சொல் பொருள்
(வி) 1. அடி, 2. மோதித்தாக்கு, 3. அடித்து ஒலியெழுப்பு, கொட்டு, 4. அடித்துப்பூசு, 5. (பறவை) சிறகுகளை அடித்துக்கொள், 6. (கைகளைக்) கொட்டிப்பிசை, 7. கன்னம் குளிரினால் அடித்துக்கொள், 8. (கைகளைத்)தட்டு, 9. தானியங்களிலுள்ள தூசு, வேண்டாதவை ஆகியவற்றை நீக்க, முறம், சுளகு ஆகியவற்றில் இட்டு மேலும் கீழும் அசைத்துத் தட்டு,
2. (பெ) 1. அடித்து உண்டாக்கும் ஒலி, 2. பக்கம், 3. புடைப்பு, பருமை,
சொல் பொருள் விளக்கம்
1. அடி
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
strike, beat, hit, attack, beat, as a drum; to tap, as on a tambourine; smear, (birds) flap or flutter the wings, tap and rub hands, (cheeks) flutter or quiver due to extreme cold, clap the hands, sift, winnow, sound from a stroke, side, Protuberance
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை புள் அணி நீள் கொடி செல்வனும் – திரு 150,151 பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய கருடனை அணிந்த நீண்ட கொடியினையுடைய திருமாலும் பூட்டு மான் திண் தேர் புடைத்த மறுகு எல்லாம் – கலி 98/5 எந்நேரமும் பூட்டியபடியே இருக்கும் உன் திண்ணிய தேர்ச்சக்கரங்கள் மோதித்தாக்கிய தெருக்களிலெல்லாம் தட்டையும் புடைத்தனை கவணையும் தொடுக்க என – நற் 206/5 தட்டை எனும் கருவியை அடித்து ஒலித்து, கவண்கல்லும் வீசுக என்று பொன் காண் கட்டளை கடுப்ப கண்பின் புன் காய் சுண்ணம் புடைத்த மார்பின் – பெரும் 220,221 பொன்னை(உரைத்து)க் காணும் கட்டளைக்கல்லை ஒப்ப, சம்பங்கோரையின் புல்லிய காயில் தோன்றின தாதை அடித்துக்கொண்ட மார்பினையும், புனிற்று நிரை கதித்த பொறிய முது பாறு இறகு புடைத்து இற்ற பறை புன் தூவி – நற் 329/4,5 அண்மையில் குஞ்சு பொரித்ததால் வரிசையாகப் பருத்த புள்ளிகளையுடைய முதிய பருந்தானது இறகுகளைத் தீவிரமாக அடித்துக்கொள்வதால் இற்று விழுந்த காற்றில் பறக்கும் புல்லிய அடி இறகுகளைத் இன்றோ அன்றோ தொன்று ஓர் காலை நல்ல-மன் அளியதாம் என சொல்லி காணுநர் கை புடைத்து இரங்க – பதி 19/24-26 இன்றல்ல, நேற்றல்ல, தொன்றுதொட்டு இந்த நாடுகள் நல்லனவாய் இருந்தன, இப்போது இரங்கத்தக்கன என்று சொல்லி காண்போர் கைகளைக் கொட்டிப்பிசைந்து வருந்திநிற்க, மெய் கொள் பெரும் பனி நலிய பலர் உடன் கை கொள் கொள்ளியர் கவுள் புடையூஉ நடுங்க – நெடு 7,8 (தம்)உடம்பில் கொண்ட மிகுந்த குளிர்ச்சி வருத்துகையினால், பலரும் கூடிக் கையில் பிடித்த கொள்ளிக்கட்டையராய், கன்னங்கள் அடித்துக்கொண்டு நடுங்க உயர் நிலை இதணம் ஏறி கை புடையூஉ அகல் மலை இறும்பில் துவன்றிய யானை பகல் நிலை தளர்க்கும் கவண் உமிழ் கடும் கல் – மலை 204-206 உயரமான இடத்திலுள்ள பரணில் ஏறி, கைகளைத் தட்டி, பரந்துபட்டுக்கிடக்கும் மலைகளின் புதர்க்காடுகளில் கூட்டமாகத்திரியும் யானைகள் பகலில் (வந்து)நிற்கும் நிலையைக் குலைக்கின்ற கவண்கள் விடும் மூர்க்கத்தனமான கற்கள் சிறையும் செற்றையும் புடையுநள் எழுந்த பருத்தி பெண்டின் சிறு தீ விளக்கத்து – புறம் 326/4,5 பஞ்சுக்கொட்டையின் புறத்தோல்களையும், கொட்டை, தூசி ஆகிய குப்பைகளையும் புடைத்து நீக்குவாளாய் எழுந்திருந்த பருத்தி நூற்கும் பெண்டினுடைய சிறிய விளக்கொளியில் அரி மான் இடித்து அன்ன அம் சிலை வல் வில் புரி நாண் புடையின் புறங்காண்டல் அல்லால் – கலி 15/1,2 சிங்கம் முழங்குவதைப் போன்று முழங்கும், அழகிய சிலைமரத்தால் செய்யப்பட்ட வலிய வில்லின் முறுக்குடைய நாணைச் சுண்டிவிட்டு ஒலியெழுப்பினாலே பகைவர் தோற்றோடக் காண்பது அன்றி, விரவு வரி கச்சின் வெண் கை ஒள் வாள் வரை ஊர் பாம்பின் பூண்டு புடை தூங்க – பெரும் 71,72 (மார்பில்)விரவிய, வரியுடைய கச்சையில், வெண்மையான கைப்பிடியையுடைய ஒள்ளிய வாள் மலையில் ஊர்கின்ற பாம்புபோலப் பூணப்பட்டு ஒருபக்கத்தே தொங்கிநிற்க, மழை வீழ்ந்து அன்ன மா தாள் கமுகின் புடை சூழ் தெங்கின் மு புடை திரள் காய் – பெரும் 363,364 மேகங்கள் விழுந்ததைப் போன்ற பெரிய தண்டினையுடைய கமுகுகளின் பக்கத்தே சூழ்ந்த தெங்கினுடைய மூன்று புடைப்பினையுடைய திரண்ட காய்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்