Skip to content

சொல் பொருள்

(வி) 1. முன்னால் இரு, 2. முன்னால் செலுத்து, முற்பட விடு, 3. முற்படு, 4. முன்னால் செல், 5. முன்னால் நிறுத்து, 6. தோற்றுவி, 7. வெளிப்படுத்து, 8. முன்னிடு, நோக்கமாகக்கொள்,

சொல் பொருள் விளக்கம்

புதை, அடக்கம் செய்,

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be in front, drive in front, be first, precede, go in front, place in front, cause to appear, disclose, bear in mind

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

எறி படை மயங்கிய வெருவரு ஞாட்பின்
கள் உடை கலத்தர் உள்ளூர் கூறிய
நெடுமொழி மறந்த சிறு பேராளர்
அஞ்சி நீங்கும்_காலை
ஏமம் ஆக தான் முந்துறுமே – புறம் 178/7-11

(பகைவர்)எறியும் படைக்கலம் தம்மில் கலந்த அஞ்சத்தக்க போரின்கண்
கள் உள்ள கலத்தை ஏந்தியவராய் ஊர்க்குள்ளே கூறிய
வீரம் மேம்பட்ட வார்த்தையைப் போரின்கண் மறந்த சிறிய பேராண்மையுடையோர்
போர்க்கலத்து அஞ்சிப் புறங்கொடுத்து ஓடுங்காலத்து
அவர்க்கு அரணாக தான் முன்னால் இருப்பான்.

அல்கலும் அலைக்கும் நல்கா வாடை
பரும யானை அயா உயிர்த்து ஆஅங்கு
இன்னும் வருமே தோழி வாரா
வன்கணாளரோடு இயைந்த
புன்கண் மாலையும் புலம்பும் முந்துறுத்தே – நற் 89/7-11

நாள்தோறும் நம்மைத் துன்புறுத்தும் அன்பில்லாத வாடைக்காற்று,
மேல் அலங்காரம் கொண்ட யானை அயர்ந்து பெருமூச்சு விட்டதைப் போன்று
இப்பொழுதும் வருகின்றதே! தோழி! இதுவரை வராதிருந்த
வன்கண்மையாளரான தலைவரோடு ஒத்த பண்புடைய
துன்பம் நிறைந்த மாலைப்பொழுதையும், தனிமைத்துயரையும் தன் முன்னால் செலுத்திக்கொண்டு

திவவு மெய்நிறுத்து செவ்வழி பண்ணி
குரல் புணர் நல் யாழ் முழவோடு ஒன்றி
நுண் நீர் ஆகுளி இரட்ட பல உடன்
ஒண் சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நன் மா மயிலின் மென்மெல இயலி
கடும் சூல் மகளிர் பேணி கைதொழுது – மது 604-609

வார்க்கட்டினைச் சரியாகச்செய்து செவ்வழி என்ற பண்ணை வாசித்து,
குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,
நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,
ஒளிரும் சுடரையுடைய (நெய்)விளக்கு முற்பட, உண்டிகளோடு,
நல்ல பெரிதான மயில் போல மெள்ள மெள்ள நடந்து,
முதிர்ந்த சூல்கொண்ட மகளிரைக் காத்து, கைகுவித்துத் தொழுது

உண்டற்கு இனிய பழனும் கண்டோர்
மலைதற்கு இனிய பூவும் காட்டி
ஊறு நிரம்பிய ஆறு அவர் முந்துற – மலை 282-284

உண்பதற்கு இனிமையான பழங்களையும், பார்த்தவர்கள்
சூடுவதற்கு மகிழ்ச்சிதரும் பூக்களையும், காட்டி
தீமைகள் மிகுந்த பாதையில் அவர் முன்னேசெல்ல,

சாந்தம் புதைத்த ஏந்து துளங்கு எழில் இமில்
ஏறு முந்துறுத்து சால் பதம் குவைஇ – அகம் 249/6,7

சந்தனம் பூசிய உயர்ந்து அசையும் அழகிய திமிலினையுடைய
காளையினை முன்னர் நிறுத்தி, மிக்க உணவினைக் குவித்து

ஒழித்தது பழித்த நெஞ்சமொடு வழி படர்ந்து
உள்ளியும் அறிதிரோ எம் என யாழ நின்
முள் எயிற்று துவர் வாய் முறுவல் அழுங்க
நோய் முந்துறுத்து நொதுமல் மொழியல் – அகம் 39/1-4

செய்யலாகாது என்று ஒழித்த கொள்கையைப் பழித்த நெஞ்சமோடு, பயணம் மேற்கொண்டு
நினைத்தும் அறிந்தீரோ என்னை என்று, உன்
கூரிய பற்களை உடைய சிவந்த வாயின் முறுவல் அழிய
நோவினை ஏற்படுத்தி அன்பற்றவற்றைப் பேசாதே

தொழு_தகு மெய்யை அழிவு முந்துறுத்து
பன் நாள் வந்து பணிமொழி பயிற்றலின் – அகம் 310/3,4

பிறர் வணங்கத்தக்க தோற்றத்தினையுடையவனாகிய நீ மனச்சிதைவை வெளிப்படுத்தி
பல நாளும் வந்து பணிந்த மொழிகளைப் பலகாலும் கூறலின்

நின் படைகொள் மாக்கள்
பற்றா_மாக்களின் பரிவு முந்துறுத்து
கூவை துற்ற நால் கால் பந்தர்
சிறு மனை வாழ்க்கையின் ஒரீஇ வருநர்க்கு
உதவி ஆற்றும் நண்பின் பண்புடை
ஊழிற்றாக நின் செய்கை – புறம் 29/17-22

நின்னுடைய படைக்கலம் பிடித்த மாந்தர்
நின்னுடைய பகைவரைப் போல் இரக்கத்தை முன்னிட்டுக்கொண்டு
கூவை இலையால் வேயப்பட்ட நான்கு கால்களையுடைய பந்தராகிய
சிறிய இல்லின்கண் வாழும் வாழ்க்கையினின்று நீங்கி நின்பால் வருவார்க்கு
உதவி செய்யும் நட்போடு கூடிய குணத்தையுடைய
முறைமையுடைத்தாக நினது தொழில்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *