பத்தல் என்பது தொட்டி, குழி, பள்ளம், நீரிறைக்குங் கருவி
1. சொல் பொருள்
(பெ) 1. இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால்
(பெ) 2. தொட்டி, குழி, பள்ளம், நீரிறைக்குங் கருவி, நீரோடும் குறுகிய வழி 3. யாழின் குடம், 4. கொப்பரை
(பெ) 5. பனையின் அடிமட்டை
2. சொல் பொருள் விளக்கம்
இறை கிணற்றின் நீர் கொட்டும் வாய்க்கால் பத்தல் எனப்படல் பொது வழக்கு. பனையின் அடிமட்டை பத்தல் எனப்படுதல் தூத்துக்குடி வட்டார வழக்காகும். பத்தல் அமைப்பும் பனை மட்டை அடியமைப்பும் கொண்ட ஒப்புமைப் பெயரீடு இஃதாம்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
trough for watering animals, ditch, depression, a pot like structure in a Yazh
cauldron
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கணிச்சியில் குழித்த கூவல் நண்ணி
ஆன் வழிப்படுநர் தோண்டிய பத்தல்
யானை இன நிரை வௌவும் – நற் 240/7-9
குந்தாலியால் குழிவு ஏற்படுத்திய கிணற்றை அடைந்து
பசுக்களை நடத்திச்செல்பவர்கள் தோண்டிய குழிவான பள்ளத்தின் நீரை
யானைகளின் கூட்டமான திரள் கவர்ந்துண்ணும்
நெடு விளி கோவலர் கூவல் தோண்டிய
கொடு வாய் பத்தல் வார்ந்து உகு சிறு குழி – அகம் 155/8-9
நீண்ட சீழ்க்கை ஒலியையுடைய கோவலர் தோண்டிய கிணற்றினின்றும் முகந்த
வளைந்த வாயினையுடைய பாத்திரத்திலிருந்து நீர் வடிந்து செல்லும் சிறிய குழி
குளப்பு வழி அன்ன கவடு படு பத்தல்
விளக்கு அழல் உருவின் விசிஉறு பச்சை – பொரு 4,5
(மானின்)குளம்பு (பதிந்த)இடத்தைப் போன்று பகுக்கப்பட்ட (இரண்டு பக்கமும் தாழ்ந்து நடுவுயர்ந்த)குடத்தையும்;
விளக்குப் பிழம்பின் (நிறத்தை ஒத்த)நிறமுடையதும் விசித்துப் போர்க்கப்பட்டதும் ஆகிய தோல்
அரிநர் கொய்வாள் மடங்க அறைநர்
தீம் பிழி எந்திரம் பத்தல் வருந்த – பதி 19/23
விளைந்த நெல்லை அறுப்போரின் அரிவாள் மழுங்கிப்போக, கரும்பு ஆட்டுவோரின்
சாறு பிழியும் எந்திரத்தின் கொப்பரை வருந்த,
சிலம்பு அமை பத்தல் பசையொடு சேர்த்தி – மலை 26
ஆன் நீர் பத்தல் யானை வௌவும் – ஐங் 304/2
சிரறு சில ஊறிய நீர் வாய் பத்தல்/கயிறு குறு முகவை மூயின மொய்க்கும் – பதி 22/13,14
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
இது ஒரு வழக்குச் சொல்
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்