Skip to content
குறை

குறை என்றால் புலால் என்று பொருள்

1. சொல் பொருள்

(பெ) பெரிய தசைத் துண்டு (புலால்), இறைச்சித்துண்டு, நிறைவற்றது, தவறு, குற்றம், மிச்சம்

2. சொல் பொருள் விளக்கம்

உருவத்தில் பெரிய ஒன்றை இரண்டு மூன்று பாகங்களாக வெட்டிக் குறைத்தால், கிடைப்பது குறை. கறி, மீன் கடைகளில் முழு உருவத்தினின்றும் ஒரு பெரும் பகுதியைத் துண்டமாக்குவர். அதுவே குறை. அதில் கொழுப்பும் சேர்ந்திருந்தால் அது கொழுங்குறை.

குறை எனப்படும் துண்டுகளை அப்படியே நெய்யில் பொரித்தோ, தீயில் வாட்டியோ, பெரிய சட்டிகளில் வேகவைத்தோ உண்பர். வேகவைத்த குறையும் குறைதான்.

குறை என்பது ஆடு ,மான், காட்டுப்பன்றி போன்ற பலவித விலங்குகளின் உடலிலிருந்தும் பெறப்படுவது. அதுமட்டுமல்ல,
சுறாமீனை வெட்டிப் பெறுவதும் குறைதான்.

குறை
குறை

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Primal cut, cut of meat , piece of meat initially separated from the carcass of an animal during butchering, cons

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

உறு குறை மருங்கில் தம் பெறு முறை கொள்-மார் – திரு 173

தமக்குற்ற குறைவேண்டும் பகுதியில் (தம்)தொழில்களைப் பெறுமுறையினை முடித்துக்கொள்வதற்கு,

மயிர்குறைகருவி மாண் கடை அன்ன – பொரு 29

மயிரைக் குறைக்கின்ற கத்தரிகையின் சிறப்பாயமைந்த கடைப்பகுதியை ஒத்ததும்,

காழின் சுட்ட கோழ் ஊன் கொழு குறை/ஊழின்ஊழின் வாய் வெய்து ஒற்றி – பொரு 105,106

இரும்புக் கம்பியில் (கோத்துச்)சுடப்பட்ட கொழுத்த இறைச்சிகளாகிய பெரிய தசைத் துண்டுகளை

அகல் இரு வானத்து குறைவில் ஏய்ப்ப – பெரும் 292

அகன்ற பெரிய வானத்திடத்தே தோன்றும் குறை வில்(லாகிய வானவில்)லை ஒப்ப

முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் – பெரும் 443

(வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும்

வல்லோன் அட்ட பல் ஊன் கொழும் குறை/அரி செத்து உணங்கிய பெரும் செந்நெல்லின் – பெரும் 472,473

சமையற்காரன் ஆக்கின பல இறைச்சியில் கொழுவிய தசைகளும்,

கோழ் ஊஉன் குறை கொழு வல்சி – மது 141

கொழுத்த ஊனையுடைய இறைச்சித்துண்டு கலந்த கொழுமையான சோற்றினையும்,

கொள்வதூஉம் மிகை கொளாது கொடுப்பதூஉம் குறை கொடாது – பட் 210

(தாம்)கொள்வனவற்றை மிகையாகக் கொள்ளாது, கொடுப்பனவற்றைக் குறையாகக் கொடாமல், 210

குறை அறை வாரா நிவப்பின் அறை-உற்று – மலை 118

குட்டையாதலும் சூம்பிப்போதலும் உண்டாகாத வளர்ச்சியுடன், வெட்டப்பட்டு,

பரூஉ குறை பொழிந்த நெய்க்கண் வேவையொடு – மலை 168

பெரிய பெரிய தசைகள் மிகுதியாகப்போட்ட நெய்யின்கண் வெந்த பொரியலுடன்,

குறை
குறை

வரு விசை தவிர்த்த கடமான் கொழும் குறை/முளவுமா தொலைச்சிய பைம் நிண பிளவை – மலை 175,176

(முட்டுவதற்கு ஓடி)வரும் வேகத்தைத் தணித்து (ப் பின் கொன்ற)கடமானின் கொழுத்த தசைகளையும்,

குறவர் கொன்ற குறை கொடி நறை பவர் – நற் 5/3

குறவர்கள் வெட்டிப்போட்டதால் குறைவுபட்ட மணக்கின்ற கொடிகள்

நொதுமல் நெஞ்சம் கொள்ளாது என் குறை/இற்று ஆங்கு உணர உரை-மதி தழையோர் – நற் 54/7,8

என்னை அயலாள் என்று எண்ணாது, எனது குறையை

கானவன் எய்த முளவுமான் கொழும் குறை/தேம் கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு – நற் 85/8,9

வேட்டுவன் எய்த முள்ளம்பன்றியின் கொழுத்த தசையை,

நின் குறை முடித்த பின்றை என் குறை – நற் 102/3

உன்னுடைய தேவையைத் தீர்த்துக்கொண்ட பின்னர், என்னுடைய தேவையையும்

இடிக்கும் கேளிர் நும் குறை ஆக – குறு 58/1

என்னைக் கடிந்துரைக்கும் நண்பர்களே! உங்கள் கடிந்துரையானது என் உடம்பைக்

இரலை மேய்ந்த குறை தலை பாவை – குறு 220/2

ஆண்மான் மேய்ந்ததால் குறைந்த தலையையுடைய பாவையாகிய

பணி குறை வருத்தம் வீட – குறு 333/5

மணம் புரியும் பணி குறைப்பட்டதனால் ஏற்பட்ட வருத்தம் நீங்க,

இரந்து குறை உறாஅன் பெயரின் – ஐங் 228/3

உன்னைப் பெண்வேண்டி வந்து அது கிடைக்கப்பெறாமல் திரும்பிச் சென்றால்

எஃகு போழ்ந்து அறுத்த வாள் நிண கொழும் குறை/மை ஊன் பெய்த வெண்ணெல் வெண் சோறு – பதி 12/16,17

அரிவாளால் பிளந்து அறுக்கப்பட்ட வெண்மையான ஊனின் கொழுத்த இறைச்சித்துண்டுகளையும்,

ஊனத்து அழித்த வால் நிண கொழும் குறை/குய் இடு-தோறும் ஆனாது ஆர்ப்ப – பதி 21/10,11

இறைச்சி கொத்தும் பட்டைமரத்தில் வைத்துக் கொத்திய வெள்ளை நிற நிணத்தோடு சேர்ந்த கொழுத்த இறைச்சியை

யாம குறை ஊடல் இன் நசை தேன் நுகர்வோர் – பரி 10/32

முந்திய இரவின் மீந்துநிற்கும் ஊடலாகிய இனிய விரும்பத்தக்க தேனை உண்டுமகிழ்வோரும்,

நீடு கிளர் கிழமை நிறை குறை தோன்ற – பரி 17/18

நெடிய கிளர்ச்சியுடையதாய் இசைநயத்துக்குரிய நிறையும் குறையும் பெற்று ஒலிக்கும் – அதற்கு மாறாக

ஈதலில் குறை காட்டாது அறன் அறிந்து ஒழுகிய – கலி 27/1

பிறருக்குக் கொடுப்பதில் குறைகாட்டாமல், அறநெறிகளை அறிந்து அவற்றின்படி ஒழுகுகின்ற

மெல் விரல் மந்தி குறை கூறும் செம்மற்றே – கலி 40/16

மெல்லிய விரல்களையுடைய மந்தியைப் பெண்கேட்டுத் தன் குறையைக் கூறும் தன்மையது,

குறை
குறை

தடி குறை இறுபு இறுபு தாயின கிடப்ப – கலி 104/53

தசைத் துண்டங்கள் தெறித்துத்தெறித்துச் சிதறிக் கிடக்க,

செயிரின் குறை நாளால் பின் சென்று சாடி – கலி 105/37

வாழ்நாள் குறைந்தது என்ற குறைபாட்டின் காரணமாக, ஒருவரின் பின் சென்று, அவரை வருத்தி

கொல் ஏறு கோடல் குறை என கோஇனத்தார் – கலி 107/3

கொல்லுகின்ற காளையைத் தழுவுதலே செய்யவேண்டிய செயல் என்று மாடு மேய்க்கும் ஆயர்கள்

என் குறை புறனிலை முயலும் – அகம் 32/20

என் தேவையை (என்னிடமே) இரந்து நிற்க முயலும்

குறை அறல் அன்ன இரும் பல் கூந்தல் – அகம் 142/18

நீர் குறைந்து பாயுமிடத்திலுள் படிந்த கருமணல் போன்ற கருமையான பலவாகிய கூந்தல்

துடி கண் கொழும் குறை நொடுத்து உண்டு ஆடி – அகம் 196/3

உடுக்கின் கண் போன்ற அகன்ற கொழுத்த துண்டத்தை விற்று, கள்ளினைக் குடித்து மகிழ்ந்து

குறை குளம்பு உதைத்த கல் பிறழ் இயவின் – அகம் 207/6

தேய்ந்த குளம்புகள் மிதித்ததால் பருக்கைக்கற்கள் புரண்டுகிடக்கும் வழிகள் அமைந்த

தெண் கண் உவரி குறை குட முகவை – அகம் 207/11

தெளிந்த உவர்ப்பு உடைய குறைக்குடமாக முகக்கப்படும் நீருக்காக

அரி நிற கொழும் குறை வௌவினர் மாந்தி – அகம் 236/3

உடலை அரிந்தெடுத்த நிறத்தினையுடைய கொழுத்த துண்டினை ஒருவரிடமிருந்து ஒருவர் கவர்ந்து உண்டு

செம் தீ அணங்கிய செழு நிண கொழும் குறை/மென் தினை புன்கம் உதிர்த்த மண்டையொடு – அகம் 237/9,10

சிவந்த தீயில் சுட்ட வளம் பொருந்திய நிணத்தில் கொழுத்த துண்டுகளை

எமர் குறை கூற தங்கி ஏமுற – அகம் 300/19

எங்களவர்கள் முறையீடு செய்து வேண்டிக்கொள்ள, எம் ஊரில் தங்கி, நாங்கள் இன்புறும் வண்ணம்

குறை ஆர் கொடுவரி குழுமும் சாரல் – அகம் 322/11

தசையைத் தின்னுகின்ற புலி முழங்கும் மலைச் சாரலையும்,

ஏந்து எழில் மழை கண் இவள் குறை ஆக – அகம் 350/8

உயர்ந்த அழகு பொருந்திய குளிர்ச்சியான கண்களையுடைய தலைவியின் வேண்டுகோளின்படி

குறை வினை முடித்த நிறைவு இன் இயக்கம் – அகம் 351/4

கருதிய செயலைச் செய்து முடித்ததால் உண்டான மனநிறைவுடன் இனிதே மீண்டுவரும் இந்தப் பயணத்தைச்

குடி கடன் ஆகலின் குறை வினை முடி-மார் – அகம் 375/12

குடிமக்களுக்கு செய்யும் கடமை எனக் கொண்டு, தான் மேற்கொண்ட போர்வினையை முடிப்பதற்காக,

குறை கண் நெடு போர் ஏறி விசைத்து எழுந்து – புறம் 61/10

குறைந்த தலை இடத்தையுடைய உயரமான நெற்போரின் மீது ஏறி, உயரத் தாவிக் குதித்து

புலால்
குறை

நெருப்பு சினம் தணிந்த நிணம் தயங்கு கொழும் குறை/பரூஉ கள் மண்டையொடு ஊழ் மாறு பெயர – புறம் 125/2,3

நெருப்பால் சுட்டதன் சூடு தணிந்த நிணம் படர்ந்த கொழுத்த இறைச்சித்துண்டினை

இழுதின் அன்ன வால் நிண கொழும் குறை/கான் அதர் மயங்கிய இளையர் வல்லே – புறம் 150/9,10

நெய் இழுது போன்ற வெண்மையான நிணத்தையுடைய கொழுத்த தசையை,

பய குறை இல்லை தாம் வாழும் நாளே – புறம் 188/7

தம் வாழ்நாளின் பயன் என்பதில் குறைபாடு இல்லை.

அரு குறை ஆற்றி வீழ்ந்தான் மன்ற – புறம் 288/7

அரிய செயலைச் செய்து மடிந்து வீழ்ந்தான்,

பலர் குறை செய்த மலர் தார் அண்ணற்கு – புறம் 311/4

பலரின் குறைகளை விசாரித்துத் தீர்த்துவைத்த மலர்மாலை அணிந்த தலைவனுக்கு

வாடூன் கொழும் குறை/கொய் குரல் அரிசியொடு நெய் பெய்து அட்டு – புறம் 328/9,10

வெந்து வாடிய கொழுத்த ஊன்துண்டுகளையும் அறுவடை செய்த வரகிலிருந்து எடுத்த அரிசியில் நெய்யிட்டுச் சமைத்துத்,

காயம் கனிந்த கண் அகன் கொழும் குறை/நறவு உண் செம் வாய் நா திறம் பெயர்ப்ப – புறம் 364/5,6

காரம் சேர்த்துச் சமைத்த பெரிய கொழுத்த தசையை,

குறை செயல் வேண்டா நசைஇய இருக்கையேன் – புறம் 371/8

வேறு எந்தச் செயலையும் செய்ய விரும்பாமல், பொருள் ஒன்றையே விரும்பும் இருக்கையை உடையவனாய்,

குறை தலை படு பிணன் எதிர போர்பு அழித்து – புறம் 371/14

தலைகள் வெட்டுண்டு குறையுடல்களாய் விழும் பிணங்கள் எதிரே குவிய, அக் குவியலாகிய போரை அழித்து,

சிலை-பால் பட்ட முளவுமான் கொழும் குறை/விடர் முகை அடுக்கத்து சினை முதிர் சாந்தம் – புறம் 374/11,12

வில்லம்பில் பட்ட முள்ளம்பன்றியின் கொழுத்த தசைத்துண்டுகள்,

மோட்டு இருவராஅல் கோட்டுமீன் கொழும் குறை/செறுவின் வள்ளை சிறு கொடி பாகல் – புறம் 399/5,6

கோட்டுமீன் என்பது சுறா. கோடு என்பது கொம்பு. கொம்புள்ள மீன் கோட்டுமீன்.

பெரிய கரிய வரால் இறைச்சியும், கொம்புகளையுடைய சுறாமீனின் கொழுத்த துண்டுகளும்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *