பெரியன் என்பவன் ஒரு சங்ககாலச் சிற்றரசன்
1. சொல் பொருள்
(பெ) 1. பெரியவன், 2. ஒரு சங்ககாலச் சிற்றரசன், பொறையாற்றுக் கிழான் நற்றேர்ப்பெரியன்.
2. சொல் பொருள் விளக்கம்
பெரியன் என்பவன் சோழ நாட்டைச் சேர்ந்த குறுநில மன்னனாவான். இவன் பொறையாற்றுக் கிழான் நல் தேர்ப் பெரியன் எனப்படுகிறான் அழுந்தூர்வேள் திதியன் என்பவனின் காவல் மரத்தை அன்னி வெட்டியபோது அவ்வன்னிக்கு இப்பெரியன் துணை போனான். இவன் சிறந்த கொடையாளி. பொறையாறு என்பது இவனது ஊர். புறந்தை எனப்படும் அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்தான். வேங்கட நாட்டில் வாழ்ந்த புலவர் கல்லாடனார் இவனைக் கண்டு பரிசில் வேண்டிப் பாடித் தன்
வறுமையைப் போக்கிக்கொண்டார்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
a big person, a chieftain of sangam period
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அன்னியும் பெரியன் அவனினும் விழுமிய
இரு பெரு வேந்தர் பொரு_களத்து ஒழித்த
புன்னை விழுமம் போல – நற் 180/6-8
அன்னி என்பவன் பெரியவன்; அவனைக் காட்டிலும் சிறந்த திதியன் என்பவனும் ஆகிய
இரு பெரும் வேந்தர்கள் போரிட்டு அதனால் வெட்டிச்சாய்த்த
புன்னை மரத்தின் துயரமிக்க நிலையைப் போல
நறவு_மகிழ் இருக்கை நல் தேர் பெரியன்
கள் கமழ் பொறையாறு அன்ன – நற் 131/7,8
நறவுண்டு மகிழும் அரச அமர்வையுடைய நல்ல தேரினைக்கொண்ட பெரியன் என்பானின்
தேன் மணக்கும் பொறையாறு என்ற ஊரைப் போன்ற
பாடுநர் தொடுத்த கைவண் கோமான்
பரி உடை நல் தேர் பெரியன் – அகம் 100/11,12
பாடிவருவோரை வளைத்துக்கொள்ளும் கைவண்மை வாய்ந்த கோமானாகிய
குதிரைகள் பூண்ட சிறந்த தேரினையுடைய பெரியன் என்பானது
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்