Skip to content

சொல் பொருள்

(வி) 1. கருப்பாக இரு, 2. இருண்டிரு, 3. ஒளி குறை, மங்கு

2. (பெ) 1. இருட்டு, பேய், 2. இரவு, 3. கருமை நிறம், 4. மயக்கம்

சொல் பொருள் விளக்கம்

இருள் என்பது இருட்டு ஆவது பொது வழக்கு. ஆனால் இருள் என்பது பேய் என்னும் பொருளில் தென்னகப் பொது வழக்காக உள்ளது. “இருளடித்து விட்டது” என்பர். “ஓர் ஆளும் கறுப்பு உடையும் பேய்” என்பது பாண்டியன் பரிசு. இருட்டு, இருளன், இருளாண்டி இவ்வழிச் சொற்கள். ‘பேயாழ்வார்’ ஓர் ஆழ்வார். பே = அச்சம். பே > பேய்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

be black in colour, be dark, turn dim, darkness, night, black colour, clouded state of mind, delusion

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

புறம் தாழ்பு இருளிய பிறங்கு குரல் ஐம்பால் – நற் 96/5

முதுகில் தாழ்ந்து கருத்த ஒளிரும் திரண்ட கூந்தலை

பெயல் தாழ்பு இருளிய புலம்பு கொள் மாலையும் – குறு 314/3

மழை இறங்கி இருண்ட தனிமைகொண்ட மாலைப் பொழுதிலும்

பாஅல் புளிப்பினும் பகல் இருளினும்
நாஅல் வேத நெறி திரியினும் – புறம் 2/17,18

பால் தன் இனிமையொழிந்து புளிப்பினும், ஞாயிறு தன் ஒளி இழந்து இருண்டுபோனாலும்
நான்கு வேதத்தினது ஒழுக்கம் வேறுபடினும்

கொடி விடுபு இருளிய மின்னு செய் விளக்கத்து – கலி 41/6

கொடி விட்டவாறு மங்கிய ஒளியில் மின்னல் ஏற்படுத்திய வெளிச்சத்தில்

இருள் பட பொதுளிய பராரை மராஅத்து – திரு 10

இருட்டு உண்டாகத் தழைத்த பரிய அடியையுடைய செங்கடம்பின்

இஃது யாம் இரந்த பரிசில் அஃது இருளின்
இன மணி நெடும் தேர் ஏறி
இன்னாது உறைவி அரும் படர் களைமே – புறம் 145/8-10

இது நின்பால் யாம் இரந்த பரிசில், அஃதாவது, இந்த இரவின்கண்
இனமாகிய மணியையுடைய உயர்ந்த தேரை ஏறிப்போய்
காண்டற்கு இன்னாதாக உறைகின்ற உன் மனைவியின் பொறுத்தற்கரிய நோயைத் தீர்ப்பாயாக

கவ்வை நாற்றின் கார் இருள் ஓர் இலை – குறு 282/2

ஒலிக்கின்ற நாற்றின் மிக்க கருநிறமுடைய ஒற்றை இலையை

இடை தெரிந்து உணரும் இருள் தீர் காட்சி – பெரும் 445

கூறாமலே)குறிப்பால் தெரிந்து உணரும் மயக்கமற்ற காட்சியையுடையனாய்,

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

இது ஒரு வழக்குச் சொல்

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *