உளியம் என்பது கரடி
1. சொல் பொருள்
(பெ) கரடி
2. சொல் பொருள் விளக்கம்
உளியம் என்ற சொல் உளி போன்று நிலத்தைத் தோண்டுதற்கேற்ப அமைந்த நகத்தைக் குறித்துக் கரடிக்கு வழங்கியது தெளிவாகின்றது. நிலத்தைத் தோண்டும் உளியை உடையவனாய்க் கன்னமிடும் திருடனைக் குறித்துச் சிலப்பதிகாரத்திலும் மதுரைக் காஞ்சியிலும் ‘உளியன்’ என்ற சொல் வழங்கியது. இதிலிருந்து உளியம் என்று கரடிக்கு வழங்கியதன் பொருத்தம் நன்கு விளங்குகின்றது. (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 211.)
“குடாவடி யுளியம் பெருங்கல் விடரனைச் செறிய ( திருமுரு காற்றுப்படை 313-314 )” என்ற வரிகளில் பெரிய பாறைப் பிளப்புகளில் கரடி வாழ்வது குறிப்பிடப்பட்டிருக்கின்றது .– திருமுருகாற்றுப்படை , 312-4 . மேற்காட்டிய பாடலில் கரடியின் மயிர் விளக்கப்படுகின்றது . வெட்டிய பனைமரத்தின் புறத்தே காணப்படும் பனைமரக் கம்பிகளைச் செறும்புகள் என்பர் . அந்தச் செறும்புகளையொத்து கரடியின் மயிர் இருந்ததாகக் கூறியது பொருத்தமாகும் . ஐந்திணையெழுபது, 32 கரடியின் கூரிய நகங்களைப் பற்றி நற்றிணை 325 ஆம் பாடலிலும் “ முரவாய் வள்ளுகிர் ” ( Large and long claws ) என்று கூறப்படுகின்றது . கரடியின் முனை ஒடிந்த , தடித்த நகத்தைப்பற்றிச் சொல்லியிருப்பது கவனிக்கத் தக்கது.
இரவில் இரை தேடும் கரடியைப் பற்றிச் சங்க நூல்களில் பல பாடல்கள் குறிப்பிடுகின்றன . இரவில் தலைவியைக் காண வரும் தலைவனுக்கு வரக் கூடிய பல ஊறுகளில் இரை தேடி வரும் கரடியைக் கூறுவது சங்க நூல் வழக்கு. நடுநாளிலும் ( நற்றிணை , 125) அரை நாளிலும் (அகம் . 112 ) இரவிலும் (நற்றிணை , 336 ) பானாட் கங்குலிலும் கரடி இரை தேடுவதாகக் கூறப்பட்டுள்ளது .“நாளுலா எழுந்த கோள்வல் உளியம்” என்று அகநானூறு ( 81 ) விடியற்காலையில் வெளியே உலவும் கரடிகளைப் பற்றிக் கூறியிருக்கின்றது .சங்கப் பாடல்களில் கறையான்கள் கூட்டமாக ஒருங்கு முயன்றெடுத்த ஈரமான புற்றுக் குன்றுகளைக் கரடிகள் உடைடத்ததாகவும் , அகழ்ந்ததாகவும் , அழித்ததாகவும் கூறியிருப்பது சங்கப் புலவர்கள் நேரில் கண்டு கூறிய அரிய செய்தியாகும் .
இரைக்காகக் கறையான் புற்றைத் தோண்டுங்கால் கரடிக் குட்டி பாம்பை வாங்கி எடுத்ததாகக் கூறியிருப்பதை நோக்குக . கறையான் புற்றுகளில் பாம்புகள் வாழ்வதை இன்றும் காணலாம் .கறையான்களுக்குப் பாதுகாப்பாகப் பாம்பும் , பாம்புக்கு உறையுளாகக் கறையான் புற்றும் இருப்பதாக அறிஞர்கள் கூறுவர் . கரடியைப் பாம்பு கண்ட சித்தன் என்று கூறுவதற்கு அகநானூற்றிலே அடிப்படை இருக்கின் றது . பாம்பு வாழ்வதற்காகக் கறையான் புற்று உதவுவதால் பாம்புக்குத் தச்சன் என்று கறையானை அழைப்பர் .
கரடியைப்பற்றிச் சில பழமொழிகள் , பேச்சு வழக்குகள் தமிழ் நாட்டில் வழங்குகின்றன . முதிர்ந்த அனுபவம் காரணமாகத் தோன்றிய இவ்வழக்குகளில் அரிய உண்மைகளைக் காண்கிறோம் . திடீரென்று நம்பத்தகாத ஒரு செய்தியை ஒருவன் கூறினால் கரடி விடுகிறான் என்பர் . அதுபோலவே பூசை வேளையில் கரடி புகுந்தாற்போல என்றும் கூறுவர் .
பூசையில் ஓர் இடையூறு தோன்றினால் இந்தப் பழமொழி கூறப்படுகின்றது . இந்த வழக்குகள் கரடியின் ஒரு தனித்த குணத்தை அடிப்படையாகக் கொண்டு எழுந்தவை . கரடிக்குத் தன் அருகாமையில் உள்ள பொருட்களைக் காணும் சக்தி உண்டு . தொலைவில் உள்ள பொருட்களைக் காணச் சக்தி வாய்ந்த பார்வை கிடை மோப்ப சக்தியும் குறைவு .கரடிகள் தூங்கும் போதோ , ஓய்வெடுக்கும் மனிதர்கள் வருவதை , தலைப்படுவதைக் கரடி உடன் உணர்வதில்லை . திடீரென்று எதிர்ப்பட்ட மனிதனைக் கரடி தாக்கிவிடும் . கரடியும் எதிர்பாராது , மனிதனும் எதிர்பாராது தலைப்படுங்கால் கரடி தாக்கும் . கரடி மனிதனை கண்டால் ஓடிவிடும் . ஆனால் திடீரென்று கண்டால் தாக்கிவிடும் .
இதையே அடிப்படையாகக் கொண்டு பழமொழியும் வழக்கும் தோன்றின . கடவுள் போகிய கருந்தாட் கந்தத்து, கரடி காணப்பட்டதாகக் கூறியதிலிருந்து காட்டிலே வாழும் தெய்வத் திற்கு பூசையிடுங்கால் கரடி தோன்றி ஊறு விளைத் திருக்கலாம் . இக் காரணத்தால் பூசை வேளையில் கரடி புகுந்த பழமொழி தோன்றியிருக்கலாம் .
மலைபடுகடாம் ஊமை யெண்கின் “குடாவடிஉளியம்” என்று கூறுவதால் கரடியை ஊமையாகக் கருதியிருப்பது தெளிவு . உளியம் என்பது இன்னொரு சங்க நூற் பெயர்: ” நிலனகழ் உளியன் , நீலத் தானையன் ” என்ற சிலப்பதிகாரத்துக் கொலைக்களக் காதை வரிக்கு உரையெழுதுங்கால் நிலன் அகழ்தலால் உளியம் போன்றும் ” என்று அடியார்க்கு நல்லார் கூறினார் . உளியம் என்ற சொல் உளி போன்று நிலத்தைத் தோண்டுதற்கேற்ப அமைந்த நகத்தைக் குறித்துக் கரடிக்கு வழங்கியது தெளிவாகின்றது . நிலத்தைத் தோண்டும் உளியை உடையவனாய்க் கன்னமிடும் திருடனைக் குறித்துச் சிலப்பதிகாரத்திலும் மதுரைக் காஞ்சியிலும் உளியன் என்ற சொல் வழங்கியது . இதிலிருந்து உளியம் என்று கரடிக்கு வழங்கியதின் பொருத்தம் நன்கு விளங்குகின்றது .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
bear, melursus ursinus, sloth bear
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
குரூஉ மயிர் யாக்கை குடா அடி உளியம்
பெரும் கல் விடர் அளை செறிய கரும் கோட்டு– திரு 313,314
கரிய நிறத்தையுடைய மயிரினையுடைய உடம்பினையும் வளைந்த அடியினையுமுடைய கரடி
பெரிய கல் வெடித்த முழைஞ்சிலே சேர
நாள் உலா எழுந்த கோள் வல் உளியம்/ஓங்கு சினை இருப்பை தீம் பழம் முனையின் – அகம் 81/1,2
கொடு விரல் உளியம் கெண்டும் – அகம் 88/14
அளை செறி உழுவையும் ஆளியும் உளியமும்/புழல் கோட்டு ஆமான் புகல்வியும் களிறும் – குறி 252,253
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்