Skip to content

சொல் பொருள்

(பெ) பார்க்க : வறம்

பஞ்சம், வற்கடம், வறுமை, வறண்ட நிலம், வறட்சி, பட்டுப்போன மரம், காய்ந்துபோதல்

சொல் பொருள் விளக்கம்

பார்க்க : வறம்

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

famine, poverty, parched land, drought, dried up tree, getting dried up
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

வறம் – பஞ்சம், வற்கடம், famine

எல்லை தருநன் பல் கதிர் பரப்பி
குல்லை கரியவும் கோடு எரி நைப்பவும்
அருவி மா மலை நிழத்தவும் மற்று அ
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறன் ஆகிய பண்பு இல் காலையும் – பொரு 233-237

பகற்பொழுதைத் தருகின்ற ஞாயிறு பலவாகிய கதிர்களைப் பரப்புகையினால்,
கஞ்சங் குல்லை தீயவும், மரங்களின் கொம்புகளை நெருப்புத் தின்னவும்,
அருவிகள் — பெரிய மலைகளில் — கொஞ்சம் கொஞ்சமாக வற்றிப்போகவும், இவை ஒழிந்த 235
கூட்டமான மேகங்கள் கடலிடத்தே நீர் முகத்தலை மறக்கவும்,
பெரும் பஞ்சம் உண்டாகிய நற்குணமில்லாத காலத்தும்

வறம் – வறுமை, poverty

வறன் இல் புலைத்தி எல்லி தோய்த்த – நற் 90/3

வறுமை இல்லாத சலவைப்பெண், பகலில் வெளுத்த

வறம் – வறண்ட நிலம், parched land

ஞாயிறு
கடுகுபு கதிர் மூட்டி காய் சினம் தெறுதலின்
உறல் ஊறு கமழ் கடாத்து ஒல்கிய எழில் வேழம்
வறன் உழு நாஞ்சில் போல் மருப்பு ஊன்றி நிலம் சேர – கலி 8/2-5

ஞாயிறு
மிகுந்த அனல் பரக்கும் கதிர்களைச் செலுத்திக் காய்கின்ற வெப்பத்தால் சுடுதலால்
வண்டுகள் நெருங்கிச் சேர, ஒழுகுகின்ற கமழும் மதநீரையுடைய, இப்பொழுது கெட்டுப்போன அழகையுடைய
யானை
வறண்ட நிலத்தை உழுகின்ற கலப்பையைப் போல் தன் கொம்புகளை ஊன்றி நிலத்தில் கிடக்க,

வறம் – வறட்சி – drought

வறன்_உறு குன்றம் பல விலங்கினவே – அகம் 109/15

வறட்சியுற்ற குன்றுகள் பல குறுக்கிட்டுள்ளனவே

வறம் – பட்டுப்போன மரம், dried up tree

வறன் நிழல் அசைஇ வான் புலந்து வருந்திய
மட மான் அசா இனம் திரங்கு மரல் சுவைக்கும் – அகம் 49/11,12

பட்டுப்போன மரநிழலில் தங்கி, தலையை மேல்நோக்கிப் பார்த்து வருந்தும்
இளையமானின் தளர்வுற்ற கூட்டம் வற்றிய மரல் செடிகளைச் சுவைக்கும்

வறம் – காய்ந்துபோதல், getting dried up

வறன்_உறல் அறியா சோலை – அகம் 382/12

காய்ந்துபோதலை அறியாத சோலை

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *