1. சொல் பொருள்
மௌரியர், வடநாட்டு அரசர், The Maurya
2. சொல் பொருள் விளக்கம்
மௌரியப் பேரரசினைச் சங்கத்தமிழ் மோரியர் என்று குறிப்பிடுகிறது.
கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது.
இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப்
பரப்பளவை 50 லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான்.
கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியர் தமிழ்நாட்டிற்கும்
படையெடுத்து வந்தனர். ஆனால் அவர்கள் வெற்றிபெற்றதாகச் செய்திகள் இல்லை
இதற்குரிய சான்று சங்கப்பாடலில் உள்ளது.
கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில்
மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.
எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The Maurya
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: வெல்கொடி துனை கால் அன்ன, புனை தேர் கோசர் தொன் மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெவ் முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மா பெரும் தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய அறைவாய் உம்பர் ——————————— ——————– தேக்கு அமல் சோலை – அகம் 251/6-18 வெல்லும் கொடியினையுடைய விரையும் காற்றைப் போன்ற அஇ செய்யப்பெற்ற தேரினையுடைய கோசர் என்பார் மிக்க தொன்மை வாய்ந்த ஆலமரத்தின் அரிய கிளைகளையுடைய மன்றத்தே இனிய ஓசையையுடைய முரசம் குறுந்தடியால் அடிக்கப்பெற்று ஒலிக்க பகைவரது போர் முனையை அழித்த காலத்தே, மோகூரை ஆளும் பழையன் என்பான் பணிந்து வாராமையின் அவன்பால் பகை ஏறட்டுக் கொண்டவராகிய குதிரைகள் பொருந்திய சேனையினையுடைய புதிய மோரியர் என்பார் புனையப்பெற்ற தேர் உருளை தடையின்றிச் செல்லுதற்பொருட்டு உடைத்து வழியாக்கிய விளங்கும் வெள்ளிய அருவிகளையுடைய மலை நெறிக்கு அப்பாற்பட்ட தேக்குமரங்கள் நிறைந்த காடாகிய வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. ஒல்கு இயல் மட மயில் ஒழித்த பீலி வான் போழ் வல் வில் சுற்றி நோன் சிலை அம் வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கனை குரல் இசைக்கும் விரை செலல் கடும் கணை முரண் மிகு வடுகர் முன் உற மோரியர் தென் திசை மாதிரம் முன்னிய வரவிற்கு விண் உற ஓங்கிய பனி இரும் குன்றத்து ஒண் கதிர் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து அவரோ சென்றனர் – அகம் 281/4-12 நுடங்கும் தன்மை வாய்ந்த இளமை பொருந்திய மயில்கழித்த தோகையை நீண்ட வாரினால் வலிய வில்லில்வைத்துக் கட்டி, அந்த வலிய வில்லில் அழகிய நெடிய நாணின் விளிம்பிற்குப் பொருந்திய விரைவுத்தன்மையுடைய மிக்க ஒலி ஒலிக்கும் விரைந்த செலவு பொருந்திய கடிய அம்புகளையுடைய மாறுபாடு மிக்க வடுகர் தமக்கு முன்னே துணையாகி வர, மோரியர் என்பார் தென் திசை நாடுகளைப் பற்ற எண்ணிப் போந்த வருகைக்கு வான் அளாய உயர்ந்த பனியுடைய பெரிய மலையினை தமது ஒள்ளிய கதிர்களையுடைய அழ்ழி தடையின்றிச் செல்லப் போழ்ந்து வழியாக்கிய பாறைகளைக் கடந்து நம் தலைவர் போய்விட்டார். இப்போதுள்ள மங்களூர் மலைப் பிளவுப் பகுதியில் மோரியரின் தேர்ப்படை வழியை உண்டாக்கிக்கொண்டு தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது.வடநாடுகளில் பொருள் தேடச்சென்ற தமிழர் இந்தத் தேர்க்கால் தடத்தைப் பயன்படுத்திக்கொண்டனர். விண் பொரு நெடும் குடை இயல் தேர் மோரியர் பொன் புனை திகிரி திரிதர குறைத்த அறை இறந்து அகன்றனர் ஆயினும் – அகம் 69/10-12 விண் பொரு நெடும் குடை கொடி தேர் மோரியர் திண் கதிர் திகிரி திரிதர குறைத்த உல்க இடைகழி அறைவாய் – புறம் 175/6-8 என்ற செய்திகளும் இதனை உறுதிப்படுத்தும். மோரியராவர் சக்கரவாளச் சக்கரவர்த்திகள்; விச்சாதரரும் நாகரும் என்ப – என்பார் ஔவை.சு.து.அவர்கள்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்