Skip to content

சொல் பொருள்

(வி) 1. களித்திரு, மகிழ்ச்சியில் மூழ்கு, 2. அசை, ஆடு,  3. மூழ்கு, 4. துய்,அனுபவி, 5. விளையாடி மகிழ், 6. துளை

சொல் பொருள் விளக்கம்

1. களித்திரு, மகிழ்ச்சியில் மூழ்கு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be immersed in joy, rejoice, swing to and fro; move, be immersed, enjoy, experience, play, disport, to perforate, bore

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

கரு விரல் மந்தி செம் முக பெரும் கிளை
பெரு வரை அடுக்கத்து அருவி ஆடி
————– —————- —————- ———–
கலையொடு திளைக்கும் வரை_அக நாடன் – நற் 334/1-5

கரிய விரல்களையுடைய மந்தியின், சிவந்த முகங்களையுடைய பெரிய கூட்டமானது,
————– —————- —————- ———–
பெரிய மலைகளின் சரிவில் அருவியில் குளித்து,
தம் ஆண்குரங்குகளோடு களித்திருக்கும் மலையக நாடன்,

முது நீர்
புணரி திளைக்கும் புள் இமிழ் கானல் – குறு 299/1,2

முதுமையான நீரையுடைய
அலைகள் வந்து தவழும் பறவைகள் ஒலிக்கின்ற கடற்கரைச் சோலையிலுள்ள

எக்கர் ஞாழல் நறு மலர் பெரும் சினை
புணரி திளைக்கும் துறைவன் – ஐங் 150/1,2

மணல் மேட்டில் உள்ள ஞாழல் மரத்தின் நறிய மலரைகொண்ட பெரிய கிளையில்
ஆரவாரிக்கும் கடலைகள் மூழ்கியெழும் துறையைச் சேர்ந்தவன்

தொடுதர
துன்னி தந்து ஆங்கே நகை குறித்து எம்மை
திளைத்தற்கு எளியமா கண்டை – கலி 110/3-5

என் மேனியைத் தொட
உன் கிட்டே வந்து உனக்கு இடங்கொடுத்தது ஒரு விளையாட்டுக்காக, நீ உடனே என்னைத்
துய்ப்பதற்கு எளியவளாய்க் கருதிவிட்டாய்!

பெரும் கை எண்கின் பேழ் வாய் ஏற்றை
இருள் துணிந்து அன்ன குவவு மயிர் குருளை
தோல் முலை பிணவொடு திளைக்கும் – அகம் 201/16-18

பெரிய கையினையும், பிளந்த வாயினையும் உடைய ஆண் கரடி
இருளை வெட்டிவைத்தாற் போன்ற திரண்ட மயிரினையுடைய குட்டியுடனும்
வற்றிய முலையினையுடைய பெண்கரடியுடனும் விளையாடி மகிழ்ந்திருக்கும்.

வேழம் வீழ்த்த விழு தொடை பகழி
பேழ் வாய் உழுவையை பெரும்பிறிது உறீஇ
புழல் தலை புகர் கலை உருட்டி உரல் தலை
கேழல் பன்றி வீழ அயலது
ஆழல் புற்றத்து உடும்பில் செற்றும்
வல் வில் வேட்டம் வலம் படுத்து இருந்தோன்
புகழ் சால் சிறப்பின் அம்பு மிக திளைக்கும்
கொலைவன் யார்-கொலோ கொலைவன் – புறம் 152/1-8

யானையைக் கொன்ற சிறந்த தொடையினைக்கொண்ட அம்பு
பெரிய வாயையுடைய புலியை சாகச்செய்து
துளையுள்ள கொம்புள்ள தலையையுடைய புள்ளிமான் கலையை உருட்டி, உரல் போன்ற தலையையுடைய
கேழலாகிய பன்றியை வீழ்த்தி, அதற்கு அயலதாகிய
ஆழமான புற்றில்கிடக்கின்ற உடும்பின்கண் சென்று செறியும்
வலிய வில்லாலுண்டான வேட்டையை வெற்றிப்படுத்தியிருந்தவன்
புகழ் அமைந்த சிறப்பினையுடைய அம்பு எய்தல் தொழிலில் சிறப்புற்று துளைத்துச் செல்கின்ற
கொலைவன் யாரோ அவன்தான் கொலைவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *