அணில் என்பது முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும் விலங்கு
1. சொல் பொருள்
(பெ) வெளிர்சாம்பல் நிறத்தில் முதுகில் மூன்று கோடுகளுடன் காணப்படும் விலங்கு
2. சொல் பொருள் விளக்கம்
அணிலைப் பற்றிய செய்திகள் சில பாடல்களில் கூறப்பட்டுள்ளன.
“அத்த நண்ணிய வங்குடிச் சீறூர்
மக்கள் போகிய வணிலாடு முன்றிற்
புலப்பில் போலப் புல்லென்
மலப்பென் றோழியவ ரகன்ற ஞான்றே ” – குறுந்தொகை, 41. .
” அணிற்பல் வன்ன கொங்குமுதிர் முண்டகத்து ,
மணிக்கே முன்ன மாநீர்ச் சேர்ப்ப ” – குறுந்தொகை , 48 .
” அணில்வரிக் கொடுங்காப் வாள்போழ்ந் திட்ட
காழ்போ எல்வினர் கறுநெய் தீன்டா ” -புறம் , 248 .
வேனல் வரியணில் வாலத் தன்ன
கரன ஆகின் கழன்றுகு முதுவீ ” -புறம் , 307 ,
… இலவத் தலங்குசினை பயந்த
பூளையம் பசுங்காய் புடைவிரிந் தன்ன
வரிப்புற வணிலொடு கருப்பையா டாது – பெரும்பாண் , 83-85 .
” சூரற் புறவி னணில்பிளிற்றுஞ் சூழ்படப்பை
யூர்கெழு சேவ விதலொடு – போர் திளைக்கும் ” – ஐந்திணை எழுபது , 33 .
” தோன்றுபூ விலவத் தங்கட் டொகையணி லனைய பைங்காய்
கான்றமென் பஞ்சியார்ந்த மெல்லணை யாழ்கை – சீவகசிந்தாமணி , 1701 .
மேற்காட்டிய பாடல்களில் தான் அணிலைப்பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. அணிலின் வரியிட்ட முதுகைச் சங்கப் பாடல்கள் குறிப்பிட்டுள்ளதைக் காணலாம் . வெள்ளரிக்காயின் மேல் உள்ள வரிபோல் அணிலின் முதுகில் வரிகள் இருந்ததாகப் புறநானூறு கூறுவது அழகிய பொருத்தமான உவமை . அணிலின் வாலின் உருவம் , தோற்றம் ஊகம்புல்லின் கழன்று விழும் பூவை ஒத்திருப்பதாகக் கூறியது நுட்பமான இயற்கை ஒப்புமையாகும் . ஊகம்புல்லின் முற்றிய பூக்கதிரையும் அணிலின் வாலையும் எதிரே கையில் வைத்துக் கொண்டு பார்ப்போருக்கு இந்த உவமையின் பொருத்தம் விளங்கும் . ஊகம் புல்லின் கதிர் போன்ற பூவில் காணும் முள்ளை ஊவா முள் என்று இன்றும் நாட்டுப் புறங்களில் வழங்குகின்றனர் . ஊக்கு ( Pin ) என்ற நாட்டுப் புற வழக்கும் ஊகு சங்கச் சொல்லின் மாற்றுருவமே .
இலவ மரத்தின் முதிர்ந்த காய் வெடிக்கும்போது பஞ்சுப் பிசிர் நீட்டிக் கொண்டிருப்பதை அணிலிற்கு ஒப்பிட்டுப் பெரும்பாணாற்றுப்படையும் , சீவகசிந்தா மணியும் கூறுகின்றன . அணிலின் மேல்தோல் பஞ்சு மெல்லிய மயிர்களால் சூழப்பட்டிருப்பதையே இலவம் பஞ்சுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் . அணில் வாய்ப்பற்கள் ஊசிபோல் இருப்பதாகக் குறுந்தொகைப் பாடல் கூறுகின்றது .
நீர் முள்ளிச் செடியின் கூரியமுள்போல அணிலின் பல் இருப்பதாகக் கூறியிருக்கின்றது. அணிலின் முன் பற்கள் கூரியவை . விலங்கு நூலார் உளி போன்று ( Chisel } இருப்பதாகக் கூறுவர் . தேயத் தேய வளரும் தன்மையுடையவை. வரிப்புறமுடைய அணிலில் இரண்டு உண்டென விலங்கு நூலார் கூறுவர் . தென்னிந்தியாவிலும் , தமிழ் நாட்டிலும் காணப்படும் அணிலிற்கு மூன்று வரிகளும் வட இந்தியாவில் மிகுதியாகக் காணப்படும் அணிலிற்கு ஐந்து வரிகளும் உண்டு என்பதை விலங்கு நூலார் கண்டுள்ளனர்.
தொல்காப்பியர் மரபியலில் ” மூங்கா வெரு கெலி மூவரியணிலொடு ” ( சூ . 561 ) என்று வரும் வரியில் மூன்று வரியுடைய அணிலென்று குறிப்பிட்டிருப்பதைக் காணலாம் , இந்த மூன்று வரியணில் ஐந்து வரியணிலைப்போல மக்களிடம் நெருங்கிவாழாது என்பர் , காட்டை ஒட்டிய நாட்டுப் புறங்களில் பெரும்பாலும் காணப்படும்.குறுந்தொகைப் பாடலில் ( 43 ) மக்கள் விட்டு விட்டுப் போகிய இடத்தில் இந்த அணிலைக் கண்டதாகக் கூறியிருப்பது இது சார்பாகக் கவனிக்கத் தக்கது . சங்ககாலத்திலும் மக்களிடம் நெருங்கிப் பழகாத விலங்காக இதைக் கருதினரென்று தெரிகின்றது . சூரற்புறவிற்கடுத்த படப்பையின் சூழலில் அணிலை ஐந்திணை எழுபது கூறுகின்றது . பெரும்பாணாற்றுப் படையில் கழுதைச் சாத்து செல்லும் சுங்கப் பெரு வழியில் அணிலும் கருப்பையும் ஆடாது என்று சொல்வதையும் காண்க . மனிதர் செல்லும் வழியில் அணில் ஆடுவதில்லை என்பதையே பெரும்பாண் கூறுவதாகத் தெரிகின்றது. இந்த அணில் அடிக்கடி கத்துவதைப் பிளிற்றும் ( shrill ) என்று ஐந்திணை எழுபது கூறுகின்றது. இந்த அணிலை விலங்கு நூலார் Funambulus palmarum என்று அழைப்பர். ஆங்கிலத்தில் “ The three – striped palm squirrel என்பர் . ஐந்து வரியுடைய அணிலையும் ( The five – striped palm squirrel ) தொல்காப்பியர் தெரிந்தே அதனினின்றும் விலக்கி மூவரியணில் கூறினரென்று கருத இடமுண்டு .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
The three – striped palm squirrel, Funambulus palmarum, Indian palm squirrel
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
மக்கள் போகிய அணில் ஆடு முன்றில் – குறு 41/4
அணில் பல் அன்ன கொங்கு முதிர் முண்டகத்து – குறு 49/1
அணில்வரிகொடும்காய் வாள் போழ்ந்திட்ட – புறம் 246/4
வேனல் வரி அணில் வாலத்து அன்ன – புறம் 307/4
வரி புற அணிலொடு கருப்பை ஆடாது – பெரும் 85
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது