மகுளி என்பதன் பொருள்,எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய்,ஓர் இசைக்கருவி
1. சொல் பொருள் விளக்கம்
(பெ) 1. எள் பயிர் முதலியவற்றிற்கு வரும் அரக்கு நோய்
2. ஓர் இசைக்கருவி (தோல் கருவி ?),
3. ஓசை
4. ஒரு வகை மண்?
மொழிபெயர்ப்புகள்
2. ஆங்கிலம்
Redness, a disease affecting sesame and other plants;
a musical instrument, probably a percussion instrument
3. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
நீலத்து அன்ன விதை புன மருங்கில் மகுளி பாயாது மலி துளி தழாலின் அகளத்து அன்ன நிறை சுனை புறவின் கௌவை போகிய கரும் காய் பிடி ஏழ் நெய் கொள ஒழுகின பல் கவர் ஈர் எள் – மலை 102-106 நீல மணிகள் போன்ற (விதைகள்)விதைக்கப்பட்ட கொல்லைக்காட்டின் பக்கத்தே, மகுளியென்னும் அரக்குநோய் பரவாமல், மிகுந்த மழைத் துளியைத் தழுவுதலால், நீர் இறைக்கும் சாலைப் போன்று நிறைந்த சுனைகளையுடைய காட்டுநிலத்தில், பிஞ்சுத்தன்மை போன(=முற்றிய) கரிய காய்கள் ஒரு கைப்பிடிக்குள் ஏழு காய்களே கொள்ளத்தக்கனவாய் நெய் (உள்ளே)கொண்டிருக்க வளர்ந்தன பலவாகக் கிளைத்த ஈரப்பதமான எள்; ஒத்த குழலின் ஒலி எழ முழவு இமிழ் மத்தரி தடாரி தண்ணுமை மகுளி ஒத்து அளந்து சீர்தூக்கி ஒருவர் பிற்படார் நித்தம் திகழும் நேர் இறை முன்கையால் அ தக அரிவையர் அளத்தல் காண்-மின் – பரி 12/40-44 ஒன்றோடொன்று ஒத்து இசைக்கும் குழல் வாத்தியங்களினின்றும் இசை எழ, முழவின் முழக்கத்தோடு மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி ஆகிய இசைக்கருவிகளின் தாளத்தை அளந்து சீரின் கூறுபாட்டை அறிந்து, ஒருவருக்கொருவர் பின்னிடாத தகுதியுடையவராய் நடன அசைவுகள் நன்கு விளங்கும் நேராக இறங்கும் தம் முன்கையால் அழகுமிக்கதாய் ஆடல்மகளிர் அந்தத் தாளத்தை அளத்தலைப் பாருங்கள்; உருள் துடி மகுளியின் பொருள் தெரிந்து இசைக்கும் கடும் குரல் குடிஞைய நெடும் பெரும் குன்றம் – அகம் 19/4,5 உருண்டையான உடுக்கின் ஓசையைப் போன்று, பொருள் தெரிந்து ஒலிக்கும் கடும் குரலையுடைய ஆந்தைகள் உள்ள உயரமான பெரிய மலையில், இங்கு மகுளி என்பதற்குப் பெரும்பாலும் ஓசை என்றே பொருள்கொள்ளப்படுகிறது. எனினும் பரிபாடலில் காணப்படும் மகுளி என்பதை ஓர் இசைக்கருவியாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. அங்கு மகுளி என்பதனுடன் கொடுக்கப்பட்டுள்ள முழவு, மத்தரி, தடாரி, தண்ணுமை ஆகியன தோற்கருவிகளாதலால், மகுளி என்பதுவும் ஒரு தோற்கருவி என்றே கொள்ளத்தோன்றுகிறது. இங்கு இது துடியுடன் சேர்த்துக் கூறப்படுவதால், துடியாகிய மகுளி எனக்கொண்டு, மகுளியைத் துடி என்ற உடுக்கு வகைக் கருவி எனக் கொள்ளத்தோன்றுகிறது.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்
மானங்கெட்டு மகுளி பூத்திரும் எனும் சொல் வழக்கு கிராமப் புறங்களிள் உண்டு. அந்த மகுளிக்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?