களி என்பது கேப்பங்களி, கம்மங்களி, உளுந்தங்களி
1. சொல் பொருள்
(பெ) 1. கேப்பங்களி, கம்மங்களி, உளுந்தங்களி 2. இறுகியப் பழச்சாறு, 3. களிமண்
(வி) 1. விளையாடு, 2. மகிழ்ச்சி அடை 3. வெறியாகு
2. சொல் பொருள் விளக்கம்
கேழ்வரகு எனப்படும் கேப்பையை மாவாகத் திரித்து, நீர் சேர்த்துப் பதமாகக் கிண்டினால் கிடைப்பது களி. களி கிண்டி உண்ணும் பழக்கம் பண்டையக் காலத்தில் தமிழகம் முழுவதும் காணப்பட்டது. சிறைக்கைதிகளின் உணவு கேப்பைக் களிதான். ‘சிறைக்குப் போய்விடுவாய்’ என்று எச்சரிக்க, ‘களிதின்னப் போகிறாய்’ என்பார்கள்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
juice, a food item indigenous to Tamil Nadu, enjoy, rave, play merrily
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
களி சுரும்பு அரற்றும் சுணங்கின் சுணங்கு பிதிர்ந்து – சிறு 24
கிளர்ச்சியுற்ற வண்டுகள் ஒலிக்கும் பூந்தாது போன்ற தேமல்களையும்; அப் பூந்தாதுகள் சிதறிக்கிடக்கும்
அவையா அரிசி அம் களி துழவை – பெரும் 275
அவிக்காத(நெல்லின்) அரிசி(பச்சரிசி)யை அழகிய களி(யாகத் துழாவி அட்ட) குழைசோற்றை
கள்ளின் களி நவில் கொடியொடு நன் பல – மது 372
கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல
கள்ளோர் களி நொடை நுவல இல்லோர் – மது 662
கள் விற்போர் களிப்பினையுடைய கள்ளிற்கு விலைசொல்ல, மகளிர்
இரும் களி பரந்த ஈர வெண் மணல் – நெடு 16
கரிய வண்டலின் சேறு பரந்த ஈரமான வெண்மை நிற மணலில்,
கள் களி செருக்கத்து அன்ன – நற் 35/11
கள்ளால் ஏற்பட்ட களிப்பின் செருக்கு குறைவது போல
கண் களி பெறூஉம் கவின் பெறு காலை – நற் 56/3
கண்கள் மகிழ்ச்சியடையும் அழகுபெற்ற பொழுதில்
இரு மடை கள்ளின் இன் களி செருக்கும் – நற் 59/5
பெரிய கலத்தில் கள்ளைப் பருகி அதன் மயக்கத்தில் செருக்கியிருக்கும்
கரும் களி ஈந்தின் வெண் புற களரி – நற் 126/2
கரிய களிபோன்ற கனியாகும் ஈத்த மரங்கள் மிகுந்த வெண்மையான புறத்தினையுடைய களர்நிலத்தில்
இரும் களி பிரசம் ஊத அவர் – நற் 311/10
மிகுந்த களிப்புடன் தேனீக்கள் ஒலியெழுப்ப, அவரின்
பால் ஆர் பசும் புனிறு தீரிய களி சிறந்து – நற் 393/3
பால் கொடுத்ததினால் பச்சைமேனியான ஈன்றணிமை தீர, மகிழ்ச்சி மிகுந்து
களி சுரும்பு அரற்றும் காமர் புதலின் – ஐங் 416/3
களிப்படைந்த சுரும்புகள் ஆரவாரிக்கும் அழகிய புதரோரத்தில்
இன் களி வழாஅ மென் சொல் அமர்ந்து – பதி 40/25
இனிய களிப்பால் வழுவாத மெல்லிய சொற்களை விருப்பத்துடன் பேசி
உழவர் களி தூங்க முழவு பணை முரல – பரி 7/16
உழவர்கள் மகிழ்ச்சியால் கூத்தாட, முழவுகளும், பெரும் முரசுகளும் முழங்க,
காமம் கனைந்து எழ கண்ணின் களி எழ – பரி 10/63
காம உணர்வு மிகுந்து எழ, அதனால் கண்ணில் வெறி தோன்ற,
கள்ளின் களி எழ காத்த ஆங்கு அலர் அஞ்சி – பரி 10/65
கள்ளுண்டதால் களிப்பு மிகுந்து எழ, அதைக் கட்டுப்படுத்துவது போன்றிருந்தது; ஆனால் ஊராரின் பேச்சுக்கு அஞ்சி,
கரப்பார் களி மதரும் போன்ம் – பரி 10/68
தம்முள் மறைக்கும் கள்வெறியைப் போன்றது, முன்னவர் கொண்ட காமவெறி.
பாகர் இறை வழை மது நுகர்பு களி பரந்து – பரி 11/66
பாகு தங்கிய இளம் கள்ளைப் பருகி, களிப்பு மிகுந்து,
களி நாள் அரங்கின் அணி நலம் புரையும் – பரி 16/13
மகிழ்ச்சிமிக்க நாளில் இயற்றப்பட்ட ஆடலரங்கின் ஒப்பனைசெய்யப்பட்ட அழகினைப் போன்று விளங்கின;
மகிழ களி பட்ட தேன் தேறல் மாற்றி – பரி 16/28
அவன் மகிழும்படி, களிப்பு மிக்க தேனால் சமைக்கப்பட்ட தேறலை அவனுக்குத் தர, அவன் அதனை மறுத்து,
காதலாய் நின் இயல் களவு எண்ணி களி மகிழ் – பரி 18/11
“காதலியே! உன்னுடைய மேனிவனப்பைக் களவாடிவிட்டதாக எண்ணிக் களிப்புற்றதாய் மகிழ்ந்து
காரிகை நீர் ஏர் வயல் காம களி நாஞ்சில் – பரி 20/53
பெண்ணின் தன்மையைக் கொண்ட அழகு என்னும் வயலில், காமவெறியாகிய கலப்பையைக் கட்டி
களி திகழ் கடாஅத்த கடும் களிறு அகத்தவா – கலி 25/5
கிளர்ச்சியூட்டும் மதநீரைச் சொரிகின்ற, விரைந்து சுழலும் களிறுகள் உள்ளே அகப்படுக்கொள்ள
களி தட்ப வந்த இ கவின் காண இயைந்ததை – கலி 66/20
காம வேட்கை சிறிது தணிய, இங்கு வந்த காட்சியின் அழகைக் காண் நேர்ந்தது.
களி பட்டார் கமழ் கோதை கயம் பட்ட உருவின் மேல் – கலி 72/19
உன்னுடன் கூடிக் களித்த பரத்தையரின் மணங்கமழும் மாலை அழுந்தியதால் ஏற்பட்ட சுவட்டின் மேல்
மிகாஅது சீர்ப்பட உண்ட சிறு களி ஏர் உண்கண் – கலி 97/26
மிகவும் அதிகமாய்ச் செல்லாமல், சீராக, உன்னை நுகர்ந்த சிறுமகிழ்ச்சிகொண்ட அழகான மைதீட்டிய கண்கள்
களி பட்டான் நிலையே போல் தடவுபு துடுப்பு ஈன்று – கலி 101/3
கள்ளுண்டு செருக்குற்றவனின் கால்தடுமாறும் நிலையைப் போல வளைந்து, துடுப்புப்போன்ற மொட்டினை ஈன்று
உழுந்து தலைப்பெய்த கொழும் களி மிதவை – அகம் 86/1
உழுந்தப்பருப்பைச் சேர்த்துச் செய்த குழைவான களி உருண்டையோடு
கடு நவை படீஇயர் மாதோ களி மயில் – அகம் 145/14
மிகுந்த துன்பத்தை அடைவன ஆகுக; களிக்கின்ற மயில்கள்
களி மயில் கலாவத்து அன்ன தோளே – அகம் 152/14
களிக்கும் மயிலின் தோகையைப் போன்றது; தோள்களோ
தண் தாது ஊதிய வண்டு இனம் களி சிறந்து – அகம் 170/6
குளிர்ந்த தாதினை உண்ட வண்டினம் களிப்பு மிகுந்து
இன் களி நறவின் இயல் தேர் நன்னன் – அகம் 173/16
இனிய களிப்பைத் தரும் கள்ளினையும் நல்ல ஓட்டம் அமைந்த தேரினையும் உடைய நன்னனது
களிறு அட்டு குழுமும் ஓசையும் களி பட்டு – அகம் 261/13
களிற்றினைக் கொன்று முழங்கும் ஓசையினையும் ,கள்ளுண்ட களிப்பு மிகுந்து
களி மலி கள்ளின் நல் தேர் அவியன் – அகம் 271/12
கள்ளுண்ட களிப்பு மிக்க கள்ளில் என்ற ஊரையும் நல்ல தேரையும் உடைய அவியன் என்பவனுடைய
களி படு குழிசி கல் அடுப்பு ஏற்றி – அகம் 393/14
களிமண்ணால் செய்த பானையைக் கற்களால் செய்த அடுப்பில் ஏற்றிவைத்து
களி இயல் யானை கரிகால்வளவ – புறம் 66/3
மதம்பிடிக்கும் இயல்பையுடைய யானையை உடைய கரிகால்வளவனே!
இன் களி மகிழ் நகை இழுக்கி யான் ஒன்றோ – புறம் 71/16
இனிய செருக்கு மிக்க மகிழ்ச்சியை இழந்து, நான் இத்துடன்
கயம் களி முளியும் கோடை ஆயினும் – புறம் 266/2
நீர்நிலைகள் களியாகி உலர்ந்துபோகும் கோடைக் காலத்திலும்
துடுப்பொடு சிவணிய களி கொள் வெண் சோறு – புறம் 328/11
துடுப்பால் துழாவப்பட்ட களிப்பைத் தருகின்ற வெண் சோற்றை
அழிகளின் படுநர் களி அட வைகின் – புறம் 399/10
வைக்கோலில் உழைக்கும் உழவர்கள், தாம் உண்ட கள்ளால் களிப்படைந்து மயங்கிச் சோர்ந்திருப்பின்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது