அடிசில் என்பது சோறு, உணவு.
1. சொல் பொருள்
(பெ) சோறு, உணவு, சமைத்த உணவு.
2. சொல் பொருள் விளக்கம்
அடு என்றால் சமைத்தல். அடிசில் என்றால் குழைவாக ஆக்கிய நெல்லரிசிச் சோறு.
அக்கார அடிசில் – சர்க்கரைப் பொங்கல். (அக்காரம் எனில் சர்க்கரை)
சர்க்கரைப் பொங்கலை அக்கார அடிசில் அல்லது அக்கார அடலை என வழங்கியதாகக் கல்வெட்டுக் குறிப்புகள் உண்டு
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
boiled rice, food
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
கொழுத்த ஆட்டின் மாமிசத்தில் கொழுப்பு ஒட்டிக்கொண்டிருக்கும். அதனை வேகவைத்துக் கையிலெடுத்தால் கைவிரல்களுக்கிடையில் அது நெய்போல ஒழுகும். பசுவின் நெய்யை மிகுதியாக இட்டுக் குழைத்து ஆக்கிய சோற்றுடன் இந்த ஒழுகும் நிணமும் கலந்திருக்கும் நிணம் சேர்த்த நெய் அடிசிலை விருந்தினருக்கு இட்டு, அவர்கள் உண்ட பின் மிஞ்சிய மீதத்தை நாம் உண்போம்
பைம் நிணம் ஒழுகிய நெய்ம் மலி அடிசில்
வசை இல் வான் திணை புரையோர் கடும்பொடு
விருந்துண்டு எஞ்சிய மிச்சில் பெருந்தகை
நின்னோடு உண்டலும் புரைவது – குறி 204 – 207
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில்/பிறர்க்கு ஈவு இன்றி தம் வயிறு அருத்தி – புறம் 127/7,8
சுவைத்தற்கு இனிதாகிய தாளிப்பையுடைய உணவு
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டும் தொட்டும் கவ்வியும் துழந்தும்
நெய்யுடை அடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை – புறம் 188/3-6
குழந்தைகளும் உண்ணும் குழைந்த உணவே அடிசில். பாண்டியன் குழந்தை உண்ணுவது நெய்யுடை அடிசில்.
புதுக்கலத்தன்ன செவ்வாய்ச் சிற்றில்
புனையிரும் கதுப்பின் நின் மனையோள் அயரப்
பாலுடை அடிசில் தொடீஇய ஒருநாள்
மாவண் தோன்றல்! வந்தனை சென்மோ! – அகம் 394/9-12
குழைவாக ஆக்கிய சோற்றில் பாலூற்றிப் பிசைந்து மணமகள் மணமகனுக்குத் தருவது பாலுடை அடிசில்
குய் குரல் மலிந்த கொழும் துவை அடிசில்
இரவலர்த் தடுத்த வாயில் புரவலர் – புறம் 250/1,2
குய் என்பது தாளித்தல். கொழும் துவை என்பது கொழுத்த மாமிசம் போட்ட ‘கொள கொள’-வென்ற குழம்பு. தாளித்த ஓசையுடன் கூடிய கொழுத்த ஊன் குழம்பும் குழைத்த சோறும் இரவலரைப் போகவிடாது தடுக்குமாம். இது கொழும் துவை அடிசில்!
பெருவள்ளலாகிய குமணன், தன்னைத் தேடி வரும் இரவலருக்குப் பொன்னாலான வட்டிலில் இந்தக் கொழும் துவையை
நெய்யுடை அடிசிலோடு கொடுத்திருப்பதைப் புலவர் பெருஞ்சித்திரனார் பாடுகிறார்.
குய் கொள் கொழும் துவை நெய்யுடை அடிசில்
மதி சேர் நாள்மீன் போல நவின்ற
சிறு பொன் நன் கலம் சுற்ற இரீஇ – புறம் 160/7 -9
இது இன்னும் சிறந்த கொழும் துவை நெய்யுடை அடிசில்!
இந்தக் குய் மணக்கும் கொழும் துவை அடிசில் மிக்க சுவையுடையது என்றும் அமிழ்தத்தினும் சுவை மிக்கது என்றும் கூறுகின்றனர் நம் சங்கப் புலவர்கள்.
அமிழ்து அட்டு ஆனா கமழ் குய் அடிசில்/வருநர்க்கு வரையா வசை இல் வாழ்க்கை – புறம் 10/7,8
சுவைக்கு இனிது ஆகிய குய் உடை அடிசில் – புறம் 127/7,8
சோறு வேறு என்னா ஊன் துவை அடிசில்
ஓடா பீடர் உள்வழி இறுத்து – பதி 45/13,14
போரில் வெற்றியை ஈட்டித்தந்த மறவருக்கு வெற்றிவேந்தன் அளித்த விருந்தின் ஒரு பகுதி இது! இது ஊன் துவை அடிசில்.
சமையற்கலையிற் சிறந்தவன், உணவுவகைகளைப் பற்றிய நூல் இயற்றியிருந்தான் எனவும், அந்நூலில் விதம் விதமான பல்வேறு அடிசில் வகைகளைப் பற்றிக் கூறியிருந்தான் எனவும் சிறுபாணாற்றுப்படை ஆசிரியர் கூறுகிறார்.
பனிவரை மார்பன் பயந்த நுண்பொருள் பனுவலின் வழாஅப் பல் வேறு அடிசில் வாள் நிற விசும்பின் கோள்மீன் சூழ்ந்த – சிறு 240,241
பனுவல் என்பது புத்தகம்.
விருப்பு உடை மரபின் கரப்பு உடை அடிசில்/மீன் பூத்து அன்ன வான் கலம் பரப்பி – பெரும் 476,477
அமிழ்து அன மரபின் ஊன் துவை அடிசில்/வெள்ளி வெண் கலத்து ஊட்டல் அன்றி – புறம் 390/17,18
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்