சொல் பொருள்
1. (வி) 1. மலர், 2. தோன்று, appear, 3. வளம்பெறு, பொலிவடை, 4. மின்னு, 5. இருதுவாகு, மாதவிடாய் கொள் 6. சிறந்து விளங்கு, நிறைந்து விளங்கு, 7. பல் பொருள்
2. (பெ) 1. மலர், 2. பூவேலைப்பாடு, 3. புகர், யானையின் நெற்றிப்புள்ளி, 4. வனப்பு, பொலிவு, 5. மென்மை
போகம்
பூ என்பது, ஒரு விளைவு
சொல் பொருள் விளக்கம்
இவ் வோரெழுத்து ஒரு சொல் ஒரு விளைவு அல்லது போகம் என்னும் உழவர் வழக்குச் சொல்லாக நெல்லை வழக்கில் உள்ளது. ஓராண்டில் ஒருமுறை விளைதல், இருமுறை விளைதல் என்பவற்றை ஒரு போகம், இருபோகம் என்பர், தஞ்சையை முப்போகம் என்றும் முப் பூ என்றும் சுட்டுவர். பூ என்பது, ஒரு விளைவு.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
blossom, bloom, flower, appear, manifest, flourish, prosper, shine, menstruate, be excellent, be full, different shades of meaning, flower, floral design, Spots on an elephant’s forehead, Richness, fertility, flourishing condition, softness, tenderness
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண் போல் நெய்தல் போர்வில் பூக்கும் திண் தேர் பொறையன் தொண்டி – நற் 8/8,9 கண் போன்ற நெய்தல் பூ, நெற்போரில் பூத்திருக்கும் திண்ணிய தேரைக்கொண்ட பொறையனின் தொண்டிப் பட்டினத்துச் காழ் சோர் முது சுவர் கணம் சிதல் அரித்த பூழி பூத்த புழல் காளாம்பி – சிறு 133,134 (ஊடு)கழிகள் (ஆக்கையற்று)விழுகின்ற பழைய சுவரிடத்தெழுந்த திரளான கரையான் அரித்துக் குவித்த மண்துகள்களில் தோன்றின – உட்துளை(கொண்ட) காளான்: பல் மீன் நாப்பண் திங்கள் போல பூத்த சுற்றமொடு பொலிந்து தோன்றலை – பதி 90/17,18 பல விண்மீன்களின் நடுவே விளங்கும் திங்களைப் போல வளம்பெற்ற சுற்றத்தாரோடு பொலிவுடன் திகழ்கிறாய்; மலைந்தோர் தேஎம் மன்றம் பாழ்பட நயந்தோர் தேஎம் நன் பொன் பூப்ப – பெரும் 423,424 (தன்னை)எதிர்ப்போரின் ஊர்களிலுள்ள (மக்கள் கூடும்)பொதுவிடங்கள் பாழ்படவும், (தன்னிடம்)நயந்துகொண்டவர் நாடுகள் நல்ல பொன் பூத்துத் திகழவும், மீன் ஆரம் பூத்த வியன் கங்கை நந்திய வானம் பெயர்ந்த மருங்கு ஒத்தல் எஞ்ஞான்றும் – பரி 16/36,37 விண்மீன்கள் முத்தாரமாய் மின்னுகின்ற அகன்ற ஆகாய கங்கை பெருக்கெடுத்தோடும் வானம் பெயர்ந்து இங்கே பக்கத்தில் வந்தது போன்றிருப்பது எந்நாளுமே மீன் பூத்து அவிர் வரும் அந்தி வான் விசும்பு போல் – கலி 103/13 விண்மீன்கள் தோன்றி ஒளிசிந்தும் அந்திக்காலத்து மேகத்தையுடைய சிவந்த ஆகாயம் போன்று பூத்தனள் நீங்கு என பொய் ஆற்றால் தோழியர் – பரி 16/24 அவள் பூப்பெய்தியிருக்கிறாள், நீங்குக என்று தோழியர் பொய்யாகக் கூறினராக, புல வரை அறியாத புகழ் பூத்த கடம்பு அமர்ந்து – பரி 19/2 அறிவின் எல்லையால் அறியப்படாத புகழ் நிறைந்த கடம்ப