Skip to content

அன்பு

சொல் பொருள்

அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம்

தன் கிளை செறாமை,காதல்,தான் வேண்டப்பட்ட பொருளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி

அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில் நிகழ்தலாகிய ஒருவகை நெகிழ்ச்சிப் பண்பு

அருள்

சொல் பொருள் விளக்கம்

(1) அன்பு எனப்படுவது தன் கிளை செறாமை. (கலி. 133.)

(2) அன்பாவது தன்னால் புரக்கப்படுவார் மேல் உளதாகிய காதல். (புறம். 5. ப, 2.) (தொல். பொருள். 53. நச்)

(3) அன்பு எனப்பட்டது, தான் வேண்டப்பட்ட பொருளின்கண் தோன்றும் உள்ள நிகழ்ச்சி…. ‘அது குடத்துள் விளக்கும், தடற்றுள் வாளும் போல’ இது காண் அன்பு என்று போதத்திறந்து காட்டலாகாது. அன்பு உடையரான குணங் கண்டவிடத்து இவை உண்மையான் ஈங்கு அன்பு உண்டென்று அனுமித்துக் கொள்ளற் பாற்று. (இறையனார். 1. நச்.)

(4) அன்பு என்பது அருட்கு முதலாகி மனத்தில் நிகழும் நேயம். அஃது உடையார்க்குப் பிறன்கண் துன்பம் கண்டுழிக் கண்ணீர் விழுமாதலின் அவ் அருளானே அன்புடைமை விளங்கும் என்பது. (தொல். பொருள். 260. பேரா.)

(5) தொடர்பு பற்றிச் செல்லும் அன்பு. (திருக். 757.பரி.)

(6) ஒருவரை ஒருவர் இன்றியமையாமை. (அகம். 94. வேங்கடவிளக்கு)

(7) அன்பு என்பதற்கு அன்று என்பது சொற்பொருள். தாளாற்றித் தந்த பொருளெல்லாம் தமக்கல்ல; (அன்பு – அருள்) தக்கார்க்கு வேளாண்மை செய்தற் பொருட்டே என்பது கருத்து. (திருக்குறள். அறம். 66.)

(8) அன்று என்னும் அன்பு தமக்கன்று என்னும் கருத்தில் நிகழ்தலாகிய ஒருவகை நெகிழ்ச்சிப் பண்பு. (திருக்குறள் அறம். 96)

அன்பு – அருள்:

(1) அன்பு காதலில் இருந்தே பிறப்பது அருளாக மலர்வது. பற்று நேசம் ஆகிய பண்புகளாக விரிவது. ஆனால் அஃது அருளுக்கே மிகவும் அணிமையுடையது அதற்குக் கிட்டத்தட்ட ஒப்புடையது. ஏனெனில் காதலும், பற்றும், பாசமும், நேசமும், ஏதேனும் ஒரு ஏதுவைப் பற்றுக் கோடாகக் கொண்டே நிகழ்பவை. அன்போ, அருள்போல ஏதுவும் பற்றுக்கோடும் இன்றி யாவர் மாட்டும் செல்வது. அருளுக்கும் இதற்கும் உள்ள ஒரே வேற்றுமை-அருள் இனத்தினின்று சமுதாயம், சமுதாயத்தில் இருந்து குடும்பம் என அகம் நோக்கிய பண்பு. ஆனால் அன்பு
குடும்பத்தில் இருந்து சமுதாயம், சமுதாயத்தில் இருந்து இனம் எனப் புறம் நோக்கியபண்பு அருள் இன வாழ்வில் செயலாற்றும்
அன்பு சமுதாய வாழ்வில் செயலாற்றும். (திருக்குறள். மணிவிளக்கவுரை ஐஐ.591)

(2) “தொடர்புபற்றாதே வருத்தமுற்றார் மேற்செல்வதாய அருள், தொடர்புபற்றிச் செல்லும் அன்பு முதிர்ந்துழி உளதாவது.”

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *