இடித்துரைத்தல் என்பதன் பொருள் கண்டித்து அறிவுரை கூறுதல்
1. சொல் பொருள்
அறிவுரை கூறித் திருத்தும் நோக்கத்தோடு) கண்டித்தல்.
தவறுகளை கண்டிப்போடு எடுத்துரைத்தல்.
2. சொல் பொருள் விளக்கம்
இடிக்காமல் இடிப்பது இடித்துரை. சொல்லிடியே இவ்விடி. ஒரு குறை கண்டால் அன்பு, நட்பு, பதவி, செல்வம். செல்வாக்கு இவற்றைக் கருதிச் சிலர் அமைதியாக இருப்பர். சிலர் ‘ஆமாம்’ போடுவர் ; சிலர் தூண்டியும் விடுவர். இவற்றால் ஒன்றன்மேல் ஒன்றாகக் கேடே உண்டாம். ஆனால், அறிவறிந்த சான்றோர் இடித்துரைக்க(advice) வேண்டியதை வேண்டிய பொழுதில் வேண்டிய அளவில் செய்யத் தவறார். இடிப்பார் இல்லையா? கெடுப்பார் வேறொருவர் வேண்டுவதில்லை என்பார் திருவள்ளுவர்
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
rebuke, criticism, admonition, dissuasion. forewarning, adjuration, expostulate
4.தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பா ரிலானுங் கெடும் – குறள் 448
கடிந்து அறிவுரை கூறும் பெரியாரின் துணை இல்லாத காவலற்ற அரசன் தன்னைக் கெடுக்கும் பகைவர் எவரும் இல்லாவிட்டாலும் கெடுவான்.
உலப்பில் உலகத்து உறுதியே நோக்கிக்
குலைத்து அடக்கி நல் அறம் கொள்ளார்க் கொளுத்தல்
மலைத்து அழுது உண்ணாக் குழவியைத் தாயர்
அலைத்துப் பால் பெய்துவிடல்
பழமொழி நானூறு – முன்றுரையரையனார்
அழிவில்லாத இந்த உலகத்தில் நாம் சிறந்த விஷயங்களைமட்டுமே தேடிச் செல்லவேண்டும், நல்ல அறச் செயல்களில்மட்டுமே ஈடுபடவேண்டும்.
யாரேனும் அப்படிச் செய்யாமல் கெட்ட வழியில் சென்றால், அவர்களைத் தடுத்து நிறுத்தவோ, அறிவுரை சொல்லவோ தயங்காதீர்கள். ‘அவங்க தனிப்பட்ட விஷயத்துல தலையிடலாமா? என்ன நினைப்பாங்களோ’ என்றெல்லாம் யோசிக்காமல் உங்கள் கருத்தைச் சொல்லி அவர்களை நல்ல பக்கம் திருப்புங்கள்.
ஒரு குழந்தை பால் குடிக்கமாட்டேன் என்று அடம் பிடித்து அழுதால், தாய் பார்த்துக்கொண்டு சும்மாவா இருக்கிறார்? இழுத்துப் பிடித்து வருத்திப் பாலை ஊட்டிவிடுகிறார் அல்லவா? அதுமாதிரிதான் இதுவும்.
குத்திக்காட்டல் காண்க. நண்பனுக்கு இடிக்கும் கேளிர் என்பது ஒரு பெயர்.
5. பயன்பாடுகள்
- அவரது அறிவுரையையும் அறவுரையையும் இடித்துரையையும் ஏற்றுக் கொள்.
(அ) மகன் (சிறுவன்) உருப்படியான வேலை எதுவும் இல்லாமல் விளையாடிக் கொண்டு திரிந்தான். அதனைப் பார்த்த தந்தை
அவனிடம், நாய்க்கு வேலையில்ல நிக்க நேரமில்ல என்று கூறினார். இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் நாயின் இயல்பைச் சுட்டுவதாக உள்ளது. எந்த வேலையும் இல்லாமல் தெரு நாய் அங்குமிங்கும் சுற்றிக் கொண்டேயிருக்கும். ஓரிடத்தில் நிற்பதற்கு அதற்கு நேரமிருக்காது என்பதேயாகும். இங்கு மகனும் அவ்வாறே ஓரிடத்தில் நில்லாமல் வீணாகச் சுற்றிக் கொண்டிருப்பதாகத் தந்தை சுட்டிக்காட்டி இடித்துரைத்து அவனுக்கு அறிவு கூறும் போக்கு காணப்படுகிறது.
(ஆ) ஒரு குடும்பத்தில் பொருளாதாரப் பிரச்சனை மிகுதியாக இருக்கிறது. அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கே பெற்றோர்கள் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நிலையில் வீட்டில் உள்ள பிள்ளை ஆடம்பரமான பொருள் ஒன்றினை வாங்கித் தருமாறு கேட்டு அடம்பிடிக்கிறது. இந்நிலையில் அப்பிள்ளையின் தந்தை பின்வரும் பழமொழியைக் கூறினார்.
குடல் கூழுக்கு அழுவுது கொண்ட பூவுக்கு அழுவுதாம் |
இந்தப் பழமொழியின் நேரடிப் பொருள் வயிற்றுக்குக் குடிக்கக் கூழ்கூடக் கிடைக்காத நிலையில் கொண்டைக்குப் பூ வாங்க இயலுமா? என்பதாகும். அதாவது அடிப்படைத் தேவைகளுக்கே பொருளாதார நெருக்கடி இருக்கும் போது ஆடம்பரச் செலவு செய்ய இயலுமா? என்று பிள்ளையின் ஆடம்பர ஆசையை இடித்துரைக்கிறது. ஆடம்பரப் பொருள் கேட்ட பிள்ளை உண்மையை உணர்ந்து அடங்கிவிட்டது. |
இது ஒரு வழக்குச் சொல்
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்