மரத்தில் பொருந்தி, ஐ வளம் பூத்த அணி திகழ் குன்றின் மேல் மை வளம் பூத்த மலர் ஏர் மழை கண்ணார் கை வளம் பூத்த வடுவொடு காணாய் நீ மொய் வளம் பூத்த முயக்கம் யாம் கைப்படுத்தேம் மெய் வளம் பூத்த விழை_தகு பொன் அணி நைவளம் பூத்த நரம்பு இயை சீர் பொய் வளம் பூத்தன பாணா நின் பாட்டு – பரி 18/15-21 ஐந்து வளங்களும் பொலிந்து விளங்கும் அழகு பொருந்திய திருப்பரங்குன்றத்தில், நிரம்ப மை தீட்டப்பெற்ற, மலரின் அழகு பொருந்திய, குளிர்ச்சியையுடைய கண்களையுடைய மகளிரின் கைநகங்கள் ஏற்படுத்திய வடுக்களைப் பார்க்கவில்லையா நீ? அந்தப் பரத்தையரின் இறுகல் மிகுந்த முயக்கத்தை நாம் நன்கு அறிந்துகொண்டோம், மேனி மிகவும் பொலிய விரும்பத்தகுந்த பொன் அணிகலன்களை அணிந்திருப்பவனே! நைவளம் என்னும் பண் எழுகின்ற யாழ்நரம்புக்கு இயைந்த தாளத்துடன், பொய்யை மிகுதியாய்த் தோற்றுவிக்கிறது, பாணனே! உன் பாட்டு; நிலம் பூத்த மரம் மிசை நிமிர்பு ஆலும் குயில் எள்ள நலம் பூத்த நிறம் சாய நம்மையோ மறந்தைக்க கலம் பூத்த அணியவர் காரிகை மகிழ் செய்ய புலம் பூத்து புகழ்பு ஆனா கூடலும் உள்ளார்-கொல் – கலி 27/9-12 நிலத்திற்கு அழகுசெய்யும் மரத்தின் மேலிருந்து நிமிர்ந்து கூவும் குயில்கள் என்னை எள்ளி நகையாட, நலம் சிறந்த என் மேனியழகு தன் பொலிவு குன்ற, நம்மைத்தான் அவர் மறந்துவிட்டுப்போகட்டும், அணிகளால் அழகுபெற்ற மகளிர் கண்ணுக்கு இனிதாய்த் தோன்றி மகிழ்ச்சியூட்ட, நாடே பொலிவுபெறுகின்ற, புகழ்ந்து முடியாத கூடல்விழாவையும் அவர் நினைத்துப்பாராரோ? புன் கொடி முசுண்டை பொறி புற வான் பூ பொன் போல் பீரமொடு புதல்_புதல் மலர – நெடு 13,14 புல்லிய கொடியையுடைய முசுட்டையில் திரண்ட புறத்தையுடைய வெண்ணிறப் பூ பொன் போன்ற (நிறமுள்ள)பீர்க்குடன் புதர்கள்தோறும் மலர, கோபத்து அன்ன தோயா பூ துகில் – திரு 15 தம்பலப்பூச்சியின் செந்நிறத்தை ஒத்த, சாயம் தோய்க்கப்படாத பூவேலைப்பாடமைந்த கிலினையும், மா முக முசு கலை பனிப்ப பூ நுதல் இரும் பிடி குளிர்ப்ப வீசி – திரு 303,304 கரிய முகத்தையுடைய முசுக்கலைகளும் நடுங்க, புகரை அணிந்த மத்தகத்தையுடைய பெரிய பிடியானை குளிரும்படி வீசி மயிர் குறை கருவி மாண் கடை அன்ன பூ குழை ஊசல் பொறை சால் காதின் – பொரு 29,30 பொலிவினையுடைய மகரக்குழையின் அசைவினைப் பொறுத்தல் அமைந்ததும் ஆகிய காதினையும், உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து புகர் வாய் குழிசி பூ சுமட்டு இரீஇ நாள் மோர் மாறும் நன் மா மேனி – பெரும் 158-160 உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, (தயிர்)புள்ளிபுள்ளியாகத் தெரிந்த வாயையுடைய மோர்ப்பானையை மெல்லிய சுமட்டின் மேல் வைத்து, அன்றைய மோரை விற்கும், நல்ல மாமை நிறத்தையுடைய மேனியையும்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்