சொல் பொருள்
(பெ) சேர மன்னர்களின் பொதுப்பெயர்,
சொல் பொருள் விளக்கம்
சேர மன்னர்களின் பொதுப்பெயர்,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
a common name for chera kings
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: கண்ணி கண்ணிய வயவர் பெருமகன் பொய் படுபு அறியா வயங்கு செம் நாவின் எயில் எறி வல் வில் ஏ விளங்கு தட கை ஏந்து எழில் ஆகத்து சான்றோர் மெய்ம்மறை வானவரம்பன் என்ப – பதி 58/8-12 போருக்கான தலைமாலையை சூடக் கருதிய வீரர்களின் பெருமகன், தம்முடைய கூற்று பொய்யாவதனை அறியாத தெளிவானதும் செம்மையானதுமான நாவினையும், பகைவரின் மதில்களை அழிக்கும் வலிய வில்லும், அம்பும் விளங்குகின்ற பெரிய கையினையும், உயர்ந்த அழகிய மார்பினையும் கொண்ட, சான்றோரின் கவசம் போன்ற, வானவரம்பனாகிய சேரமன்னன் என்று கூறுவர் – சேரர்கட்குப் பொதுவாயமைந்த இப்பெயர் தனக்குச் சிறப்பாக விளங்குமாறு இச் சேரமான் தன் திறல் விளங்கு செயலைச் செய்தான் என்பது தோன்ற – ஔவை.சு.து.உரை விளக்கம் இச் சேரமான் ஆடுகோட் பாட்டுச் சேரலாதன். களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் எயில் முகம் சிதைய தோட்டி ஏவலின் தோட்டி தந்த தொடி மருப்பு யானை செ உளை கலி_மா ஈகை வான் கழல் செயல் அமை கண்ணி சேரலர் வேந்தே பரிசிலர் வெறுக்கை பாணர் நாள்_அவை வாள்_நுதல் கணவ மள்ளர் ஏறே மை அற விளங்கிய வடு வாழ் மார்பின் வசை இல் செல்வ வானவரம்ப – பதி 38/4-12 களங்காய்க் கண்ணி நார்முடிச் சேர வேந்தனே! பகைவரின் கோட்டை மதிலின் முகப்பு சிதையும்படியாக அங்குசத்தால் குத்தி ஏவுதலினால், அந்த நாட்டின் ஆளுமையை உனக்கே பெற்றுத்தந்த பூண் அணிந்த தந்தங்களைக் கொண்ட யானைப்படையையும், சிவந்த தலையாட்டத்தைக் கொண்டு விரைகின்ற குதிரைப் படையையும், பொன்னால் செய்த உயர்ந்த கழலையும், நல்ல வேலைப்பாடு அமைந்த தலைமாலையையும் உடைய சேரநாட்டு வேந்தனே! பரிசிலர்களின் செல்வமாக இருப்பவனே! பாணர்கள் இருக்கும் அரச அவையை உடையவனே! ஒளி பொருந்திய நெற்றியையுடையவளுக்குக் கணவனே! போர்வீரர்க்குக் காளை போன்றவனே! குற்றமின்றி விளங்குகிற, விழுப்புண்ணாலேற்பட்ட வடுக்கள் இருக்கும் மார்பினனே! பழிச்சொல் இல்லாத செல்வத்தையுடையவனே! வானவரம்பனே! – சேரன் களங்காய்க்கண்ணி நார்முடி சேரல் என்பவனும் வானவரம்பன் எனப்படுகிறான். யாணர் வைப்பின் நன்னாட்டு பொருந வானவரம்பனை நீயோ பெரும – புறம் 2/11,12 புதுவருவாய் இடையறாத ஊர்களையுடைய நல்ல நாட்டிற்கு வேந்தே, வானவரம்பன் நீயே, பெருமானே – இங்கு வானவரம்பன் எனப்படுபவன் சேரமான் பெருஞ்சோற்று உதியன் சேரலாதன் பொலம் தார் கடல் கால்கிளர்ந்த வென்றி நல் வேல் வானவரம்பன் அடல் முனை கலங்கிய உடை மதில் ஓர் அரண் போல – அகம் 45/15-18 பொன் மாலை அணிந்தவனும் கடலையே கலக்கிய வெற்றியை உடையவனும் நல்ல வேலினை உடையவனும் ஆகிய வானவரம்பன் தாக்குமுனையில் கலங்கிய உடைந்துபோன மதிலைக் கொண்ட ஒரே அரணைப் போல – ’கடல் கால்கிளர்ந்த வென்றி’ என்ற தொடரால் இந்த வானவரம்பன் கடல்பிறக்கு ஓட்டிய செங்குட்டுவன் ஆக இருக்கலாம். வானவரம்பன் வெளியத்து அன்ன நம் மாண் நலம் தம்மொடு கொண்டனர் – அகம் 359/6,7 வானவரம்பனது வெளியம் எனுமிடத்தை ஒத்த நமது சிறந்த அழகினைத்தம்முடன் கொண்டுசென்றனர். – இந்த வானவரம்பன் வெளியம் என்ற ஊரை ஆண்டவன். பெயர் தெரியவில்லை. வெளியம் என்பது வளம் மிக்க ஊராக இருந்திருத்தல் வேண்டும். வானவரம்பன் நன் நாட்டு உம்பர் வேனில் நீடிய வெம் கடற்று அடை முதல் —————- ———————– ———— நெடு மர மருங்கின் மலை இறந்தோரே – அகம் 389/16-24 வானவரம்பனது நல்ல நாட்டின் அப்பாலுள்ள வெப்பம் மிக்க கொடிய காட்டினை அடைந்த இடத்தே —————– —————— —————- நெடிய மரங்களையுடைய மலைவழிகளைக் கடந்து சென்றனரே – இந்த வானவரம்பன் சேரநாட்டின் வடபகுதியை ஆண்டவனாக இருத்தல்வேண்டும். பொருள் தேடிச் செல்வோர் இவனது நாட்டிற்கும் அப்பாலுள்ள இடத்திற்குச் சென்ரதாக அறிகிறோம். – இந்த வானவரம்பன் யார் எனத் தெரியவில்லை.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்