சொல் பொருள்
1. (வி) 1. நிறைவடை, 2. உருவாகு, நிறுவப்படு, வடிவமைக்கப்படு, 3. ஒரு தன்மையுடையதாக அல்லது நிலையுடையதாக ஆகு, 4. பொருந்து, ஏற்புடையதாகு, 5. பொருந்து, 6. நெருங்கு, 7. இணை, பொருத்து, பதி, சேர், உள்ளீடுசெய் 8. ஆற்றியிரு, பொறு, 9. தங்கு, 10. திருப்தியடை
2. (பெ) கெட்டி மூங்கில்;அமை என்பது மூங்கிலின் மறு பெயராயினும் அதனுள் ஒரு சாதி என்று அறியப்படுகிறது;அமை என்பது முள்ளில்லா மூங்கில்
சொல் பொருள் விளக்கம்
அமை என்பது மூங்கிலின் மறு பெயராயினும் அதனுள் ஒரு சாதி என்று அறியப்படுகிறது.
‘அமையொடு வேய்கலாம் வெற்ப’ என்று பழமொழி நானூறு பேசுகிறது.
அதன் பழைய உரை ‘அமை என்பது முள்ளில்லா மூங்கில்’ என்று அறிவிக்கிறது. (திருக்குறள் அழகும் அமைப்பும். 97.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
be complete, be formed, established, formulated, be or become or turn to be something of a given nature, be suitable, agreeable, be attached, connected, joined;, crowd together, be close, connect, inlay, bring together, bear with, tolerate, abide, remain, be satisfied, solid bamboo
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: நகை தாழ்பு துயல்வரூஉம் வகை அமை பொலம் குழை – திரு 86 ஒளி தங்கி அசையும் தொழிற்கூறு அமைந்த பொன்னாலான மகரக்குழை மண் அமை முழவின் பண் அமை சீறியாழ் – பொரு 109 மார்ச்சனை அமைந்த முழவினோடே பண் (நன்கு)அமைந்த சிறிய யாழையுடைய விரல் என நிமிர்ந்த நிரல் அமை புழுக்கல் – பொரு 114 விரல் என்னும்படி நெடுகின, ஒரே அளவு அமைந்த, (பருக்கை பருக்கையான)சோற்றையும் உறை அமை தீம் தயிர் கலக்கி நுரை தெரிந்து – பெரும் 158 உறையினால் கெட்டியாகத் தோய்ந்த இளம் புளிப்பான தயிரைக் கடைந்து, வெண்ணையை எடுத்து, கை அமை விளக்கம் நந்து-தொறும் மாட்ட – முல் 49 (பாவையின்)கைகளில் அமைந்த விளக்குகள் அவியுந்தோறும் (நெய் விட்டுத்)தூண்டிவிட வழை அமை சாரல் கமழ துழைஇ – மலை 181 சுரபுன்னை மரங்கள் நெருங்கிநிற்கும் மலைச்சாரல் கமகமக்கும்படி கிளறி வைகு புலர் விடியல் மெய் கரந்து தன் கால் அரி அமை சிலம்பு கழீஇ – நற் 12/5 இரவில் தங்கியிருந்த இருள் நீங்கிய விடியற்காலத்தே, தன்னை ஒளித்துக்கொண்டு, தனது காலின் பரற்கற்கள் பெய்யப்பட்ட சிலம்புகளைக் கழற்றி விரை ஒலி கூந்தல் விட்டு அமைகலனே – நற் 141/12 மணமூட்டப்பெற்ற தழைத்த கூந்தலிற் கிடந்து பெறும் இன்பத்தை விட்டு நீங்கியிருத்தலை யான் ஆற்றேன் மறந்து அவண் அமையார் ஆயினும் – அகம் 37/1 (தலைவர்) என்னை மறந்து வெளியூரிலேயே தங்கிவிடமாட்டாரெனினும் அரி தேர் நல்கியும் அமையான் – பெரும் 490 பொன் (வேய்ந்த)தேரைத் தந்தும் மனநிறைவு கொள்ளானாய் திருந்து அமை விளைந்த தே கள் தேறல் – மலை 522 நன்குசெய்யப்பட்ட கெட்டி மூங்கில் குழாயில், நன்கு பக்குவப்பட்ட, தேனிற்செய்த கள்ளின் தெளிவும்,
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்