Skip to content

சொல் பொருள்

1. (வி) கோபங்கொள், மாறுபடு,

2. (பெ) பகை, மாறுபாடு,

3. (பெ) உடம்பு, 

சொல் பொருள் விளக்கம்

(1) உடல் என்ற சொல்லும் உடு என்ற முதனிலையடியாகப் பிறந்தது. அந்த உயிருக்கு உடைபோலுள்ளது என்பது அதன் பொருள். உடையானது நைந்து போய் விட்டால் அதனை எறிந்துவிட்டுப் புதிய உடையை ஒருவன் உடுத்துக்கொள்வது போலவே, ஓருயிரானது தனது உடையாகியஉடலுக்கு மூப்புப்பருவம் என்னும் நைதல் ஏற்படுமானால் அதை நீக்கி வேறு புதிய உடலையெடுத்துக் கொள்கிறது. இவ்வாறு விதுரன் என்பான் , தனது தமையனாகிய திருதராட்டிரன் தன் மைந்தர்களாகிய துரியோதனன் முதலியோரை இழந்து துன்புறுங்காலை, அத்துன்பத்தைப் போக்குமுகத்தால்.

“நைந்த தூசினை நீக்கியோர் கோடிநண் ணியபோல்
வந்த மூப்பினை நீக்கியோர் சனனத்தில் மருவும்
இந்த வாறுமூப் பொரிந்தொழிந் தெடுத்திடும் சனனம்
அந்த மாதியை அறிந்தவ னேதன்னை அறிந்தோன்”

என்று கூறியதாக, அட்டாவதானம் அரங்கநாதக் கவிராயர், தாம் பாடிய பாரதத்தில் கூறுகின்றார். (கட்டுரைப் பொழில். 144.)

(2) உயிருடன் சேர்ந்தே இயங்குவது அல்லது உயிருடன் இருப்பது உடல் அல்லது உடம்பு; குஞ்சு பொரித்தபின் தொடர்பு நீங்கும் முட்டைக் கூடுபோல உயிரை விட்டு நீங்குவது குடம்பை அல்லது கூடு. உயிரை மேலாகப் பொதிந்திருப்பது மெய்; தோல் நரம்பு எலும்பு தசை அரத்தம் முதலிய ஏழுவகைத் தாதுக்களால் யாக்கப்பெற்றிருப்பது அல்லது முடையப்பட்டிருப்பது யாக்கை அல்லது முடை; உயிர் நீங்கியபின் கட்டை போலக் கிடந்து எரிவது அல்லது மண்ணொடு போவது கட்டை. (சொல். கட். 31.)

(3) உடல் உடம்பிற் கைகால் தலையற்ற நடுப்பகுதி; உடம்பு முழுவுடம்பு; உடக்கு உள்ளீடற்ற உடம்புக்கூடு; யாக்கை எழுவகைத் தாதுக்களாற் கட்டப்பட்டது. மெய் உயிரை மேலாகப் பொதிந்திருப்பது; மேனி உடம்பின் மேற்புறம். (சொல். கட். 40.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be angered, be variant, ill-will, enmity, body

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

உடன்று மேல் வந்த வம்ப மள்ளரை – புறம் 77/9

வெகுண்டு மேல் வந்த புதிய வீரரை

மற புலி உடலின் மான் கணம் உளவோ – புறம் 90/3

மறத்தையுடைய புலி சீறினால் எதிர்த்துநிற்கும் மான் கூட்டமுமுண்டோ?

உடல் அரும் துப்பின் ஒன்றுமொழி வேந்தரை – புறம் 25/5

பகைகொள்வதற்கு அரிய வலிமையையுடைய வஞ்சினங்கூறிய வேந்தரை

விடம் உடை அரவின் உடல் உயிர் உருங்கு உவணம் – பரி 4/42

நஞ்சை உடைய பாம்பின் உடலையும், உயிரையும் உண்ணும் கருடன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *