Skip to content

சொல் பொருள்

(வி) 1. தொழில் செய்யாதிரு, சோம்பியிரு, 2. மடங்கு, வளை, 3. இற, முடிவுக்கு வா, 4. உறங்கு, 5. வீழ், 6. ஊக்கம் குன்றியிரு, 7. அற்றுப்போ, இல்லாமல்போ, 8. சுருங்கு, கரை, 9. தங்கு, 10. மற, 11. வருந்து, 12. மடக்கு, வளை, 

2. (பெ) 1. மடிப்பு, 2. மடிப்பு உள்ள துணி, 3. வயிறு, 4. சோம்பல்,

சொல் பொருள் விளக்கம்

தொழில் செய்யாதிரு, சோம்பியிரு,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be indolent, inactive, be bent, folded, die, come to an end, sleep, fall down, be dispirited, dull, cease to exist, shrink, contract, stay, forget, feel sorry, bend, fold, fold, folded cloth, belly, stomach, Sloth, idleness, indolence

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வான் மடி பொழுதில் நீர் நசைஇ குழித்த
அகழ் சூழ் பயம்பின் அகத்து ஒளித்து ஒடுங்கி – பெரும் 107,108

மழை பெய்தலைத் தவிர்ந்த காலத்தில் நீரை விரும்பித் தோண்டிய
பள்ளங்களைச் சூழ்ந்த மூடுகுழிகளின் அகத்தே மறைந்து ஒதுங்கி,

தேம் பிழி தேறல் மாந்தி மகிழ் சிறந்து
சேமம் மடிந்த பொழுதின் வாய் மடுத்து
இரும் புனம் நிழத்தலின் சிறுமை நோனாது – குறி 155-157

தேனால் சமைந்த கள் தெளிவை உண்டு, மகிழ்ச்சி மிக்கு,
காவல்தொழிலில் சோம்பியிருந்த பொழுதில், (யானை தன் கையால் தினையை உருவி)வாயில் செலுத்தி(உண்டு)
பெரிய புனத்தை அழித்துவிடுகையினால், (தம்)மனத் தாழ்மையைப் பொறுக்கமாட்டாமல்,

உவவு மடிந்து உண்டு ஆடியும் – பட் 93

உவாநாள்(பௌர்ணமி/அமாவாசை) ஓய்வுஅனுசரித்து உண்டும் விளையாடியும்;

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த

பிடி வாய் அன்ன மடி வாய் நாஞ்சில் – பெரும் 199

பிடியின் வாயை ஒத்த, மடங்கிய வாயையுடைய கலப்பையின்

மனை சேர் பெண்ணை மடி வாய் அன்றில் – அகம் 50/11

(நம்)வீட்டைச் சேர்ந்துள்ள பனைமரத்தில், வளைந்த அலகையுடைய அன்றில் பறவைகள்

ஒருவேன் ஆகி
உலமர கழியும் இ பகல் மடி பொழுதே – நற் 109/9,10

யானும் தன்னந்தனியாய் ஒருத்தியாக இருந்து
வருத்தமுறும்படியாகக் கழிந்துபோகும் இந்தப் பகல் முடியும் அந்திப்பொழுது.

நள்ளென் கங்குல் புள் ஒலி கேள்-தொறும்
தேர் மணி தெள் இசை-கொல் என
ஊர் மடி கங்குலும் துயில் மறந்ததுவே – நற் 287/9-11

நள்ளென்னும் ஓசையினையுடைய இரவில் பறவைகளின் ஒலி கேட்கும்போதெல்லாம்
அவனது தேர் மணியின் தெளிந்த ஓசை அல்லவா என்று
ஊரெல்லாம் உறங்கும் இரவிலும் துயிலை மறந்தது.

இரும் களிற்று இன நிரை ஏந்தல் வரின் மாய்ந்து
அறை மடி கரும்பின் கண் இடை அன்ன – குறு 180/2,3

பெரிய களிற்றுயானைகளின் கூட்டத்துக்குத் தலைவனாகிய களிறு வந்துபுகுந்ததால், அழிந்து
பாத்தியில் விழுந்துகிடக்கும் கரும்பின் நடுவே நிற்கும் ஒற்றைக் கரும்பு போல

ஓங்கு நிலை ஒட்டகம் துயில் மடிந்து அன்ன – சிறு 154

உயர்ந்த தன்மையையுடைய ஒட்டகம் உறக்கத்தே கிடந்தாலொத்த

பிடி மடிந்து அன்ன குறும் பொறை மருங்கின் – அகம் 269/6

பெண்யானைகள் படுத்துக்கிடந்தாலொத்த குன்றுகளின் பக்கத்தே

ஈன்று கான் மடிந்த பிணவு பசி கூர்ந்து என – நற் 29/3

குட்டிகளை ஈன்று காட்டினில் ஊக்கம் குன்றியிருக்கும் தன் பெண்புலி பசியால் வாடியது என

