அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள்
1. சொல் பொருள்
(பெ) 1. மிகுதி, 2. சோறு, 3. சோற்றுத் திரள், 4. தோற்ற மன்னனைச் சுற்றி வெற்றி வீரர்கள் ஆடும் ஆட்டம், வெற்றிக்கூத்து
2. சொல் பொருள் விளக்கம்
அமலை என்பதற்கு மிகுதி என்பது பொருள். இதுவே ஆகுபெயராகி, மிகுதியான சோற்றுத்திரள் அமலை எனப்படுகிறது. தட்டு அல்லது இலை நிறையப் போடப்பட்ட உணவே அமலை
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
abundance, huge quantity (of boiled rice)
dance of victorious soldiers around the defeated king
dance of soldiers who have gathered round a fallen enemy king
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு – சிறு 194
குற்றுதலில் சிறந்த அரிசியால் ஆக்கின திரளான வெள்ளைச் சோற்றை
அத்த வேம்பின் அமலை வான் பூ – குறு 281/3
பாலை நிலத்து வேம்பின் நிறைந்த வெள்ளிய பூக்கள்
ஒள்வாள் அமலை ஆடிய ஞாட்பின் – அகம் 142/14
ஒள்வாள் அமலை என்னும் வெற்றிக் கூத்தை ஆடிய போர்க்களத்தின்
பழம் சோற்று அமலை முனைஇ வரம்பில் – பெரும் 224
வெண் எறிந்து இயற்றிய மா கண் அமலை/தண்ணென் நுண் இழுது உள்ளீடு ஆக – மலை 441,442
வெண்மை(யான கஞ்சியை வடித்து)நீக்கி ஆக்கிய பெரிய உருவமுடைய (சூடான)சோற்றுருண்டையில்,
செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது – குறு 277/2
செந்நெல் சோற்றின் மிகுதியையையும், மிக வெள்ளையான வெண்ணெய்யையும்
அத்த வாகை அமலை வால் நெற்று – குறு 369/1
அரிய வழியில் உள்ள வாகையின் ஒலியெழுப்பும் வெண்மையான நெற்று
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி – கலி 50/13
வீழ்ந்திருக்கும் பாறையில் எடுத்துண்ணும் உணவையும், திரண்ட சோறினையும் கொண்ட சிறுகுடியிலிருக்கும்
பெரும் சோற்று அமலை நிற்ப நிரை கால் – அகம் 86/2
அறுசுவை உணவை உண்ணும் ஆரவாரம் இடைவிடாமல் நிற்க, வரிசையான கால்களுடன்
ஆம்பல் அகல் இலை அமலை வெம் சோறு – அகம் 196/5
ஆம்பலின் அகன்ற இலையில் திரளான விருப்பந்தரும் சோற்றை
ஊன்சோற்று அமலை பாண் கடும்பு அருத்தும் – புறம் 33/14
தசையுடன் சேர்த்த பெரும் சோற்றுத் திரளைப் பாணரின் சுற்றம் உண்ணும்படி செய்யும்
அமலை கொழும் சோறு ஆர்ந்த பாணர்க்கு – புறம் 34/14
திரண்ட கொழுத்த சோற்றினை வேண்டுமளவு தின்ற பாணர்களுக்கு
பைம் ஞிணம் பெருத்த பசு வெள் அமலை/வருநர்க்கு வரையாது தருவனர் சொரிய – புறம் 177/14,15
குழைவான கொழுப்பு நிறைந்த சூடான வெண் சோற்று உருண்டையை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்