இரலை என்பது ஒரு வகை மான்.
1. சொல் பொருள்
(பெ) ஒரு வகை மான், புல்வாய், முறுக்குமான்
2. சொல் பொருள் விளக்கம்
சங்க இலக்கியங்களில் ஐந்து வகை மான்களைப் பற்றிய செய்திகள் கூறப்படுகின்றன. அவை இரலை, நவ்வி, மரையான், உழை, கடமா.
சங்க இலக்கியங்களில் இரலை யினத்தைச் (Antilope ) சார்ந்த மூன்று வகை மான்கள் குறிப்பிடப்படுகின்றன . அவை இரலை, நவ்வி, மரையான் என்பனவாகும் .
இதன் கொம்புகள் உள்துளை அற்றவை. துளையற்று உள்ளே கெட்டியாக இருக்கும். மற்றும் இம்மான்களின் கொம்பு கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைப்பதில்லை. கலைமானினத்தின் கொம்புகள் உள்துளையுடையவை. கீழே வீழ்ந்து புதிய கொம்பு திரும்பவும் முளைக்கும். இம்மான்களின் கொம்பில் கிளைகள் இல்லை. கலைமானின் கொம்புகளில் கிளைகள் உண்டு. இந்த அடிப்படை வேற்றுமையைக் கொண்டு மான் வகைகளை இரலை இனமா கலையினமா என்று எளிதில் பிரித்துவிடலாம். (சங்க இலக்கியத்தில் விலங்கின விளக்கம். 85.)
முறுக்கிய கொம்பிருப்பதால் தமிழ் நாட்டில் சில இடங்களில் முறுக்குமான் என்றழைக்கின்றனர்
ஆண் இரலைமானின் மேற்புறம் கருநிறமுடையதாகக் காணப்படும் . அதனால் தான் தேவாரத்தில் இரலைமான் கருமான் என்றழைக்கப்பட்டது . தேவாரத்தில் சிவபெருமான் கருமானின் தோலை அணிந்ததாகவும் கருமானை உகந்து கையிலேந்தியிருப்பதாகவும் பாடப்பட்டிருக்கின்றது .
இருங்கேழ் இரலை சேக்கும் பரலுயர் பதுக்கை என்று வரும் அகப்பாடல் (91 ) வரிகளில் “இருங்கேழ்” என்ற சொல் குறிப்பிடுகின்றது . இருங்கேழ் என்ற சொல் அழகிய கருமையைக் குறிக்கும் . இம்மான் கருமையாயிருப்பினும் கீழ்ப்புறம் வெண்மையாகவே இருக்கும் . ஆனால் கழுத்துப்புறம் கருமையாக இருக்கும் .
“ வெண்புறக் குடை திரிமருப்பிரலை ” என்றுவரும் அகப்பாடல் ( 139 ) வரி இரலையின் வெண்மையான அடிப்பகுதியைத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது .
கார்காலத்து மழைநீரை அருந்தி இரலையின் ஆண்மான் பிடவ மரத்தின் நிழலில் தன்னுடைய துணைமானுடன் பயமின்றித் தங்கியிருந்ததை அகப்பாடல் கூறுகின்றது. இரலைமான்கள் ஓய்வெடுக்கும்போது சாய்ந்துபடுத்து அசைபோடும் . அந்தச் சமயத்தில் ஆண் இரலைமானின்வயிற்றுப்புறம் வெண்மையாகத் தெரிவது இயல்பே.
இதையே அகநானூறு குறிப்பிட்டுள்ளது. ஆண் மானிற்கு முதுகுப்புறம் கருப்பாகவும் வயிற்றுப்புறம் வெண்மையாகவும் இருப்பதையே விலங்கு நூலாரும் சுட்டிக் காட்டியுள்ளனர் . இந்த வெண்மையான அடிப்புறம் பெண்மானுக்குக் கிடையாது . அகப்பாடலிலும் ஆண்மானுக்கே வெண்மையான அடிப்புறம் இருப்பதாகக் கூறப்பட்டிருப்பதைக் காணலாம் .