இயங்குநர் மடிந்த அயம் திகழ் சிறு நெறி – நற் 257/8

வழிச்செல்வோர் அற்றுப்போன நீர் நிறைந்த பள்ளங்கள் உள்ள சிறிய வழியில்,

தாம்பு அசை குழவி வீங்கு சுரை மடிய
கனையல் அம் குரல கால் பரி பயிற்றி
படு மணி மிடற்ற பய நிரை ஆயம் – அகம் 54/7-9

கயிற்றால் கட்டப்பட்ட இளங்கன்றுகள் (தம்) பெருத்த மடியைக் குடித்து அவை சுருங்கவேண்டி
கனைக்கின்ற குரலுடனே காலால் தாவித் தாவிப் பாய்ந்து
ஒலிக்கும் மணிகள் கழுத்தில் கட்டப்பட்ட பால்பசுக்களாகிய கூட்டம்

மல்லல் பேரூர் மடியின் மடியா
வினைஞர் தந்த வெண்ணெல் வல்சி
மனை வாழ் அளகின் வாட்டொடும் பெறுகுவிர் – பெரும் 254-256

வளன் மிக்க பெரிய ஊரின்கண் தங்குவீராயின், தொழில் ஒழிந்திராத
உழவர் தந்த வெண்மையான நெற்சோற்றை
மனையில் வாழும் பெட்டைக்கோழி(யைக்கொன்று) வாட்டிய பொரியலோடு பெறுவீர்

திங்கள் கல் சேர்பு கனை இருள் மடியின்
இல் எலி வல்சி வல் வாய் கூகை
கழுது வழங்கு யாமத்து அழிதக குழறும் – அகம் 122/12-14

திங்கள் மேற்கு மலையினை அடைந்து மிக்க இருள் தங்கின்
இல்லிலுள்ள எலியை இரையாகக் கொண்ட வலிய வாயினதான கூகையின் சேவல்
பேய்கள் திரியும் நள்ளிரவில் அழிவு உண்டாகக் குழறும்

வைகு தொழில் மடியும் மடியா விழவின்
யாணர் நன்னாட்டு – புறம் 212/5,6

செய்கின்ற தொழில் மறந்துபோகும் அளவுக்கு ஓய்வில்லாமல் நடக்கிற விழாவினையும்
புது வருவாயும் உளதாகிய சோழநாட்டு

வடிய வடிந்த வனப்பின் என் நெஞ்சம்
இடிய இடை கொள்ளும் சாயல் ஒருத்திக்கு
அடியுறை காட்டிய செல்வேன் மடியன்-மின்
அன்னேன் ஒருவனேன் யான் – கலி 140/9-12

சிறந்த உருவத்தைச் செத்துக்கியெடுத்த அழகினையுடைய, என் நெஞ்சம் என்ற அரண்
இடிந்துபோகும்படி நடுவே வந்து என்னை ஆட்கொள்ளும் சாயலையுடைய ஒருத்திக்கு
அடிமை என்பதை உலகுக்குக் காட்டுவதற்குச் செல்கிறேன், நீங்கள் எனக்காக வருந்தவேண்டாம்,
நான் அப்படிப்பட்ட ஒருவன்தான்;

முளி சினை பிளக்கும் முன்பு இன்மையின்
யானை கை மடித்து உயவும்
கானமும் இனிய ஆம் நும்மொடு வரினே – குறு 388/5-7

உலர்ந்த கிளையைப் பிளக்கும் வலிமை இல்லாததினால்
யானை தன் துதிக்கைகையை மடக்கிக்கொண்டு வருந்தும்
பாலைநிலமும் இனியதாகும் உம்மோடு வந்தால்-

துறை போகு அறுவை தூ மடி அன்ன
நிறம் கிளர் தூவி சிறு வெள்ளாங்குருகே – நற் 70/2,3

சலவைத்துறையில் மிதக்கும் வெள்ளை ஆடையின் தூய மடிப்பு போன்ற
நிறம் விளங்கிய சிறகினை உடைய சிறிய வெள்ளைக் குருகே!

குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து – மது 520

சிறியனவும் பெரியனவுமாகிய மடிப்புடைவைகளைக் கொண்டுவந்து விரித்து,

தோடு அமை தூ மடி விரித்த சேக்கை – நெடு 135

மலரிதழ்கள் வைத்து(மணமூட்டப்பட்ட)தூய மடித்தது விரித்த படுக்கையின்கண்,

அவன் மடி மேல் வலந்தது பாம்பு – பரி 4/43

அவனது வயிற்றின் மேல் கச்சாகக் கட்டப்பட்டிருப்பதும் பாம்பு,

மடி இலான் செல்வம் போல் மரன் நந்த – கலி 35/1

சோம்பல் இல்லாதவனின் செல்வத்தைப் போல் மரங்கள் தழைத்துச் சிறக்க

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *