Skip to content

சொல் பொருள்

1. (வி) அன்புகொள்

2. (பெ) 1. துவைக்கும்போது துணிகளுக்குப் போடும் கஞ்சி

2. பிசின்

பசை – ஒட்டிக் கொள்ளல், பசுமை, வளமை

சொல் பொருள் விளக்கம்

பசை ஒட்டிக் கொள்ளும் தன்மையது என்பது வெளிப்படை. பசை ‘பிசின்’ எனவும் வழங்குகிறது. ‘பயின்’ என்பது பழஞ்சொல். ‘பசை’ பச்சை என்பதன் இடைக்குறையாக வழங்குதல் ஆயிற்று. பச்சை அல்லது நீர்மைப் பொருள் ஒட்டிக்கொள்ளும் தன்மையது. அவர் “பசை”யான ஆள் என்னும் பொழுது பணக்காரர் என்பதைச் சுட்டுகிறது. “பசை இருந்தால் பக்கம் பத்துப்பேர்” என்பதில் பசை என்பது பண வளமையுடன், கொடை வளமையும் சேர்தல் அறிக. பச்சைப் பிள்ளை என்பதில் ‘பச்சை’ பசைத் தன்மையொடு ஒட்டிக்கொள்ளும் குறிப்புள்ளமை அறிக.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be kind, loving, starch for the washed clothes, glue

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

பசைஇ பசந்தன்று நுதலே – குறு 87/4

அவர்மீது அன்புகொண்டதால் வெளுத்துப்போயிற்று என் நெற்றி

நலத்தகை புலைத்தி பசை தோய்த்து எடுத்து
தலை புடை போக்கி தண் கயத்து இட்ட
நீரின் பிரியா பரூஉ திரி கடுக்கும்
பேர் இலை பகன்றை பொதி அவிழ் வான் பூ – குறு 330/1-4

பெண்மை நலமும் அழகும் வாய்ந்த சலவைப்பெண், கஞ்சியில் தோய்த்து எடுத்து
ஒருதரம் கல்லில் அடித்து முடித்து, குளிர்ந்த குளத்தில் இட்ட,
நீரில் அலசிவிடாத பருத்த ஆடையின் முறுக்கைப் போன்றிருக்கும்
பெரிய இலையைக் கொண்ட பகன்றையின் கூம்பு விரிந்த வெள்ளிய பூக்கள்

பசை படு பச்சை நெய் தோய்த்து அன்ன
சேய் உயர் சினைய மா சிறை பறவை – அகம் 244/1,2

பசை பொருந்திய தோலை நெய்யில் தோய்த்தாற்போன்ற,
மிக்க உயரமான கிளைகளில் இருக்கும் கரிய சிறகினையுடைய வாவல்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *