பஃறுளி என்பது பழந்தமிழ் நாட்டிலிருந்த ஓர் ஆற்றின் பெயர், பறளியாறு
1. சொல் பொருள்
(பெ) 1. குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலால் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு, 2. பறளியாறு
2. சொல் பொருள் விளக்கம்
பாண்டிய மன்னன் பஃறுளியாறு கடலிற் கலக்குமிடத்து முந்நீர் விழா எடுத்தான்.
குமரியாற்றின் தெற்கேயிருந்து கடலால் கொள்ளப்பட்டதாகக் கருதப்படும் ஒரு யாறு. இதனை, பல் + துளி எனப் பிரிப்பர். இந்த ஆறு கடற்கோளுக்கு இரையானது பற்றி இளங்கோவடிகள் இயற்றிய சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
பறளியாறு தென்னிந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாயும் ஓர் ஆறு. இவ்வாறானது சிலப்பதிகாரத்தில் குறிப்பிடப்படும் பஃறுளி ஆறாகும். பஃறுளி ஆறே பறளி ஆறாக திரிந்துள்ளது. இந்த ஆறு மகேந்திர கிரி மலையில் உற்பத்தியாகிப் பாய்கிறது. இவ்வாற்றின் மீது மாத்தூர் அருகே தொட்டிப்பாலம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. மேலும் பெருஞ்சாணி அணையும் இவ் ஆற்றின் குறுக்கேயே கட்டப்பட்டுள்ளது. உலகில் உள்ள பழமையான ஆறுகளில் ஒன்று
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Pahrali River, An ancient river south of the river Kumari, said to have been swallowed by sea;
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
எம் கோ வாழிய குடுமி தம் கோ
செம் நீர் பசும்பொன் வயிரியர்க்கு ஈத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன் நீர் பஃறுளி மணலினும் பலவே – புறம் 9/8-11
எம்முடைய வேந்தனாகிய குடுமி வாழ்வானாக, தம்முடைய கோவாகிய
சிவந்த நீர்மையையுடைய போக்கற்ற பசிய பொன்னைக் குத்தர்க்கு வழங்கிய
முந்நீர்க் கடல்தெய்வத்திற்கு எடுத்த விழாவிஐயுடைய நெடியோனால் உளதாக்கப்பட்ட
நல்ல நீரையுடைய பஃறுளி என்னும் ஆற்றின் மணலினும் பலகாலம்.
அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி
வடிவேல் எறிந்த வான்பகை பொறாது
பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக்
குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள
வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு
தென்றிசை யாண்ட தென்னவன் வாழி – மது:11/19
அடியில் தன்னளவு அரசர்க்கு உணர்த்தி – தன் பெருமையின் அளவினை உலகத்து மன்னர்களுக்குக் காலான் மிதித்து உணர்த்தி, வடிவேல் எறிந்த வான்பகை பொறாது – வடித்த வேலானும் எறிந்த அப் பெரிய பகையினைப் பொறுக்காது, பஃறுளியாற்றுடன் பன்மலை அடுக்கத்துக் குமரிக் கோடும் கொடுங்கடல் கொள்ள – பஃறுளியாற்றுடனே பல பக்க மலை களையுடைய குமரி மலையினையும் வளைந்த கடல் கொண்டவதனால், வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு – வடக்கண் கங்கையாற்றினையும் இமயமலையையும் கைக்கொண்டு, தென் திசை ஆண்ட தென்னவன் வாழி – தென்றிசையை ஆண்ட பாண்டியன் வாழ்வானாக ;
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்