இதன் கழுத்துக் கருமையானது. இரலைமானின் கொம்புகளைப் பற்றிச் சங்க நூல்களில் பல பாடல்களில் கூறப்படுகின்றன . இரலைமானின் கொம்பு முறுக்கி முறுக்கி நேரிதாக வளரும், கிளைகள் கிடையாது.
செருப்பின் முன் காணப்படும் இரண்டு தோல் வார்கள் பிரிந்து முறுக்கிக் காணப்படுவதுபோல இரண்டு கொம்புகள் இரலைக்கு இருப்பதாகக் கூறப்பட்டிருப்பதும் மிகப் பொருத்தமானதாகும் . இம்மான் முறுக்குடைய கொம்பை உடையதாகப் பல பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றது . அகநானூற்றில் மட்டும் ஆறு பாடல்களில் “ திரி மருப்பிரலை ” ( Twisted horns ) என்று அழைக்கப்படுகின்றது .
திரி மருப்பிரலை என்று பல பாடல்களில் பாடப் படுவதிலிருந்து இரலையின் கொம்பை எவ்வளவு நன்றாகச் சங்கப் புலவர்கள் கவனித்திருந்தார்கள் என்பது தெளிவாகின்றது . இரலையின் கொம்பு முறுக்கி இருப்பதாகக் கூறியதோடு எந்தத் திசையில் முறுக்கியிருந்தது என்பதையும் தெளிவாகக் கூறியிருக்கின்றனர். அகம் , 204 . இரலையின் கொம்பு வலப்புறமாகத் திரிந்து இருப்பதாக கூறுவதைக் கவனிக்க வேண்டும். இரலைமானின் கொம்பு முறுக்கியிருப்பது மிக அழகாகக் காணப்படும்.
வாழைப் பூவில் பூக்கள் முதிர்ந்து விழுந்தபின் காணப்படும் குலைக்காம்பைப் போல இரலைக் கொம்பு திரிந்து காணப்படுவதாக அகம் 134 ஆம் பாடல் கூறுவது அரிய விளக்கமாகும் . பூக்கள் உதிர்ந்து விழுந்த இடத்தில் காம்பில் காணப்படும் விளிம்புடைய தழும்புகள் போல முறுக்குடைய இரலைக் கொம்பில் குறுக்கு வாட்டத்தில் விளிம்புடைய வளையங்கள் காணப்படும் .
இரலையின் பெண்மானுக்குக் கொம்புகள் கிடையா . இம்மான்களில் ஆண்களுக்கே கொம்பு உண்டு. சங்க நூல்களில் இரலையின் ஆண்மானை இரலையென்றே அழைப்பதையும் பெண்மானை துணை பிணை என்று அழைப்பதையும் காணலாம் . இரலையெனக் கூறப்படும் ஆண் மானுக்கே கொம்பிருப்பதாகச் சங்க நூல்களும் கூறுகின்றன.
இரலைமான்கள் பொதுவாகச் சமவெளிப் பகுதியில் வாழ்வதாகக் கூறுவர் . அவற்றை வறட்சியான பாலைப் பகுதியிலும் ( Desert and Scrub ) புல் வெளிகளிலும் ( Grassy plains ) குறுங்காடுகளிலும் வயற் புறங்களிலும் காணலாம் . திறந்த புல் வெளிகளிலும் வறட்சியான சூழ்நிலையிலும் இரலைமான் இயற்கையில் மிகுதியாகக் காணப்படுகின்றன.
சங்க இலக்கியத்திலும் இரலைமான்கள் பாலையிலும் முல்லையிலுமே பாடப்பட்டிருப்பது மிக மிகப் பொருத்தமே . முல்லையில் புல்வெளிகளும் ( Grassy lands ) குறுங்காடுகளும் ( Parklands ) அடங்கியிருக்கின்றன . பாலையில் வறட்சியான பகுதிகள் அடங்குகின்றன.
ஆதலில் சங்கப்புலவர்கள் இரலை வாழும் சூழ்நிலையை நுண்ணிதின் உணர்ந்தே பாலையிலும் முல்லையிலும் கூறினர் .
இம்மான்கள் வாழும் முல்ல நிலத்தில் குறுங்காடுகளும் புல்வெளிகளும் கானாறுகளும் காணப்படும். வெயிற்காலத்தில் பாலையைப்போலக் குறுங்காடுகளும் புல்வெளிகளும் வறண்டு வாடித் தோற்றமளிக்கும். ஆனால் மழை காலத்தில் பச்சைப் பசேர் என்று தோற்றமளிக்கும். சங்க நூல்களில் இந்த இரு சூழ்நிலைகளிலும் இரலையை வைத்துப் பாடியிருக்கின்றனர் .
இவை வறட்சியான பாலைப் பகுதியிலும் புல் வெளியிலும் வறண்ட குறுங்காடுகளிலும் காணப்பட்டாலும் , இவை விரும்பி வாழ்ந்த சூழ்நிலை திறந்த புல்வெளி களும் உப்புக் கலந்த மண்ணுடைய களர்ப்பாலை நிலங்களுமேயாகும் .
இம்மான்கள் கூட்டமாகக் காணப் படுவதையே இனம் பரந்தவை என்று அகநானூறு சொல்லுகின்றது . முல்லைப் புல்வெளியில் புல்வாயைக் கண்டதைச் சங்கப் பாடல்கள் குறிப்பிட்டுள்ளன. இவை விரும்பி வாழும் சூழ்நிலையான களர் நிலத்தையும் தெளிவாகக் கூறியுள்ளனர்.
உப்புப் போட்டுப் பதனிடும் தோலை வீசி வைத்தாற் போல இருந்த நெடிய களர் நிலத்தில் புல்வாயெனப்படும் இரலைமானை ஒருவன் துரத்தியதாகப் புறநானூறு கூறுவதைக் காணலாம் .
இரலைமான்கள் கூட்டம் கூட்டமாகப் புல்வெளியில் பரந்து மேய்வதைக் கண்டதால் பரப்பி பரந்தவை நன் பலதா அய் என்று சங்க நூல்கள் இரலைமானைப் பற்றிக் கூறுகின்றன . புல்வெளியிலே சிறப்பாக , மிகுதியாகக் காணப்படும் மான் இரலைமானே என்பதால் இதற்குப் புல் வாய் என்ற பொதுப் பெயரும் தொல்காப்பியத்திலும் சங்க நூல்களிலும் வழங்கக் காண்கிறோம்.
இம்மான்கள் மனிதர்களால் வேட்டையாடப் பட்டதாலும் புல்வெளிகள் நகர்ப் புறங்களாக மாறியதாலும் தற்காலத்தில் இம்மான்களைக் காண்பது மிக மிக அரிதாகி விட்டது . இப்பொழுது கிண்டிப் பூங்கா ( Guindy Park ) போன்ற குறுங்காடுகளில் இரலைமான் அரசினரால் பாதுக்காக்கப்படுகின்றது.
சங்க நூல்களில் இரலைமான் கள் அரலையங் காட்டிலும் ( Scrub ) பரலவலிலும் ( அகம் -4 ) வரகு விளையும் வன்னிலத்திலும் காணப்பட்டதாகக் கூறியிருப்பதும் உண்மையான செய்தியாகும் . பரலவல் என்பது கானாற்றுப் பகுதிகள் . இந்தக் கானாற்றுப் புல் வெளிகளில் இரலை விரும்பி வாழ்வதாகவும் விலங்கு நூலார் கூறுவர் .
நற்றிணை , 121 . இரலைமான் வரகின் கதிரைக் கறிப்பதாக நற்றிணை கூறுகிறது . இரலைமான்கள் பலபுற்களையும் அறுகம் புல்லையும் மேய்வதாகக் கூறப்பட்டிருக்கின்றது. இரலைமான்கள் கானலில் மேய்ந்து விளை நிலத்தில் தங்குவதாகப் புறம் 374ஆம் பாட்டில் கூறப்பட்டிருக்கின்றது.
இரலைமான்கள் விளை நிலங்களில் பயிர்களையும் மேயும் என்று விலங்கு நூலார் கூறுவர் . ( They feed on grass and cereal crops ). அகம் , 314. இம்மான்கள் விளை நிலத்தில் பைம்பயிரில் காணப்படுவதாகவும் செழும்பயறு கறிப்பதாகவும் கூறுவதை நோக்குக .
இரலைமான்கள் காலைநேரங்களில் மேய்கின்றன . பிற்பகலில் நிழலைத் தேடி ஓய்வெடுக்கின்றன . சங்க நூல்களில் “ குருந்தின் அல்கு நிழல் வதியும் ” என்றும் “ அல்கு நிழலசையும் ” என்றும் கூறப்பட்டிருக்கின்றது .
இவை மந்தையாக மேயும் போதோ துள்ளிக் குதிக்கும் போதோ காணும் காட்சி போன்ற இனிமையான வேறொரு காட்சியை இயற்கையில் காண முடியாது என்று ஒரு விலங்கு நூலறிஞர் கூறுகின்றார் . இரலைமானின் இனிய அழகுக் காட்சியைத்தான் சங்க நூலறிஞர்கள் பல பாடல்களில் பாடிச் சென்றனர்.
இரலைமான்கள் பொதுவாக மந்தையாக வாழும் . ஒரு மந்தையில் 20 முதல் 30 மான்கள் வரை காணப்படும் . பாலுணர்ச்சி தோன்றும் காலத்தில் இரலை ஆண்கள் பெண்மானைக் கவர்வதற்காகத் தங்களுக்குள் முட்டிப் போர் புரியும் . போரில் வெற்றி பெற்ற இரலையாண் பெண்மானுடன் மந்தையை விட்டு விலகித் தனித்து வாழும் . குட்டி போடும் வரை அவ்வாறு தனித்து இணையாக இரண்டாக வாழும் .
போரில் வென்று பெற்ற தலைமையொடு செருக்குற்றுத் துணை மானொடு வாழும் ஆண் இரலையையே அண்ணல் இரலை என்று சங்கப் பாடல்கள் கூறும். அகப்பாடல்களில் இரலைமான் தன் துணையுடன் மட்டுமின்றிக் குட்டிகளுடன் காணப்படுவதாகக் கூறுவதைக் கவனிக்க வேண்டும் .இரலை ஆண்கள் கார்காலத்தில் துணையுடன் காணப்படுவதாகப் பல சங்கப் பாடல்களில் கூறப்பட்டிருக்கின்றது .
கார்காலமான ஆகஸ்டு- செப்டம்பர்த் திங்களில் தமிழ் நாட்டில் தென் மேற்குப் பருவக் காற்று வீசி மழை பெய்யும் . இந்தக் காலத்தில் தான் இரலைமான்கள் துணைதேடுவதாகக் கூறப்பட்டிருக்கின்றது.
கார் காலத்திறுதியில் இரலைமானின் ஏற்றொடு பெண் மான் நடு இரவில் இனச்சேர்க்கை கூடுமாதலால் தேரை ஓசையுடன் ஓட்டாதே என்று பாகனுக்குக் கூறியதாக வரும் அகப்பாடல் இயற்கையில் காணும் உண்மைச் செய்தியைத் தலைவனின் உணர்ச்சியுடன் சேர்த்துக் கூறியமை போற்றத்தக்கது.
தலைவியை நாடிவரும் தலைவனுக்கு இரலைமான்கள் இணை கூடுவதைக் கெடுக்க மனமில்லை என்று கூறியது சங்கப் புலவர்களின் நுண்ணிய மனவுணர்வைக் காட்டுகின்றது .
இணை சேரும் காலத்தில் ( Mating season ) ஆணும் பெண்ணுமாக வாழுமாயினும் குட்டிகள் ஈனும்காலத்து ஆண் இரலைமான்கள் பெண்ணை விட்டுவிட்டுச் சென்றுவிடும் .
குறுந்தொகை , 183 . மேலே காட்டிய குறுந்தொகைப் பாட்டில் கொம்புடைய இரலையின் ஆண்மான் பிணையுடன் சேர்ந்து இருக்கும் கார்காலம் கடந்து , பிணையை விட்டுத் தீர்ந்த காலம் வந்ததைத் தலைவர் கண்டாரோ என்று தலைவி கூறுவதாகச் சொல்லியிருப்பதைக் காணலாம்.
தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட்டாகும் ” என்று தொல்காப்பியச் சூத்திரம் ( சொல்லதிகாரம் 318) தீர் தல் , தீர்த்தல் என்ற சொற்கள் விடுதலாகிய குறிப்புணர்த்தும் என்று சொல்லி யிருப்பதைக் காணலாம் .
விலங்கினத்தில் ஆண் விலங்குகள் துணையையும் இனத்தையும் விட்டுத் தனித்து வாழ்வதையே விடற் பொருட்டாகக் கொண்டு தீர்தலும் தீர்த்தலும் குறிப்புணர்த்துவதாகத் தொல்காப்பியம் கூறுவதை நன்கு இதுவரை பலரும் உணரவில்லை .
தீர்தல் என்ற சொல்லின் வழக்காட்சியைச் சங்க நூல்களில் கூர்ந்து ஆராய்ந்து பார்த்தால் இச்சொல் விலங்கினத்தில் இத்தகைய குணமுடைய விலங்குவகைகளைக் குறித்தே வருவதைக் காணலாம். பாலுணர்ச்சிக் காலத்தில் இரலை ஆண்கள் செருக்கிய , மதர்த்த நடையுடன் நடடக்கும். இந்தச் செருக்கிய நடையையே ஒரு புலவர் மதவு என்றழைக்கிறார்.
தங்களுக்கு ஊறு நெருங்குகின்றது என்றுகாணுங்கால் இரலை மான்கள் ஒரு முறையாக எழும்பித் துள்ளிக் குதித்து ( Light series of leaps ) ஓடும் . இதைப் பல அறிஞர்கள் இரலைமானின் தனித்த குணமாகக் கூறுவர் . இரலை குதிக்கும்போது 6, 7 அடிகள் மேலே எழும்பிக் குதிக்கும் .
உகள், தெறிப்ப ” என்ற சொற்கள் இரலையின் குதிக்கும் செயலையே குறிக்கின்றன . “மறுவந்துகள் ” என்ற சொல் இரலைமான்கள் திரும்பத் திரும்பக் குதித்தலையே குறிப்பிடுகின்றது . இரலையின் நடையை தெறிநடை ” தெறித்தல் ” என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தம் . இரப்பர்ப் பந்தைத் தரையில் அடிக்கும்போது மேலெழும்பி எழும்பித் தெறிப்பது போல் துள்ளித் துள்ளிக் குதிக்கின்றன .
பெருங் கதை துள்ளுநடை இரலை என்று கூறுகின்றது . இரலைமானைப்பற்றி ஒரு நுண்ணிய செய்தியைப் புறநானூற்றில் காணுங்கால் மிகுந்த வியப்புண்டாகின்
இரலைமான்களுக்குக் கண்களின்கீழ் கீறியது போல் ஒரு வெடிப்புக் காணப்படும் . இந்த வெடிப்பில் ஒரு சுரப்பி ( gland ) இருப்பதாக விலங்கு நூலறிஞர் கூறுவர் . இந்தச் சுரப்பி சிறிது ஆழமான பள்ளமாகவும் சுற்றிலும் மயிர் அடர்த்தியானதாகவும் காணப்படும் . பாலுணர்ச்சி வரும் காலத்தில் இந்தச் சுரப்பி நன்றாகத் திறந்து ஒருவகை மதநீரைச் சுரக்கும் . இச்செய்தியை விலங்கு நூலார் கூறியிருக்கின்றனர்,
புறம் , 374 . பாடலில் இரலைமான்கள் நெற்றிபோலப் பரட்டைத் தலைமயிர் குவியும்படி விடியற் காலையில் பனி பெய்வதாகக் கூறப்பட்டிருப்பதை நன்றாகக் கவனிக்கவேண்டும் . இரலைமான்கள் நெற்றிபோல என்று கூறக் காரணம் பலருக்கும் விளங்காது . இரலைமானின் நெற்றியிலிருந்து பனிபோல மதநீர் சுரக்கின்றது . அதனால் இரலையின் நெற்றிக் கீற்றில் இருக்கும் மயிர் நனைந்து சேர்ந்து குவிந்து காணப்படுகின்றறது . அது போலச் சிறுவர்களுடைய பரட்டை மயிர் அடங்கிக் குவியும்படி பனிநீர் பெய்கிறது .
