Skip to content
அல்குல்

அல்குல் என்பதன் பொருள்பிட்டப்பகுதி,இடுப்பு பகுதி, இடை.

1. சொல் பொருள்

(பெ)பெண்களின் இடுப்புக்குக்கீழான பின்பிறம்; பெண்களின் இடைக்குக் கீழே, தொடைக்கு மேலே உடலைச் சுற்றிலும் இருக்கும் பகுதி. பெரும்பாலும் பிட்டப்பகுதி.

கண்புருவத்தை ஒட்டியிருக்கும் நெற்றிப் பகுதி

இடுப்பு பகுதி, இடை, பெண் உறுப்பு

அல்குதல் = குறுகுதல்

2. சொல் பொருள் விளக்கம்

தமிழ் இலக்கியத்தில் அல்குல் எனும் சொல் விரிவாக பாவை அழகை வர்னிக்கும் சொல்லாக பயன் படுத்த பெற்றுள்ளது.சில பாடல்களிள் இறைவியை புகழும் சொல்லாகவும் கையாலப் பட்டுள்ளது.

மொழிபெயர்ப்புகள்

3. ஆங்கிலம்

Hip, Waist, the circumference between the hip and the loins, the back of a hip that forms one of the fleshy parts on which a person sits, monsveneris.

4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு

இங்கே அல்குல் என்பது பெண்குறி என்று தவறாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. அல்குல் என்பது இடுப்புக்குச் சற்றே கீழ் உள்ள பகுதி. அது இடுப்பைச் சுற்றி எந்த இடமாகவேண்டுமானாலும் இருக்கலாம்.

கொள்வீர் அல்குல் ஓர் கோவணம் – தேவா-சம்:582/2

(அரையிற் கோவணம் உடுத்தியவராய் விளங்கும் கள்வரே) என்கிற சம்பந்தர் தேவாரத்தில் அல்குலில் கோவணம் அணிந்தவராக இறைவனை விளிக்கிறார் சம்பந்தர். இடுப்பில் கயிறுகட்டி, அதில் கோவணத்தைச் செருகி, முன்பக்க மானத்தை மறைத்துப் பின்பக்கமாக இழுத்துப் புட்டத்திற்கு மேலே செருகியிருப்பர்.

எனவே, அல்குல் என்பது அடிவயிறு, அல்லது அடிமுதுகு என்றாகிறது.

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் – ஐங் 72/2

என்ற அடி, அல்குலில் கூந்தல் கிடந்து அசையும் என்கிறது. குட்டையான கூந்தல் முதுகில் கிடந்து அசைவதைப் பற்றி யாரும் பாராட்டிப்பேசமாட்டார்கள். நீண்ட கூந்தல் முதுகுக்கும் கீழே தொங்கி, இடுப்புக்கும் கீழே எழுந்துநிற்கும் புட்டத்தின் மேல் பட்டு, நடக்கும்போது முன்னும் பின்னும், பக்கவாட்டிலும் அசைவதே துயல்வருதல்.

இதைத்தான்

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை – நற் 198/6

என்கிறது நற்றிணை. எனவே அல்குல் பெரும்பாலும் பெண்களின் இடுப்புக்குக்கீழான பின்பிறம் என்பதே சரி எனப்படுகிறது. எனவே, மிகப்பெரும்பாலும் பெண்களின் அடிஇடுப்பைச் சுற்றி அல்குல் அரும்புவதாக அறிகிறோம்.

ஒரு உயரமான நெற்குதிருக்கும், இத்தகைய பகுதியை இது குறிக்கும்.

பகட்டு ஆ ஈன்ற கொடுநடைக் குழவி
கவைத் தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்
ஏணி எய்தா நீள் நெடு மார்பின் ——————–
குமரி மூத்த கூடு ஓங்கு நல் இல்- பெரும் 243-247

எருதுகளோடு கூடிய பசு ஈன்ற வளைந்த காலால் நடக்கும் நடையைக் கொண்ட கன்றின்
கவைத்த தாம்புக்கயிறு கட்டிய சிறு கழி ஊன்றிய இடைப்பகுதியையும்
ஏணிவைத்தாலும் எட்டாத நீண்ட நெடிய மார்பினையும், ——— கொண்ட
குமரித்தன்மை முதிர்ந்த கூடுகள் உயர்ந்து நிற்கும் நல்ல இல்லங்கள்.

