சொல் பொருள்
கோட்டான் போல்வதொரு பறவை; இதன் தலை ஆண்மக்கள் தலைபோல் இருத்தலின் இப்பெயர் பெறுவதாயிற்று என்க. (பட். ஆரா. 95.)
(பெ) ஓர் ஆந்தை வகை
சொல் பொருள் விளக்கம்
ஓர் ஆந்தை வகை
பாழடைந்த இடங்களில் வசிக்கும் ஆந்தையினப் பறவை. ஓர் ஆணின் தலையைப் போன்ற தலையைக் கொண்டிருப்பதால் ஆண்டலை என்ற பெயர் பெற்றதென்பர். (ஆண் + தலை = ஆண்டலை)
இது ஒரு விலங்கு என்பாரும் உளர். எனினும் கலித்தொகையில் ஆண்டலைப்புள் என்று குறிப்பாகச் சொல்லப்பட்டிருப்பதால் (ஆண்டலைப்புள் அருகணைந்து பார்க்கு மாலோ – கலிங்கத்.4:16) இது ஒரு பறவையே என்பது பெறப்படும்.
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
brown hawk-owl (Ninox scutulata), brown boobook
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: ஒரு வகைக் காட்டுக்கோழி என்பாரும் உளர். சாவோர்ப் பயிரும் கூகையின் குரலும் புலவூண் பொருந்திய குராலின் குரலும் ஊண்டலை துற்றிய ஆண்டலைக் குரலும் – மணி.6 : 75-77 என்கிறது மணிமேகலை. இங்கு கூகையும், குராலும் ஆந்தையின் வகைகள். எனவே ஆண்டலையும் ஆந்தையின் இன்னொரு வகையாக என்பது பெறப்படும். கூகையோடு ஆண்டலை பாட ஆந்தை கோடதன் மேற்குதித்து ஓட – (திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம்-3) என்ற பாடல்மூலம் இது உறுதியாகிறது. பறவைநூலாராகிய க.ரத்னம் ஆண்டலையை ‘HAWK – OWL BROWN’ என ஆந்தை இனத்தைச் சேர்ந்த ஓர் உயிரியாகவே அடையாளப்படுத்துகின்றார். (ரத்னம் க., 1998, தமிழில் பறவைப் பெயர்கள், உலகம் வெளியீடு, சூலூர், கோவை) பெருவிழாக் கழிந்த பேஎம் முதிர் மன்றத்துச் சிறுபூ நெருஞ்சியோடு அறுகை பம்பி அழல்வாய் ஓரி அஞ்சுவரக் கதிர்ப்பவும் அழு குரல் கூகையோடு ஆண்டலை விளிப்பவும் – பட் 255-258 திருநாள் இல்லையான அச்சம் முதிர்ந்த மன்றத்தில் சிறிய பூக்களையுடைய நெருஞ்சியோடே அறுகம்புல் பரவி நெருப்புப்போன்ற வாயையுடைய நரிகள் அச்சம்வரும்படி ஊளையிடவும் அழுகுரல் கூகையோடு ஆண்டலைகள் கூப்பிடவும் ஆண்டலை, ஊமன், குடிஞை, குரால், கூகை என்பன தமிழ்நாட்டு ஆந்தை வகைகள். பார்க்க : ஊமன் குடிஞை குரால் கூகை
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்