலில் கிரேக்க அரசர்களின் பெயர்களையும், பின்னர் சோழர்கள், பாண்டியர்கள் என இரு தமிழரசுகளின் பெயர்களையும் குறிப்பிடுகிறார்.

பண்டைய தமிழக அரசுகளை, அசோகர் தனது கல்வெட்டுக்களில் சோழர்கள், பாண்டியர்கள், சத்தியபுத்திரர்கள், கேரள புத்திரர்கள் என பன்மையில்தான் குறிப்பிட்டுள்ளார். அதியமான் மரபினர் மௌரியர்களை எதிர்த்து தொடர்ந்து இறுதிவரை தாக்குதல் நடத்தினர். அதன் காரணமாகவே அசோகரின் கல்வெட்டில், அவர்களின் அரச குல வடமொழிப் (பிராகிருதம்) பெயரில் ‘சத்திய புத்திரர்கள்’ என மூவேந்தர்களுக்கு இணையாக இடம் பெற்றனர் எனலாம்.

ஐம்பை (கி. பி – 1) ஸதியபதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்தபளி

சதியபுதோ அதியந்நெடுமான்அஞ்சி ஈத்தபாளி”

ஜம்பையின் தொன்மையை பறைசாற்றும் வண்ணம் அவ்வூரைச் சுற்றி உள்ள குன்றுகளில் பல கல்வெட்டுகள் இருக்கின்றன. அதில் ஒன்றில் 2000 ஆண்டுகளுக்கு முந்தைய ஔவைக்கு நெல்லிக்கனி கொடுத்த அதியமானின் கல்வெட்டு கண்டறியப்பட்டுள்ளது. சதியபுதோ அதியந் நெடுமாந் அஞ்சி ஈத்த பாளி என்ற எழுதப்பட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த அதியனின் இந்த கல்வெட்டு. அசோகரின் நான்கு கல்வெட்டுகளில் ‘சதியபுத’ என்ற பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது.

சத்திய புத்திரா என்போர் அதியமான் தான் என தெளிவுபட எடுத்துரைக்கும் சான்றாக அமைகிறது ஜம்பையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டு. அதியமான் தகடூரை (தர்மபுரி) தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்.

அதியமான், நெடுமான் அஞ்சி சேர நாட்டில் ஒரு பகுதியை ஆண்ட குறுநில மன்னன். இவன் அதியர் குலத்தைச் சார்ந்தவன் என்றும் மழவர் என்ற ஒரு கூட்டத்திற்குத் தலைவன் என்றும் கருதப்படுகிறான். அதியமான், சங்க காலத்தில் இருந்ததாகக் கருதப்படும் (கடையேழு) வள்ளல்களில் ஒருவன் என்று சிற்பாணாற்றுப்படை கூறுகிறது1. அதியமான் தன் அவைக்களத்தே புலவராக இருந்த அவ்வையார் என்ற பெண்பாற் புலவரிடம் மிகுந்த நட்பும் அன்பும் உடையவனாக இருந்தான். ஒரு சமயம், அதியமானுக்கு ஒரு அரிய நெல்லிக்கனி கிடைத்தது. அதை உண்பவர்கள் நீடித்து வாழமுடியும் என்ற கருத்து நிலவி இருந்தது. அந்நெல்லிக்கனியின் ஆற்றலை அறிந்திருந்தும், அதியமான் அதைத் தான் உண்ணாமல் அவ்வையாருக்கு அளித்து அவரை உண்பித்தான். அதியமான் கொடையிலும், வீரத்திலும், போர் செய்யும் ஆற்றலிலும் சிறந்தவன். பல போர்களில் வெற்றி பெற்றிருந்தாலும், சேரமான் பெருஞ்சேரல் இரும்பொறை என்ற சேர மன்னனுடன் நடந்த போரில் அதியமான் தோல்வியுற்று இறந்தான். அதியமானின் காலம் கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று வரலாற்றுக் குறிப்புகள் கூறுகின்றன.

அவ்வையார் மற்றும் பரணர், பெருஞ்சித்திரனார், பொன்முடியார், அரிசில் கிழார் என்னும் புலவர்கள் அதியமானைப் புகழ்ந்து பாடிய 26 பாடல்கள் புறநானூற்றில் உள்ளன.

முதன்முதலாய்த் தமிழகத்திற்குக் கரும்பை அறிமுகம் செய்தவர்கள் அதியமான்கள்.

