பொருள்
- பருப்பு என்பது பருமைப் பொருளது
- அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை
- துவையல்
விளக்கம்
பருப்பு என்பது பருமைப் பொருளது. ‘பருப்புடைப் பவளம் போல’ என வரும் சிந்தாமணி இப்பொருளைத் தெரிவிக்கும் (2273).
“அயிருருப் புற்ற ஆடமை விசயம்
கவலொடு பிடித்த வகையமை மோதகம்”
என்னும் மதுரைக் காஞ்சிக்கு (625-6) “பருப்பும் தேங்காயுமாகிய உள்ளீடுகளோடே கண்ட சருக்கரை கூட்டிப் பிடித்த வகுப் பமைந்த வெம்மை பொருந்தின அப்பம்” என உரை வரைகின்றார் நச்சினார்க்கினியர்.
அவரைப்பயற்றின் பருப்புச் சோற்றைச் சொல்கிறது பெரும்பாணாற்றுப்படை (195). கும்மாயம் என்பதோர் உணவு. ‘குழையச் சமைத்த பருப்பு’ என்பார் மணவாள மாமுனிகள் (பெரியாழ்வார் 3, 3:3) பத்து; உ.வே.சா.138.
பருப்பு, பயற்றை உடைத்துச் செய்யப்பட்டது. தோல் உரித்து ஆக்கப்பட்டது. பருப்பு என்னும் சொல், பருப்புக் கொண்டு அரைக்கப்படும் துவையலைக் குறித்து, பின்னர்த் துவையல் என்னும் பொதுப் பொருளில் விருதுநகர் வட்டாரத்தில் வழங்குகின்றது.
இது ஒரு வழக்குச் சொல்