சொல் பொருள்
(வி.மு) அத்தன்மையானவை, அதனைப் போன்றவை,
2. (இ.சொ) ஓர் உவம உருபு,
3. (பெ.அ) அன்னத்தின் என்பதின் கடைக்குறை,
சொல் பொருள் விளக்கம்
அத்தன்மையானவை, அதனைப் போன்றவை,
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
Are of the same kind, are similar
a comparison marker
swan’s
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்று ஓர் அன்ன – புறம் 192/2,3 கேடும் ஆக்கமும் தாமேவரினல்லது பிறர் தர வாரா நோதலும் அது தீர்தலும் அவற்றை ஒப்பத் தாமே வருவன. பரி அரை கமுகின் பாளை அம் பசும் பூ கரு இருந்து அன்ன கண்கூடு செறி துளை உருக்கி அன்ன பொருத்துறு போர்வை சுனை வறந்து அன்ன இருள் தூங்கு வறு வாய் பிறை பிறந்து அன்ன பின் ஏந்து கவை கடை நெடும் பணை திரள் தோள் மடந்தை முன்கை குறும் தொடி ஏய்க்கும் மெலிந்து வீங்கு திவவின் மணி வார்ந்து அன்ன மா இரு மருப்பின் பொன் வார்ந்து அன்ன புரி அடங்கு நரம்பின் தொடை அமை கேள்வி இட வயின் தழீஇ – பெரும் 7-16 பருத்த அடிமரத்தையுடைய கமுகின் பாளையாகிய அழகினையுடைய இளம் பூ (விரியாமல்)கருவாய் இருந்ததைப் போன்ற (இரண்டு)கண்ணும் கூடின செறிந்த துளையினையும்; உருக்கி (ஒன்றாக வார்த்ததைப்)போன்ற (தோல் வேறுபாடு தெரியாமல்)பொருத்தப்பட்ட உறையினையும்; சுனை வற்றியதைப் போன்ற இருள் செறிந்த உள்நாக்கில்லாத வாயினையும்; பிறை பிறந்ததைப் போன்று பின்புறம் ஏந்தியிருக்கின்ற பிளவுபட்ட கடையினையும்; நீண்ட மூங்கில் (போன்ற)திரண்ட தோளினையுடைய பெண்ணின் முன்கையில்(உள்ள) குறிய தொடியைப் போன்ற, நெகிழ்ந்தும் இறுகியும் உள்ள வார்க்கட்டினையும்; நீலமணி (நீரைப்போல்)ஒழுகினாற் போன்ற கருமை நிறத்தையுடைய பெரிய தண்டினையும்; பொன் (உருக்கப்பட்டுக் கம்பியாக)வார்த்ததைப் போன்ற முறுக்கு அடங்கின நரம்பினையும் உடைய கட்டமைந்த யாழை இடத்தோளின் பக்கத்தே அணைத்து, துணை புணர் அன்ன தூ நிற தூவி இணை அணை மேம்பட பாய் அணை இட்டு – நெடு 132,133 தம் துணையைப் புணர்ந்த அன்னச் சேவலின் தூய நிறத்தையுடைய (சூட்டாகிய)மயிரால் இணைத்த மெத்தையை மேலாகப் பரப்பி, (அத்தூவிகளுக்கு மேலாக)தலையணைகளும் இட்டு
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்