இது தானியங்கள் சேர்த்துவைக்கும் குதிர். அதற்கு அடிப்பக்கத்தில் ஒரு சிறு தறியில் ஒரு
இளங்கன்று கட்டப்பட்டிருக்கிறது. இக் குதிருக்குக் கால்கள் கிடையா அல்லவா! எனவே
இதன் தரையை ஒட்டிய பகுதியையே இதன் அல்குல் என்கிறார் புலவர்.

பெரும்பாலும் இது பெண்களின் இடைக்குச் சற்றுக் கீழே உள்ள பகுதியையே குறிக்கும்.

பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல் – நற் 8/2

பல பூக்களை மாறுபடத் தொடுத்த தழையுடை அசையும்படி உடுத்த அல்குல்.

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல் – திரு 16

பலமணிகள் கோத்த வடமாகிய மேகலையை அணிந்த அல்குல்

மென்தோள், துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் – சிறு 262

மென்மையான தோளினையும், துகில் சூழ்ந்த அல்குலினையும், அசைந்த சாயலினையும் கொண்ட மகளிர் அல்குலைச் சுற்றி அணியப்படுவன:

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல் – திரு 146

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ – திரு 204

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல் – பொரு 39

பை விரி அல்குல் கொய் தழை தைஇ – குறி 102

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல் – ஐங் 310/1

பூந் துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல் – அகம் 387/7

அல்குல் பார்ப்பதற்கு எப்படி இருக்கும்?

கோடு ஏந்து அல்குல் – நற் 198/6

ஐது அகல் அல்குல் – நற் 200/10

ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து – நற் 252/8

துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல் – குறு 294/5

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17

இதில் பாம்பின் படம்போன்று அகன்ற அல்குல் என்ற வருணனையே, பிற்காலத்தார் அல்குல்
என்பது பெண்ணுறுப்பைக் குறிப்பதாகக் கொள்ள இடம் கொடுத்தது.

பல் காசு நிரைத்த சில் காழ் அல்குல்/கை புனைந்து இயற்றா கவின் பெறு வனப்பின் - திரு 16,17

பருமம் தாங்கிய பணிந்து ஏந்து அல்குல்/மாசு இல் மகளிரொடு மறு இன்றி விளங்க - திரு 146,147

திருந்து காழ் அல்குல் திளைப்ப உடீஇ - திரு 204

வண்டு இருப்பு அன்ன பல் காழ் அல்குல்/இரும் பிடி தட கையின் செறிந்து திரள் குறங்கின் - பொரு 39,40

துகில் அணி அல்குல் துளங்கு இயல் மகளிர் - சிறு 262

கவை தாம்பு தொடுத்த காழ் ஊன்று அல்குல்/ஏணி எய்தா நீள் நெடு மார்பின் - பெரும் 244,245

பைம் காழ் அல்குல் நுண் துகில் நுடங்க - பெரும் 329

பூ துகில் மரீஇய ஏந்து கோட்டு அல்குல்/அம் மாசு ஊர்ந்த அவிர் நூல் கலிங்கமொடு - நெடு 145,146

பை விரி அல்குல் கொய் தழை தைஇ - குறி 102

பாசிழை பகட்டு அல்குல்/தூசு உடை துகிர் மேனி - பட் 147,148

திதலை அல்குல் பெரும் தோள் குறு_மகட்கு - நற் 6/4

பல் பூ பகை தழை நுடங்கும் அல்குல்/திரு மணி புரையும் மேனி மடவோள் - நற் 8/2,3

காழ் பெயல் அல்குல் காசு முறை திரியினும் - நற் 66/9

திதலை அல்குல் குறுமகள் - நற் 77/11

அகன்ற அல்குல் ஐது அமை நுசுப்பின் - நற் 101/7

சில் பொறி அணிந்த பல் காழ் அல்குல்/மணி ஏர் ஐம்பால் மாயோட்கு என்று - நற் 133/4,5

இழை அணி அல்குல் விழவு ஆடு மகளிர் - நற் 138/9

திதலை அல்குல் தே மொழியாட்கே - நற் 161/12

கோடு ஏந்து அல்குல் அரும்பிய திதலை - நற் 198/6

ஐது அகல் அல்குல் மகளிர் இவன் - நற் 200/10

கோடு ஏந்து அல்குல் நீள் தோளீரே - நற் 213/11

பசும் காழ் அல்குல் பற்றுவனன் ஊக்கி - நற் 222/5

ஒழுகு நுண் நுசுப்பின் அகன்ற அல்குல்/தெளி தீம் கிளவி யாரையோ என் - நற் 245/5,6

ஐது ஏய்ந்து அகன்ற அல்குல் மை கூர்ந்து - நற் 252/8

கோடு ஏந்து அல்குல் அம் வரி வாட - நற் 282/2

திதலை அல்குல் நலம் பாராட்டிய - நற் 307/4

தழை அணிந்து அலமரும் அல்குல் தெருவின் - நற் 320/3

திருந்து_இழை அல்குல் பெரும் தோள் குறு_மகள் - நற் 366/3

கோடு ஏந்து அல்குல் தழை அணிந்து நும்மொடு - நற் 368/3

திதலை அல்குல் முது பெண்டு ஆகி - நற் 370/6

ஐது அகல் அல்குல் அணி பெற தைஇ - நற் 390/5

திதலை அல்குல் என் மாமை கவினே - குறு 27/5

மாண் வரி அல்குல் குறுமகள் - குறு 101/5

தழை அணி அல்குல் மகளிருள்ளும் - குறு 125/3

தழை அணி அல்குல் தாங்கல் செல்லா - குறு 159/1

எய்தினர்-கொல்லோ பொருளே அல்குல்/அம் வரி வாட துறந்தோர் - குறு 180/5,6

மணி மிடை அல்குல் மடந்தை - குறு 274/7

துத்தி பாந்தள் பைத்து அகல் அல்குல்/திருந்து இழை துயல்வு கோட்டு அசைத்த பசும் குழை - குறு 294/5,6

தழை தாழ் அல்குல் இவள் புலம்பு அகல - குறு 345/4

திதலை அல்குல் நின் மகள் - ஐங் 29/4

திதலை அல்குல் துயல்வரும் கூந்தல் - ஐங் 72/2

ஐது அமைந்து அகன்ற அல்குல்/நெய்தல் அம் கண்ணியை நேர்தல் நாம் பெறினே - ஐங் 135/2,3

ஐது அமைந்து அகன்ற அல்குல்/கொய் தளிர் மேனி கூறு-மதி தவறே - ஐங் 176/3,4

ஆய் தழை நுடங்கும் அல்குல்/காதலி உறையும் நனி நல் ஊரே - ஐங் 291/3,4

பல் காழ் அல்குல் அம் வரி வாட - ஐங் 306/2

பொலம் பசும் பாண்டில் காசு நிரை அல்குல்/இலங்கு வளை மென் தோள் இழை நிலை நெகிழ - ஐங் 310/1,2

தேர் அகல் அல்குல் அம் வரி வாட - ஐங் 316/2

நல் எழில் அல்குல் வாடிய நிலையே - ஐங் 351/5

சாய் இறை பணை தோள் அம் வரி அல்குல்/சே இழை மாதரை உள்ளி நோய் விட - ஐங் 481/1,2

ஏந்து கோட்டு அல்குல் முகிழ் நகை மடவரல் - பதி 18/5

பூ துகில் அல்குல் தேம் பாய் கூந்தல் - பதி 54/5

மாண் வரி அல்குல் மலர்ந்த நோக்கின் - பதி 65/7

கொடுகொட்டி ஆடும்-கால் கோடு உயர் அகல் அல்குல்/கொடி புரை நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ - கலி  1/6,7

அலர் முலை ஆகத்து அகன்ற அல்குல்/சில நிரை வால் வளை செய்யாயோ என - கலி  14/5,6

இழை அணி அல்குல் என் தோழியது கவினே - கலி 50/24

கோடு எழில் அகல் அல்குல் கொடி அன்னார் முலை மூழ்கி - கலி 67/10

அல்குல் வரி யாம் காணும்-கால் - கலி 80/21

ஒருத்தி வரி ஆர் அகல் அல்குல் காழகம் - கலி 92/37

அகல் அல்குல் தோள் கண் என மூ வழி பெருகி - கலி 108/2

கண்ணி எடுக்கல்லா கோடு ஏந்து அகல் அல்குல்/புண் இல்லார் புண் ஆக நோக்கும் முழு மெய்யும் - கலி  109/10,11

பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல்/நுண் வரி வாட வாராது விடுவாய் - கலி  125/17,18

ஒலி குழை செயலை உடை மாண் அல்குல்/ஆய் சுளை பலவின் மேய் கலை உதிர்த்த - அகம் 7/19,20

அம் வயிற்று அகன்ற அல்குல் தைஇ - அகம் 21/3

வரி அணி அல்குல் வால் எயிற்றோள்-வயின் - அகம் 33/16

திதலை அல்குல் எம் காதலி - அகம் 54/21

பல் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்/மெல் இயல் குறு_மகள் புலந்து பல கூறி - அகம் 75/19,20

அம் வரி அல்குல் ஆயமும் உள்ளாள் - அகம் 117/2

அரியல் பெண்டிர் அல்குல் கொண்ட - அகம் 157/1

பசும் காழ் அல்குல் மாஅயோளொடு - அகம் 167/2

திதலை அல்குல் அம் வரி வாடவும் - அகம் 183/2

திதலை அல்குல் குறு_மகள் அவனொடு - அகம் 189/9

தழை அணி பொலிந்த கோடு ஏந்து அல்குல்/பழையர் மகளிர் பனி துறை பரவ - அகம் 201/6,7

திதலை அல்குல் வரியும் வாடின - அகம் 227/2

பெரும் தண் மா தழை இருந்த அல்குல்/ஐய அரும்பிய சுணங்கின் வை எயிற்று - அகம் 230/3,4

பொலம் காசு நிரைத்த கோடு ஏந்து அல்குல்/நலம் கேழ் மா குரல் குழையொடு துயல்வர - அகம் 269/15,16

ஐது அகல் அல்குல் தழை அணி கூட்டும் - அகம் 275/16

அகல் எழில் அல்குல் அம் வரி வாட - அகம் 307/2

தழை அணி அல்குல் செல்வ தங்கையர் - அகம் 320/3

அம் வரி அல்குல் அணையா-காலே - அகம் 342/13

ஐது ஏந்து அல்குல் யாம் அணிந்து உவக்கும் - அகம் 345/9

அல்குல் தழை கூட்டு அம் குழை உதவிய - அகம் 383/8

அகல் அமை அல்குல் பற்றி கூந்தல் - அகம் 385/13

பூ துகில் இமைக்கும் பொலன் காழ் அல்குல்/அம் வரி சிதைய நோக்கி வெம் வினை - அகம் 387/7,8

ஐது அகல் அல்குல் கவின் பெற புனைந்த - அகம் 390/6

பொறி வரி அல்குல் மாஅயோட்கு என - அகம் 397/7

இழை அணி பொலிந்த ஏந்து கோட்டு அல்குல்/மடவரல் உண்கண் வாள் நுதல் விறலி - புறம் 89/1,2

கூம்பு அவிழ் முழு_நெறி புரள்வரும் அல்குல்/ஏந்து எழில் மழை கண் இன் நகை மகளிர் - புறம் 116/2,3