அதியமான் நெடுமான் அஞ்சிக்கு நடுகல் நடப்பட்டதை ஒளவையார் கீழே உள்ளவாறு பாடுகிறார்

நடுகற் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ (புறம் 232)

அதியமான் குறித்து பாடிய புலவர்கள்:
1.ஔவையார்
2.பரணர்
3.மாமூலனார்
4.பெருஞ்சித்திரணார்
5.காப்பியாற்று காப்பியனார்
6.அரிசில் கிழார்
7.நக்கீரர்
8.தாயங்கணார்
9.இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்
10.அஞ்சியத்தை மகள் நாகையார்

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

a chieftain

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

கடு மான் தோன்றல் நெடுமான்அஞ்சி
தன் அறியலன்-கொல் என் அறியலன்-கொல் – புறம் 206/6,7

விரைந்த குதிரையையுடைய குருசிலாகிய நெடுமான் அஞ்சி
தன் தரத்தை அறியாதவன்போலும், என் தரத்தையும் அறியான் போலும்
இவன் அதியமான் நெடுமான் அஞ்சி, அதிகன் என்றும் அழைக்கப்படுகிறான்.
கொங்குநாட்டில் தருமபுரி எனப்படும் தகடூரிலிருந்து ஆட்சிபுரிந்து வந்தான்.
தன்னைத் தேடிவந்த புலவர் ஔவையாருக்கு உடனே பரிசில் தந்தால், அவர் உடனே
சென்றுவிடுவார் என்றெண்ணி, பரில் கொடுக்கத் தாமதித்தான். இதனைத் தவறாகப்
புரிந்துகொண்ட ஔவையார் சினந்து இவ்வாறு பாடுகிறார். பின்னர் இருவரும் நெருங்கிய
நண்பராயினர்.

கடும் பகட்டு யானை நெடுமான்_அஞ்சி – நற் 381/7
மிகுந்த பெருமிதத்தையும் கொண்ட யானைப் படையையுடைய நெடுமான் அஞ்சி

கடும் பகட்டு யானை நெடும் தேர் அஞ்சி/கொன் முனை இரவு ஊர் போல – குறு 91/6,7
கடுமையும் மிடுக்கும் உள்ள யானைகளையும், நீண்ட தேரினையும் உடைய அதிகமானின்

சினம் மிகு முன்பின் வாம் மான் அஞ்சி/இனம் கொண்டு ஒளிக்கும் அஞ்சுவரு கவலை – அகம் 115/14,15
சினம் மிக்க ஆற்றலுடன் தாவிப்பாயும் குதிரைப்படைகளையும் உடைய அதிகமான் நெடுமான் அஞ்சி

கடும் பரி புரவி நெடும் தேர் அஞ்சி/நல் இசை நிறுத்த நயம் வரு பனுவல் – அகம் 352/12,13
கடும் வேகத்தினையுடைய குதிரைகள் பூட்டிய நீண்ட தேரினையுடைய அதியமான் அஞ்சியின்

நெடு நெறி குதிரை கூர் வேல் அஞ்சி/கடு முனை அலைத்த கொடு வில் ஆடவர் – அகம் 372/9,10
நீண்ட வழியினையுடைய குதிரைமலைத் தலைவனும், கூரிய வேலை உடையவனும் ஆகிய அஞ்சியின்

நெடுமான் அஞ்சி நீ அருளல் மாறே – புறம் 92/6
நெடுமான் அஞ்சியே! உனக்கு என்மீது அருள்சுரப்பதால் – (என் வாய்ச் சொல்லும் அப்படிப்பட்டதே)

இழை அணி யானை இயல் தேர் அஞ்சி/அதியமான் பரிசில் பெறூஉம் காலம் – புறம் 101/4,5
அணிகலன்களால் அலங்கரிக்கப்பட்ட யானையையும், இலக்கணம் அமைந்த தேரினையும் உடைய அஞ்சியாகிய
அதியமான் நமக்குப் பரிசில் தரும் காலத்தை

பகை புலத்தோனே பல் வேல் அஞ்சி/பொழுது இடைப்படாஅ புலரா மண்டை – புறம் 103/8,9
பகை நாட்டில் இருக்கின்றான் பல வேல்களையுடைய அஞ்சி என்பான்,

மடவர் மகிழ் துணை நெடுமான்_அஞ்சி – புறம் 315/3
அறிவில்லாதவர் மகிழக்கூடிய துணையாக இருப்பான்; நெடுமான் அஞ்சி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *