சொல் பொருள்
(பெ) 1. ஊர்ப்புறம், புறநகர்ப்பகுதி,
சொல் பொருள் விளக்கம்
ஊர்ப்புறம், புறநகர்ப்பகுதி,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
suburban area
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: சேரிகள் ஊருக்கு வெளியே இருந்தன. ஊரும் சேரியும் உடன் இயைந்து அலர் எழ – அகம் 220/1 ஊரின்கண்ணும் சேரியின்கண்ணும் ஒருங்கே சேர்ந்து அலர் எழ சேரிமக்கள் துணங்கை, குறவை ஆகிய கூத்துக்களை ஆடுவர் துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி – மது 329 துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும் சேரியின் ஆண்கள் தமக்குள் மற்போர் புரிவர். மறம் கொள் சேரி மாறு பொரு செருவில் – மது 594 வீரத்தைத் (தம்மிடத்தே)கொண்ட (மறவர்கள் வாழும்)சேரிகள் தம்முள் மாறுபட்டுச் செய்வித்த போரில் சேரி மக்கள் பலவிதமாக ஆடல் பாடல்களுடன் நன்னன் பிறந்தநாளை விழாவாகக் கொண்டாடுவர். சீர் மிகு நெடுவேள் பேணி தழூஉ பிணையூஉ மன்றுதொறும் நின்ற குரவை சேரிதொறும் உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ வேறுவேறு கம்பலை வெறி கொள்பு மயங்கி பேர் இசை நன்னன் பெரும் பெயர் நன்னாள் சேரி விழவின் ஆர்ப்பு எழுந்து ஆங்கு – மது 614-619 புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து, மன்றுகள்தோறும் நின்ற குரவைக்கூத்தும் – சேரிகள்தோறும் (நின்ற) புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து, வேறு வேறான ஆரவாரம் ஆவேசம்கொண்டு கலந்து, பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில், சேரிகளில் உள்ளார் விழவின்கண் ஆரவாரம் எழுந்தாற்போன்ற ஆரவாரத்தோடே சேரிகளில் கிணற்றுகளில் உறைகள் இறக்கியிருப்பர் உறை_கிணற்று புற_சேரி – பட் 76 முத்துக்குளிப்போர், சங்கு குளிப்போர் ஆகியோர் சேரிகளில் தங்கியிருந்தனர் விளைந்து முதிர்ந்த விழு முத்தின் இலங்கு வளை இரும் சேரி – மது 135,136 (நன்றாக)விளைந்து முதிர்ந்த சீரிய முத்தினையும், பளிச்சிடும் சங்கினையுடைய சங்கு குளிப்பார் இருப்பினையும், கடலையொட்டி மீனவர் சேரிகள் இருந்தன. உரவு கடல் உழந்த பெரு வலை பரதவர் மிகு மீன் உணக்கிய புது மணல் ஆங்கண் கல்லென் சேரி புலவர் புன்னை விழவு நாறு விளங்கு இணர் அவிழ்ந்து உடன் கமழும் – நற் 63/1-4 வலிமை மிக்க கடலில் சென்று வருந்திய, பெரிய வலைகளைக் கொண்ட பரதவர் மிகுதியாகப் பெற்ற மீன்களைக் காயவைத்த புதிய மணற்பரப்பாகிய அவ்விடத்தில் மிகுந்த ஆரவாரமுள்ள சேரியை அடுத்த புலால்நாறும் இடத்திலுள்ள புன்னையின் விழாவுக்குரிய மணம் விளங்கும் பூங்கொத்துகள் உடன் மலர்ந்து மணங்கமழும் சங்கினை அறுத்து வளையல் செய்யும் திறமைசாலிகள் சேரிகளில் இருந்தனர். ஊர்_அல்_அம்_சேரி சீறூர் வல்லோன் வாள் அரம் பொருத கோள் நேர் எல் வளை – நற் 77/8,9 பெரிய ஊர் அல்லாத அழகிய சேரியாகிய சிற்றூரில், வளைசெய்வதில் வல்லவன் தன் வாள் போன்ற அரத்தால் அராவிச் செய்த நன்றாகப் பொருந்திய நேரிய ஒளிமிகுந்த வளையலையும் சேரிகள் ஊரை ஒட்டியும் இருந்துள்ளன. ஓர் ஊர் வாழினும் சேரி வாரார் – குறு 231/1 ஒரே ஊரில் இருந்தாலும் நம் சேரிப்பக்கம் வாரார் சேரி மக்கள் புலால் உணவை மிகுதியாக உண்பர். புல் வேய்ந்த குடிசைகளில் இருப்பர். புலால் அம் சேரி புல் வேய் குரம்பை – அகம் 200/21 பாணர்கள் தமக்கென உருவாகிய சேரிகளில் இருப்பர். அது பாணர் சேரி எனப்படு மீன் சீவும் பாண்_சேரியொடு – மது 269 மீன் சீவும் பாண் சேரி – புறம் 348/4 ஒருவரையொருவர் அறிந்துகொள்ளா அளவிற்குச் சேரிகள் பெரிதாகவும் இருந்திருக்கின்றன. தமர் தமர் அறியா சேரியும் உடைத்தே – நற் 331/12
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்