சொல் பொருள்
அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற் பொருட்கும் அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் அகரம் முன் வைக்கப்பட்டது.
அகரம் மருத நிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருத நிலத்தில் தங்கினதினாலேயே அவர் குடி யிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது. அக்கிர அகரம் = அக் கிராகரம். அக்கிரம் – நுனி, முதல், தலைமை.
சொல் பொருள் விளக்கம்
அகரம் : (1) அகரம் தனியே நிற்றலானும், பலமெய்க்கண் நின்று அவ்வம் மெய்கட்கு இசைந்த ஓசைகளைப் பயந்தே நிற்றலானும் வேறுபட்ட தாகலின் ஒன்றேயாயும் பலவேயாயும் நிற்பதோர் தன்மையை உடைத்தென்று கோடும்; இறைவன் ஒன்றேயாய் நிற்கும் தன்மையும் பல்லுயிர்க்குய தானேயாய் அவற்றின் அளவாய் நிற்கும் தன்மையும் போல. அது ‘அ’ என்ற வழியும், மூவினங்களில் ஏறினவழியும் ஓசை வேறுபட்ட வாற்றான் உணர்க. (தொல். எழுத்து. 8. நச்.)
(2) மெய்க்கண் அகரம் கலந்து நிற்குமாறு கூறினாற் போலப் பதினோருயிர்க்கண்ணும் அகரம் கலந்து நிற்கும் என்பது ஆசிரியர் கூறார் ஆயினார். அந்நிலைமை தமக்கே புலப்படுத்தலானும் பிறர்க்கு இவ்வாறு உணர்த்துதல் அரிதாகலானும் என்று உணர்க. இறைவன் இயங்குதிணைக் கண்ணும் நிலைத்திணைக் கண்ணும் பிறவற்றின் கண்ணும் அவற்றின் தன்மையாய் நிற்குமாறு எல்லார்க்கும் ஒப்ப முடியதாற்போல அகரமும் உயிர்க்கண்ணும் தனிமெய்க்கண்ணும் கலந்து அவற்றின் தன்மையாயே நிற்கும் என்பது சான்றோர்க்கெல்லாம் ஒப்ப முடிந்தது. (தொல். எழுத்து. 46. நச்.)
(3) அகரம் தானே நடந்தும், நடவா உடம்பை நண்ணியும் நடத்தலானும், அரன் அரி அயன் அருகன் என்னும் பரமர் திருநாமத்திற்கு ஒரு முதலாயும், அறம் பொருள் இன்பம் என்னும் முப்பொருளின் முதற் பொருட்கும் அருள் அன்பு அணி அழகு முதலாயின நற்பொருட்கும் முதலாயும் வருதலானும் அகரம் முன் வைக்கப்பட்டது. (நன். 72. மயிலை.)
(4) அகரம் மருத நிலத்தூர். மருதநிலம் வயற்பாங்கு. பார்ப்பனர் மருத நிலத்தில் தங்கினதினாலேயே அவர் குடி யிருப்பு அக்கிராகரம் எனப்பட்டது. அக்கிர அகரம் = அக் கிராகரம். அக்கிரம் – நுனி, முதல், தலைமை.
(ஒப்பியன் மொழிநூல். 146-147.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்