சொல் பொருள்
(வி) 1. ஆடு, 2. நகர், இடம்பெயர், விட்டு நீங்கு, 3. தங்கு, 4. கட்டு, பிணி, 5. வருத்து, 6. தளர், ஓய், 7. இளைப்பாறு, 8. மெல்லச்செல், 9. கிட, 10. தட்டு,
2. (பெ) 1. தளர்ச்சி, 2. மாடுகள் மீட்டுமெல்லும் இரை
அசை : எழுத்து, அசைத்து இசை கோடலின் அசையே. (யா.வி. 1.)
சொல் பொருள் விளக்கம்
முகட்டில் இருந்து கயிறு தொங்கவிட்டுப் பலகை கட்டப்பட்டது அசை. முகட்டில் இருந்து கயிறு தொங்கவிட்டுப் பலகை கட்டப்பட்டது அசை எனப்படும். அசைவதால் பெற்ற பெயர் அது. ஊஞ்சல் வேறு; அசை வேறு. அசையில் படுக்கை தலையணை முதலியவற்றை வைப்பது வழக்கம். அட்டளை சுவரில் நிலைபெற்ற தாங்குபலகை; இது தொங்க விட்ட பலகை. முகவை, நெல்லை வழக்கு இது.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
sway, move, shift, stay, fasten, be fastened, afflict, be weary, grow feeble, rest, go slowly, lie in a place, knock (at the door), weariness, cud
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அதிரல் பூத்த ஆடு கொடி படாஅர் சிதர் வரல் அசை வளிக்கு அசைவந்து ஆங்கு – முல் 51,52 காட்டு மல்லிகை பூத்த அசைகின்ற கொடியினையுடைய புதர்கள் துவலை தூறலுடன் வரும் அசைந்த காற்றிற்கு அசைந்தாற்போல, அசையா நாற்றம் அசை வளி பகர – அகம் 272/9 விட்டு நீங்காத மணத்தினை அசையும் காற்று வெளிப்படுத்த அஞ்சு_வழி அஞ்சாது அசை_வழி அசைஇ – நற் 76/4 அஞ்சவேண்டியஇடத்தும் அஞ்சாமல், தங்கவேண்டிய நேரத்தில் தங்கி நடுங்கு சுவல் அசைத்த கையள் – முல் 14 குளிரால் நடுங்குகின்ற தோளின்மேலே கட்டின கையளாய் நின்று தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய – அகம் 54/7 கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்துக் குறைக்க கொலை உழுவை தோல் அசைஇ கொன்றை தார் சுவல் புரள – கலி 1/11 கொலைக்குணமுடைய புலியின் தோலைக் கட்டிக்கொண்டு, கொன்றை மாலை தோளில் அசைய, சாஅய் உயங்கு நாய் நாவின் நல் எழில் அசைஇ வயங்கு இழை உலறிய அடியின் – சிறு 16-18 ஓடியிளைத்து வருந்துகின்ற நாயின் நாக்கினுடைய நல்ல அழகினை(த் தனதாக) வருத்தி, ஒளிரும் அணிகலன்கள் (இல்லாது)பொலிவழிந்த அடியினையும்; தமனிய பொன் சிலம்பு ஒலிப்ப உயர் நிலை வான் தோய் மாடத்து வரி பந்து அசைஇ – பெரும் 332,333 செம்பொன்னால் செய்த சிலம்புகள் ஆரவாரிப்ப, மேல்நிலையாகிய வானத்தைத் தீண்டுகின்ற மாடத்திகண், நூலால் வரிதலையுடைய பந்தையடித்து இளைத்து இழை அணிந்து இயல்வரும் கொடுஞ்சி நெடும் தேர் வரை மருள் நெடு மணல் தவிர்த்தனிர் அசைஇ தங்கினிர் ஆயின் தவறோ தகைய – குறு 345/1-3 அணிகலன்கள் அணிந்து இயங்கிவரும் கொடுஞ்சியையுடைய நெடிய தேரை மலையைப் போன்ற நெடிய மணற்குவியலில் நிறுத்திவைத்து, இளைப்பாறித் தங்கியிருந்தால் அது தவறோ? தகைமையுடையவரே! கரும் கோட்டு எருமை கயிறு பரிந்து அசைஇ நெடும் கதிர் நெல்லின் நாள் மேயல் ஆரும் – ஐங் 95/1,2 கரிய கொம்பினையுடைய எருமை, தன்னைக் கட்டியிருக்கும் கயிற்றை அறுத்துக்கொண்டு சென்று, நீண்ட கதிர்களையுடைய நெற்பயிரை அன்றைக்கு உணவாக மேய்ந்து வயிற்றை நிரப்பும் – அசைஇ – சென்று – ஔவை.சு.து உரை, பொ.வே.சோ- உரை நலம் பெறு கலிங்கத்து குறங்கின் மிசை அசைஇயது ஒரு கை – திரு 109 செம்மைநிறம் பெற்ற ஆடையுடைய துடையின் மேலே கிடந்தது ஒரு கை செம் முகை அவிழ்ந்த முள் முதிர் முருக்கின் சிதர் ஆர் செம்மல் தாஅய் மதர் எழில் மாண் இழை மகளிர் பூண் உடை முலையின் முகை பிணி அவிழ்ந்த கோங்கமொடு அசைஇ – அகம் 99/2-5 சிவந்த முகை விரிந்த முள்நிறைந்த முருக்க மலராகிய வண்டு சூழ்ந்த வாடிய பூக்கள் பரந்து, கதிர்த்த அழகினையும் மாண்புற்ற அணியினையுமுடைய மகளிரது பூண் அணிந்த முலையினைப் போன்ற முகைகள் அலர்ந்த கோங்கம் பூக்களொடு கூடிக்கிடக்க களையா நின் குறி வந்து எம் கதவம் சேர்ந்து அசைத்த கை வளையின் வாய் விடல் மாலை மகளிரை நோவேமோ – கலி 68/8,9 உன்னைக் காணாத கலக்கத்தைக் களைந்து, நீ வரச்சொன்ன இடத்துக்கு வந்து, எம் கதவை அடைந்து தட்டிய கைகளின் வளையல் ஓசையால் தம் வருகையைத் தெரிவிப்பதை வழக்கமாகக் கொள்ளும் அந்தப் பரத்தையரை நொந்துகொள்வோமோ மதவு உடை நாக்கொடு அசை வீட பருகி – அகம் 341/8 வலிமையுடைய நாவினால் தளர்ச்சி நீங்கக் குடித்து வியன் புலம் படர்ந்த பல் ஆ நெடு ஏறு மடலை மாண் நிழல் அசை விட – புறம் 339/1,2 அகன்ற புல்வெளியில் பரந்து மேய்ந்த பல ஆக்களோடு கூடிய நெடிய ஆனேறுகள் பூக்களையுடைய மரங்கள் பயந்த பெரிய நீழலில் தங்கி அசைபோட
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்