சொல் பொருள்
(பெ) 1. ஒழுங்கு, நியதி, தகவு, 2. தன்மை, விதம், செயல்பாங்கு, 3. நீதி, 4. வரிசை ஒழுங்கு, 5. உறவு, 6. பிறப்பு, 7. தடவை, 8. ஊழ், விதி
சொல் பொருள் விளக்கம்
ஒழுங்கு, நியதி, தகவு,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
propriety, order, manner, way, justice, row order, relationship by blood or marriage, birth, time (as once, twice), fate
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கல்லா இளைஞர் சொல்லி காட்ட கதுமென கரைந்து வம் என கூஉய் அதன் முறை கழிப்பிய பின்றை – பொரு 100-102 (அரச முறைமையை இன்னும்)கற்றுக்கொள்ளாத (எம்)இளைஞர் (எம் வரவைக்)கூவி எடுத்துக்கூற, விரைவாக அழைத்து, ‘வருக வருக’ என்று உரத்துச் சொல்லி, அரசனைக் காணும் முறைகளைச் செய்து முடித்த பின்னர், கரும் கோட்டு சீறியாழ் பண்ணு முறை நிறுப்ப – நெடு 70 கரிய தண்டினையுடைய சிறுயாழைப் பண் நிற்கும் முறையிலே நிறுத்த முறை வேண்டுநர்க்கும் குறை வேண்டுநர்க்கும் வேண்டுபவேண்டுப வேண்டினர்க்கு அருளி – பெரும் 443,444 (வருத்தப்பட்டு)நீதி கேட்டுவந்தவர்க்கும், (வறுமைப்பட்டுத் தம்)குறை தீர்க்கக் கேட்டோர்க்கும் வேண்டியவற்றை எல்லாம் வேண்டினர்க்கு அருள்செய்து, அரசு முறை செய்க களவு இல் ஆகுக – ஐங் 8/2 அரசன் நீதியுடன் அரசாளுக, களவும் இல்லாதன ஆகுக காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் – நற் 66/9 உறுதியாகக் கட்டப்பெற்ற, அல்குலின் காசுமாலையில் உள்ள காசுகள் வரிசைமாறிக் கிடப்பினும், யாயும் ஞாயும் யார் ஆகியரோ எந்தையும் நுந்தையும் எம் முறை கேளிர் – குறு 40/1,2 என்னுடைய தாயும் உன்னுடைய தாயும் யார் யாரோ என் தந்தையும் உன் தந்தையும் எந்த உறவுப்படி உறவினர்? முன் முறை செய் தவத்தின் இ முறை இயைந்தேம் – பரி 11/138 முற்பிறப்பில் செய்த தவத்தினால் இப் பிறப்பில் நாங்கள் பெற்றோம் ஒரு முறை உண்ணா அளவை பெரு நிரை ஊர் புறம் நிறைய தருகுவன் – புறம் 258/7,8 ஒரு தடவை உண்பதன் முன்னே, பெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக் கொடுதருவன் கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று நீர் வழிப்படூஉம் புணை போல் ஆர் உயிர் முறை வழிப்படூஉம் என்பது திறவோர் காட்சியின் தெளிந்தனம் – புறம் 192/8-11 கல்லை அலைத்து ஒலிக்கும் வளவிய பேரியாற்று நீரின் வழியே போம் மிதவை போல, அரிய உயிர் ஊழின் வழியேபடும் என்பது நன்மைக் கூறுபாடறிவோர் கூறிய நூலானே தெளிந்தேம்
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்