Skip to content
அயினி

அயினி என்றால் விரும்பி உண்ணும் சிறந்த உணவு

1. சொல் பொருள்

(பெ) 1. உணவு, சோறு, நீராகாரம், 2. அயனி என்பது பலா இனத்தைச் சேர்ந்த ஒரு மரம்.

2. சொல் பொருள் விளக்கம்

அயில் என்பதன் பொருள் விருப்பத்துடன் வேண்டுமளவு உண்ணுதல். அதனை அடியாகக் கொண்ட பெயற்சொல்லே அயினி.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

food, cooked rice, delicious food.

Artocarpus hirsutus, wild jack

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

பலா
அயினி

குதிரைக்கு மிகவும் பிடித்த உணவு கொள்ளு. ஆனால் அது கடற்கரை ஊரில் எவ்வாறு கிடைக்கும்? அங்கு உப்பை விற்று மாற்றாகக் கொண்டுவந்த நெல்தான் இருக்கும். அதனைக் குற்றி அவலாக்கி, அயினியாக வயிறார உண்ணத் தன் தலைவனின் குதிரைகளுக்குத் தருவேன் என்கிறாள் நெய்தல் தலைவி. மா என்பது இங்கு குதிரை. இவை விரும்பி உண்ணும் வகையில் அயினியாக அரிசி அவல் தருவேன் என்கிறாள் தலைவி.

உமணர் தந்த உப்பு நொடை நெல்லின்
அயினி மா இன்று அருந்த – நற் 254/7

உப்புவணிகர்கள் உப்பினை விற்று அதற்கு விலையாகப் பெற்ற நெல்லைக் குற்றிச் செய்த
உணவை உன் குதிரை இன்று உண்ண

அயினி
அயினி

தொண்டை நாட்டு நன்னனிடம் பரிசில் பெற்றுவரப் புறப்பட்டுச் செல்லும் ஒரு கூத்தர் கூட்டம், செல்லும் வழியில் பலவித
நிலங்களைக் கடந்து செல்கிறது. அக் கூட்டம் மருத நிலத்தைக் கடந்து செல்லும் வழியில் அவர்களுக்கு அங்கு கிடைக்கக்கூடிய மீன்குழம்புச் சோற்றைச் சுவைபட எடுத்தோதுகிறார் புலவர் பெருங்குன்றூர் பெருங்கௌசிகனார். மீனின் முள்ளைக் கழித்து ஆக்கின, கொழுப்பால் வெளுத்த நிறமுடையை துண்டுகளையுடைய வெள்ளிய சோற்றை வேண்டுமளவு அரசரின் துய்த்தலோடு (ராஜபோகம்) உண்ணலாம் என்று சொல்லவந்த புலவர் கூறுகிறார்

முள் அரித்து இயற்றிய வெள் அரி வெண்சோறு
வண்டுபடக் கமழும் தேம்பாய் கண்ணித்
திண் தேர் நன்னற்கும் அயினி சான்ம் எனக்
கண்டோர் மருளக் கடும்புடன் அருந்தி – மலைபடுகடாம் 465 – 468

சான்ம் என்பது சாலும் என்றதன் சுருக்கம். போதுமானதாக அமையும் என்று பொருள். அந்த உணவு தூய்மையாலும், சுவையாலும்,
தோற்றத்தாலும் உயர்ந்து அரசனாகிய நன்னனும் விரும்பி நிறைய உண்ணத்தக்கதாயிருக்கும் என்பது இதன் பொருள் என்பர்.

அயினி
அயினி

பால்விட்டு, அயினியும் இன்று அயின்றனனே வயின்வயின்– புறம் 77/8

பால்குடியை மறந்து, உணவும் இன்று உண்டான்

புது மண மகடூஉ அயினிய கடி நகர் – அகம் 141/14

புதிய மணமகள், பல்வேறு உணவுவகைகளையுடைய திருமண வீட்டில்

அயினி
அயினி

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *