Skip to content

சொல் பொருள்

(பெ) 1. கழுகு வகை, 2. குருகு, கைவளை

  • பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது
  • பரிதல்-வளைதல்; பரிந்து-வளைந்து; இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது

சொல் பொருள் விளக்கம்

பருத்ததொரு பறவை என்னும் குறிப்பால் பருந்து எனப்பட்டது. பரியது அது என்னும் பொருட்டால் பருந்துக்குப் ‘பாறு’ என்றொரு பெயரும் ஏற்பட்டது.

பருத்த வடிவால் பருயது என்னும் பெயரும், கருத்த வண்ணத்தால் கருடன், கலுழன் என்னும் பெயர்களும், மிக உயரமாகப் பறத்தலால் உவணம் என்னும் பெயரும் அதற்கு உண்டாயின.

பருந்து ஓரிரையைக் கண்டு வீழ்ந்து இறங்கும் தோற்றத்தைக் கண்டோர் பருந்தின் வீழ்வு, – பருந்தின் வீழ்ச்சி, – பருந்தின் வீழ்க்காடு – என நூற்பாவின் பொருணிலை அமைதிக்கு ஒரு வாய்பாடு கண்டனர்.

பருந்து இரையை எடுக்கும் இழுபறியையும் ஆடும் ஆட்டத்தையும் கண்டவர்கள் குத்திக் குதறிக் கொடுமைப்படுத் துதலைப் ‘பருந்தாட்டம் ஆடுதல் ’ என்றனர்.

“பல்லைப் பிடுங்கிப் பருந்தாட்டம் ஆட்டி”
என்பதொரு தனிப்பாட்டு.

பருந்தின் வாயமைப்பைக் கூர்ந்து கண்ட மீனவர் ‘பருந்துவாயன்’ என ஒரு மீன் வகையைக் கண்டனர். அதனைப் பறாளை விநாயகர் பள்ளு “தோகை பருயதுவாயன் மாட்டுமீன்” எனப் பயன்படுத்திக் கொண்டது (15).

தச்சுப்பணியர் உள்ளத்துப் ‘பருந்தின் வால்’ பதிந்தது. அதனால் பருந்து வால்போல் வெட்டிப் பலகையின் மூலைப் பொருத்து இணைத்தலைப் ‘பருந்துவால்’ எனப் பெயரிட்டனர்.

பரிதல்-வளைதல்; பரிந்து-வளைந்து; இப்பரிந்து பருந்து என்றும் வடிவு கொண்டு வளையலைச் சுட்டியது. பறக்கும் பருந்துக்கும் வளையலாம் பருந் துக்கும் வேறுபாடு காட்ட வேண்டுமே என்று எண்ணிய சங்கச் சான்றோர் “பறாஅப் பருயது” என்றனர் (கலி. 147).

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

common kite, bracelet

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

இது தெளிந்த குரலில் கத்தும். இதன் ஒலி சீழ்க்கை ஒலி (சீட்டியடிப்பது) போல் இருக்கும்.

இனம் தீர் பருந்தின் புலம்பு கொள் தெள் விளி – குறு 207/3

நெடு விளி பருந்தின் வெறி எழுந்து ஆங்கு – அகம் 299/6

வீளை பருந்தின் கோள் வல் சேவல் – அகம் 33/5

இதன் தலை உலர்ந்திருக்கும்.

உலறு தலை பருந்தின் உளி வாய் பேடை – ஐங் 321/1

பெரிய சிறகுகளை உடையது.

நீர்ப்படு பருந்தின் இரும் சிறகு அன்ன – பதி 12/19

மிக உயரத்தில் பறக்கும்

உகக்கும் பருந்தின் நிலத்து நிழல் சாடி – பதி 77/9

விலங்குகளின் மாமிசத்தை உண்ணும்.

ஏறு தம் கோலம் செய் மருப்பினால் தோண்டிய வரி குடர்
ஞாலம் கொண்டு எழூஉம் பருந்தின் வாய் வழீஇ – கலி 106/26,27

படு முடை பருந்து பார்த்து இருக்கும் – குறு 283/7

இதன் அலகு(மூக்கு) வளைவாக இருக்கும். கால் நகங்கள் பெரிதாகவும் கூர்மையாகவும் இருக்கும்.

வளை வாய் பருந்தின் வள் உகிர் சேவல் – அகம் 363/13

கூர் உகிர் பருந்தின் ஏறு குறித்து ஒரீஇ – புறம் 43/5

பெட்டைப் பருந்தின் கண்கள் வெண்மையாக இருக்கும்.

வளை வாய் பருந்தின் வான் கண் பேடை – அகம் 79/12

உயரமான மரக்கிளைகளில் கூடுகட்டி முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும்.

ஈன் பருந்து உயவும் வான் பொரு நெடும் சினை – நற் 3/1

இதன் ஒலியைக் கேட்க இங்கே சொடுக்கவும்.

பறாஅ பருந்தின் கண் பற்றி புணர்ந்தான் – கலி 147/37

பறக்காத பருந்தாகிய குருகு என்னும் கைவளை இருக்குமிடத்தைப் பிடித்து என்னோடு சேர்ந்திருந்தவன்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *