சொல் பொருள்
அழுக்கான ஆற்றில் உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. (திருக். தண்ட. அதி. 17.)
‘அழுக்காறு’ என்பதற்கு ‘அழுக்கடைவு’ எனவும் ‘அழுக்காறாமை’ என்பதற்கு ‘அழுக்கடையாமை’ எனவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது.
சொல் பொருள் விளக்கம்
(1) அறு என்பது ‘வகு’ என்னும் பொருட்டு. வகுக்கப்பட்டது வழி. அறுக்கப்பட்டது ஆறு. ஆறு எனினும் வழி எனினும் ஒக்கும். அழுக்கான ஆற்றில் உள்ளத்தைச் செல விடுதல் அழுக்காறு ஆயிற்று. (திருக். தண்ட. அதி. 17.)
(2) அழுக்காறு என்பதை அழுக்கு வழி என்று பொதுவாகப் பொருள் செய்யத் தோன்றும். ஆனால் ‘பேணாது அழுக்கறுப்பான்’ ‘கொடுப்பது அழுக்கறுப்பான்’ ‘அழுக்கற்றகன்றாரும் இல்லை’ என்னும் தொடர்களால் அழுக்கறு என்னும் பகுதி கொண்டது இச் சொல்லமைப்பு என்று தெரிகிறது. ‘அழுக்கு’ ‘அறு’ என்னும் இரு பகுதிகள் சேர்ந்து இரண்டும் ஒரு சொல்லாகி ‘அழுக்கறு’ என வந்தது. ‘அழுக்கறு’ என்பதற்கு ‘அழுக்கடை’ எனவும், ‘அழுக்காறு’ என்பதற்கு ‘அழுக்கடைவு’ எனவும் ‘அழுக்காறாமை’ என்பதற்கு ‘அழுக்கடையாமை’ எனவும் பொருள் கொள்ள இடமிருக்கிறது.
ஆறுதல் என்னுஞ் சொல் பொருந்தல், தங்கல், அடைதல் என்னும் பொருளும் உடையது. ‘அற்றதோர் கோதை’ (சீவக. 226) என்பதற்கு நச்சினார்க்கினியர் உரைத்த உரையால் இதனை அறியலாம்.
அழுக்காறு என்பதற்கு அழுக்கு வழி என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு ‘அழுக்கு வழிக் கொள்ளாமை’ என்று பொருள் செய்ய நேர்ந்து ஒரு சொல்லியல்பிலும் தன் வினைச் சிறப்பிலும் உரை அமையாமற் போகும். அழுக்காறு என்பதற்கு அழுக்கடைவு என்று பொருள் கொண்டால் அழுக்காறாமை என்னும் எதிர்மறைக்கு அழுக்கடையாமை என்னும் நேர்ப் பொருள் கிடைக்கும்.
(திருக். அறம். 126-7.)
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்