Skip to content

சொல் பொருள்

(வி) 1. நகர், 2. பரவு, 3. மெல்லச் செல், 4. வண்டி, தேர் ஆகியன செல், 5. ஏறிச்செல், 6. (வாகனத்தைச்) செலுத்து,  7. அமைந்திரு, 8. (நீர்)பாய்

2. (பெ) 1. மனிதர் கூடிவாழும் இடம், 2. ஊரில் வாழும் மக்கள்,

சொல் பொருள் விளக்கம்

1. நகர்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

move; creep, as an infant; crawl, as a snake, spread, circulate, as blood; to extend over a surface, as spots on the skin, move slowly, (cart or chariots)run, ride, drive a vehicle, dwell, abide, flow as water, dwelling place for people, resident population

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

விரி கதிர் மண்டிலம் வியல் விசும்பு ஊர்தர – கலி 71/1

விரிகின்ற கதிர்களையுடைய இளஞாயிறு அகன்ற விசும்பில் எழுந்து மேலே நகர்ந்துவர

கொல்லை நெடு வழி கோபம் ஊரவும் – சிறு 168

கொல்லையிலுள்ள நெடிய வழியில் (இந்திர)கோபம்(என்னும் தாம்பலப்பூச்சி) ஊர்ந்து செல்லவும்

பாம்பு ஊர் மதியின் நுதல் ஒளி கரப்பவும் – நற் 128/2

பாம்பு படர்ந்த திங்களைப் போல நெற்றியின் ஒளி குன்றவும்

கை வளை நெகிழ்தலும் மெய் பசப்பு ஊர்தலும் – குறு 371/1

கைவளையல்கள் நெகிழ்ந்துபோதலையும், மேனியில் பசலை பரவுதலையும்

நெகிழ்ந்து உகு நறும் பழம் விளைந்த தேறல்
நீர் செத்து அயின்ற தோகை வியல் ஊர்
சாறு கொள் ஆங்கண் விழவுக்களம் நந்தி
அரி கூட்டு இன் இயம் கறங்க ஆடுமகள்
கயிறு ஊர் பாணியின் தளரும் சாரல் – குறி 190-194

(நன்கு பழுத்து)கட்டு விட்டு உதிர்ந்த நறிய பழத்தில் உண்டான தெளிந்த கள்ளை
நீரென்று கருதிப் பருகிய மயில் — அகன்ற ஊர்களில்
விழாக் கொள்ளுதற்குரிய அவ்விடங்களில் விழாக்களத்தில் மிகுதியாக
அரித்தெழும் ஓசையைக் கூட்டி ஒலிக்கும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க, (கழைக்கூத்து)ஆடுகின்ற பெண்
கயிற்றில் நடக்கும் செயற்பாங்கைப் போல் — தளர்ந்த நடை நடக்கும் மலைச்சாரல்களில்

நன்னராளர் கூடு கொள் இன்னியம்
தேர் ஊர் தெருவில் ததும்பும்
ஊர் இழந்தன்று தன் வீழ்வுறு பொருளே – அகம் 189/13-15

நல்ல பாணர்களது ஒன்றுகூடி ஒலிக்கும் வாச்சியங்கள்
தேர் ஓடும் தெருக்களில் அறாது ஒலிக்கும்
இவ் ஊரானது தனது விருப்பம் மிக்கதொரு பொருளை இழந்ததாயிற்று

விறல் வெய்யோன் ஊர் மயில் வேல் நிழல் நோக்கி – பரி 8/67

வெற்றியையே விரும்பும் முருகப்பெருமான் ஏறிச் செல்லும் மயில், அவனது வேலின் ஒளி ஆகிய இவற்றைக் குறித்து,

வேந்து ஊர் யானை ஏந்து முகத்ததுவே – புறம் 308/5

வேந்தன் ஏறிவந்த யானையின் உயர்ந்த முகத்தில் தைத்து

வங்க பாண்டியில் திண் தேர் ஊரவும் – பரி 20/17

வண்டிக்குரிய மாடுகளைப் பூட்டிக்கொண்டு திண்ணிய தேரைச் செலுத்தவும்,

வல் விரைந்து ஊர்-மதி நல் வலம் பெறுந – அகம் 234/9

மிக விரைந்து செலுத்துவாயாக, தேர் செலுத்துதலில் நல்ல வெற்றியுடைய பாகனே!

சிறு பாசடைய செப்பு ஊர் நெய்தல் – நற் 23/7

சிறிய பசிய இலைகளைக் கொண்ட செப்பம் அமைந்த நெய்தலின்

நீர் ஊர் அரவத்தால் துயில் உணர்பு எழீஇ – பரி 20/15

நீர் மோதிச்சென்று பாயும் அரவத்தால் உறக்கம் கலைந்து எழுந்து

அரும் கடி வரைப்பின் ஊர் கவின் அழிய
பெரும் பாழ் செய்தும் அமையான் – பட் 269,270

அரிய காவலையுடைய மதிலையுடைய பகைவரின் ஊர்கள் அழகு அழியவும்,
பெரும் அழிவைச் செய்தும் மனநிறைவடையானாய்

ஏழ் ஊர் பொது வினைக்கு ஓர் ஊர் யாத்த
உலை வாங்கு மிதி தோல் போல – குறு 172/5,6

ஏழு ஊர்களிலுள்ள பொதுவான ஈயம்பூசும் தொழிலுக்கு ஓர் ஊரில் அமைக்கப்பட்ட
உலையில் மாட்டிய துருத்தியைப் போல

சேற்று நிலை முனைஇய செம் கண் காரான்
ஊர் மடி கங்குலில் நோன் தளை பரிந்து – அகம் 46/1,2

சேற்றில் நிற்பதை வெறுத்த சிவந்த கண்களையுடைய எருமை
ஊரார் உறங்கும் இருளில் தனது வலுவுள்ள கயிறை அறுத்துக்கொண்டு

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *