சொல் பொருள்
அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித்தோன்றும் இரக்கம்.
வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள்
சொல் பொருள் விளக்கம்
(1) தொடர்பு பற்றாதே வருத்தமுற்றார்மேல் செல்வதாய அருள். (திருக். 757. பரி.)
அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு.
(2) அருளாவது ஒன்றின் துயர்கண்டாற் காரணம் இன்றித்தோன்றும் இரக்கம். (புறம். 5. ப.உ.) (தொல். பொருள். 53. நச்.)
எருமை அன்ன கருங்கல் இடைதோறு
ஆனிற் பரக்கும் யானைய முன்பின்
கானக நாடனை நீயோ பெரும!
நீயோர் ஆகலின் நின்ஒன்று மொழிவல்;
அருளும் அன்பும் நீக்கி நீங்கா
நிரயங் கொள்பவரொடு ஒன்றாது காவல்
குழவி கொள்பவரின் ஓம்புமதி;
அளிதோ தானேஅது பெறல்அருங் குரைத்தே.
எருமை போன்ற கருங்கற்கள் உள்ள இடங்களில் திரியும் பசுக்கூட்டம் போல யானைகள் திரியும் காடுகளுடைய நாட்டுக்குத் தலைவனே! நீ ஒப்பற்றவனாகையால் உனக்கு ஒன்று சொல்வேன். அருளையும் அன்பையும் நீக்கி, எப்பொழுதும் நரகத்தைத் தங்கள் இருப்பிடமாகக் கொள்ள விரும்புபவர்களோடு சேராமல், தாய் தன் குழந்தையைக் காப்பது போல் (அருளோடும் அன்போடும்) நீ உன் நாட்டைப் பாதுகாப்பாயாக. அதுவே செய்யத்தக்க செயல்; அத்தகைய செயல் செய்வதற்கான வாய்ப்பைப் பெறுவது அரிது.
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்