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
Antilope, Black Buck, Antilope cervicapra
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
இதில் ஏறு எனப்படும் ஆண்மானைப் பற்றிய வருணனை.
பெரிய கழுத்தை உடையது
மா எருத்து இரலை மட பிணை தழுவ – நற் 69/4
பெரிய முறுக்குண்ட கொம்புகளையுடையது
இரு திரி மருப்பின் அண்ணல் இரலை/செறி இலை பதவின் செம் கோல் மென் குரல் – அகம் 34/4,5
அஞ்சாத வலிய பார்வையை உடையது
எருத்து வலிய எறுழ் நோக்கு இரலை/மருப்பின் திரிந்து மறிந்து வீழ் தாடி – கலி 15/5,6
கருமையான கொம்புகளையுடையது
கரும் கோட்டு இரலை காமர் மட பிணை – அகம் 74/9
முதுகு வெண்மையானது
வெண் புறக்கு உடைய திரி மருப்பு இரலை/வார் மணல் ஒரு சிறை பிடவு அவிழ் கொழு நிழல் – அகம் 139/10,11
அறல் பட்ட கொம்புகளையுடையது
அறு கோட்டு இரலையொடு மான் பிணை உகளவும் – பட் 245
கொம்புகள் வலப்பக்கமாக முறுக்கியிருக்கும்
வலம் திரி மருப்பின் அண்ணல் இரலையொடு/அலங்கு சினை குருந்தின் அல்கு நிழல் வதிய – அகம் 304/9,10
பெண்மானூடன் துள்ளி விளையாடும்
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
தேடூஉ நின்ற இரலை ஏறே – நற் 242/10
மட பிணை தழீஇய மா எருத்து இரலை/காழ் கொள் வேலத்து ஆழ் சினை பயந்த – நற் 256/8,9
வன் பரல் தெள் அறல் பருகிய இரலை தன் – குறு 65/1
இரலை மானையும் காண்பர்-கொல் நமரே – குறு 183/4
இரலை மேய்ந்த குறை தலை பாவை – குறு 220/2
மரல் புகா அருந்திய மா எருத்து இரலை/உரல் கால் யானை ஒடித்து உண்டு எஞ்சிய – குறு 232/3,4
இரலை நன் மான் நெறி முதல் உகளும் – குறு 250/2
திரி மருப்பு இரலை அண்ணல் நல் ஏறு – குறு 338/1
புள்ளி இரலை தோல் ஊன் உதிர்த்து – பதி 74/10
பரல் அவல் அடைய இரலை தெறிப்ப – அகம் 4/4
திரி மருப்பு இரலை புல் அருந்து உகள – அகம் 14/6
அண்ணல் இரலை அமர் பிணை தழீஇ – அகம் 23/8
இரலை சேக்கும் பரல் உயர் பதுக்கை – அகம் 91/10
திரி மருப்பு இரலை தெள் அறல் பருகி – அகம் 154/8
இரலை நன் மான் இனம் பரந்தவை போல் – அகம் 194/6
திரி மருப்பு இரலை பைம் பயிர் உகள – அகம் 314/6
புன்கண் கொண்ட திரி மருப்பு இரலை/மேய் பதம் மறுத்த சிறுமையொடு நோய் கூர்ந்து – அகம் 371/5,6
புல்வாய் இரலை நெற்றி அன்ன – புறம் 374/2
திரி மருப்பு இரலைய காடு இறந்தோரே – அகம் 133/18
திரி மருப்பு இரலையொடு மட மான் உகள – முல் 99
அரலை அம் காட்டு இரலையொடு வதியும் – நற் 121/4
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்