சிறு நுதல் பேர் அகல் அல்குல்/சில சொல்லின் பல கூந்தல் நின் - புறம் 166/15,16

கோடு ஏந்து அல்குல் குறும் தொடி மகளிரொடு - புறம் 240/4

மெல் இழை மகளிர் ஐது அகல் அல்குல்/தொடலை ஆகவும் கண்டனம் இனியே - புறம் 271/3,4

தொடலை அல்குல் தொடி தோள் மகளிர் - புறம் 339/6

அம் பூ தொடலை அணி தழை அல்குல்/செம் பொறி சிலம்பின் இளையோள் தந்தை - புறம் 341/2,3

கணி மேவந்தவள் அல்குல் அம் வரியே - புறம் 344/9

பொலம் செய் பல் காசு அணிந்த அல்குல்/ஈகை கண்ணி இலங்க தைஇ - புறம் 353/2,3

அல்குல் தாங்கா அசைஇ மெல்லென - புறம் 361/17

ஐது அகல் அல்குல் மகளிர் - புறம் 389/16

ஆடுமகள் அல்குல் ஒப்ப வாடி - புறம் 393/21

கோடு ஏந்து அகல் அல்குல் பெண்டிர் தம் பெண் நீர்மை - நாலடி:36 4/1

அம் கோட்டு அகல் அல்குல் ஆய் இழையாள் நம்மொடு - நாலடி:38 2/1

புனை பூம் தழை அல்குல் பொன் அன்னாய் சாரல் - ஐந்50:14/1

பாரித்த அல்குல் பணைத்தோளார் சேரியுள் - திணை50:34/3

படம் அணி அல்குல் பரதர் மகளிர் - திணை50:45/2

அல்குல் விலை பகரும் ஆய்தொடியும் நல்லவர்க்கு - திரி:25/2

பை ஆர் அகல் அல்குல் பைந்தொடி எக்காலும் - பழ:109/2

பை அரவு அல்குல் பணை தோளாய் பாத்து அறிவு என் - பழ:364/3

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

1 thought on “அல்குல்”

  1. பா. துளசிமணி

    நான் தமிழில் புலமை உடையவன் அல்லன். இருப்பினும் சில ஆங்கில நுல்களைத் தமிழிலும் திரு சம்பந்த முதலியாரின் நாடகங்களில் மூன்றை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்துள்ளேன். நான் தூய தமிழில் எழுதுவதைக் கொள்கையாகக் கொண்டவன். எனக்கு உங்கள் அகராதி பெரும் உதவியாக உள்ளது.

    அழகான பெண்னின் அளவுகளை 36-24-36 என்பது போல் அங்குல அலகுகளில் குறிப்பது உலக வழக்கு. மார்பு 36 (பெரியது)- இடை 24 (ஒப்பீட்டளவில் சிறியது)- புட்டம் 36(பெரியது) என்பது இதன் விரிவு.
    முலை, புட்டம் போல வெளிக் கோடாகக் கூடத் தெரியாது முழுதும் ஆடையால் மறைக்கப் பட்ட பெண் உறுப்பை வெளிப்படையாக வர்ணிப்பது நாகரிகமான செயல் அல்ல. தேவாரத்தில் இந்தச் சொல் பெண் உறுப்பு என்று பொருள் கொள்வதை ஒரே ஒரு உரை ஆசிரியர் மட்டும் கண்டித்துப் பின் பகுதியைக் குறிக்கிறது எனக் குறிப்பிட்டார்.
    பின்னொடு கெழீஇய தட அரவு அல்குல் – கலி 125/17

    இதில் பாம்பின் படம்போன்று அகன்ற அல்குல் என்ற வருணனையே, பிற்காலத்தார் அல்குல் என்பது பெண்ணுறுப்பைக் குறிப்பதாகக் கொள்ள இடம் கொடுத்தது. உண்மையில் இதுதான் அல்குல் புட்டத்தையே குறிக்கிறது என்பதற்குச் சிறந்த ஆதாரம். நீங்கள் வெளியிட்ட பெண்ணின் படத்தைப் பக்கவாட்டுக் (கோணத்தில்) பார்வையாகப் பாருங்கள். நாகப் பாம்பின் விரித்து ஆடும் தலையின் படத்தையும் பக்கவாட்டுப் பார்வையில் பாருங்கள். மின்னலிடை, பின்னோக்கிய வளைவு (புட்டத்திற்கு உவமை), உயரே தூக்கப் பட்ட தலையின் கீழ் உள்ள பாம்பின் உடல் பக்க வாட்டில் பெண்ணின் கால்கள் ஒரே காலாகத் தெரிவதற்கு உவமை என்று புரிந்து கொள்ளும்போது இது புட்டத்துக்கே சாலப் பொருந்தும் உவமை என அறியலாம்.

    இச்சொல்லைஆராய்ந்து பரவலாக இருந்த கடுந் தவறை ஆதாரத்தோடு திருத்தித் தாங்கள் விளக்கியிருப்பதற்குப் பலர் நன்றி கூறுவார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *