சொல் பொருள்
1. (வி) 1. மூச்செறி, பெருமூச்சுவிடு, 2. ஒலி,
2. (பெ) 1. உயிரினம், 2. உடம்பிலுள்ள ஜீவன், 3. ஒலி, ஓசை, 4. நெட்டுயிர்ப்பு, 5. துதிக்கை, 6. ஆதார சக்தி,
சொல் பொருள் விளக்கம்
(1) மெய் பதினெட்டினையும் இயக்கித் தான் அருவாய் வடிவின்றி நிற்றலின் உயிராயிற்று.(தொல். எழுத்து. 8. நச்)
(2) உடம்பை உய்ப்பது அல்லது செலுத்துவது உயிர். (சொல். கட். 31.)
(3) தானும் இயங்கி, மெய்க்குள்ளே புகுந்து அதனையும் உய்க்கும் இயல்பினையறிந்த நம்முடைய முன்னோர்களாகிய தமிழர்கள், தாமும் தனித்து இயங்கி, மெய்யெழுத்துக்களுட் புகுந்து அவற்றையும் இயக்கும் எழுத்துக்களை ‘உயிர் எழுத்து’ என்னும் பெயரிட்டுக் கூறியது வியத்தற்குரியது. இன்னும் அந்த ஆன்மாவுக்கு உயிர் என்று பெயர்வைத்ததும், அதனைத் தாங்கி நிற்கும் மெய்க்கு உடல் என்று பெயர் வைத்ததும் நினைக்குந்தோறும் நினைக்குந்தோறும் வியப்பைத் தருகின்றது. “உயிர்ப்பை உடையதால் அதற்கு உயிர் என்று பெயர் வந்தது”, என மாதவச் சிவஞான சுவாமிகள் ‘சிவஞான மாபாடிய’ த்துள் கூறியருளினார்கள். ஆனால், தத்துவ ஞானம் கைவரப்பெற்ற பின்னரே எழுத்துக்களுக்கு உயிர், மெய் என்ற பெயரிட்ட முன்னோர்கள், இறைவன் இந்த உயிரை உடலோடு சேர்த்து இயங்குமாறு செய்ததன் நோக்கம், அந்த ஆன்மாவானது உய்தி பெறுதற்கு, அதாவது ஈடேறுவதற்குத்தான் என்றறிந்த அவர் ‘உய்’ என்ற பகுதியின் அடியாக அந்த உயிர் என்ற பெயர் கொடுத்திருக்க வேண்டுமென்று கருதினால், அது தவறாகாதன்றோ? (கட்டுரைப் பொழில். 143.)
மொழிபெயர்ப்புகள்
ஆங்கிலம்
living being, life, sound, voice, sighing, deep breath, Elephant’s trunk, life
தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு: அழல் என உயிர்க்கும் அஞ்சுவரு கடும் திறல் பாம்பு பட புடைக்கும் பல் வரி கொடும் சிறை புள் – திரு 149-151 நெருப்பென்னும்படி நெட்டுயிர்ப்புக்கொள்ளும் அச்சம் தோன்றும் கடிய வலிமையினையும் உடைய, பாம்புகள் மாளும்படி அடிக்கின்ற பல வரியினையுடைய வளைந்த சிறகினையுடைய கருடனை தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள் உயிர்த்த_காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம் – அகம் 5/23-25 தூய நீர் தந்த துணையோடு அமைந்த (இரட்டை வடமாகப்)பின்னிய மாலையை மோந்து பெருமூச்சுவிட்ட நேரத்தில், (அதன் வெப்பத்தால்)அந்த சிறந்த மலர்கள் பவளம் போல் ஒளி இழந்து தம் அழகு அழிந்த தோற்றத்தை தொகு சொல் கோடியர் தூம்பின் உயிர்க்கும் அத்த கேழல் அட்ட நல் கோள் செந்நாய் ஏற்றை – அகம் 111/9-11 புகழினைத் தொகுத்துக்கூறும் கூத்தரது தூம்பினைப் போலத் தோன்றி ஒலிக்கும் காட்டிலுள்ள ஆண் பன்றியைக் கொன்ற தன் இரையினை நன்கு பற்றிக்கொள்ளும் திறனுடைய செந்நாயின் ஏற்றை மலர் தலை உலகத்து மன் உயிர் காக்கும் முரசு முழங்கு தானை மூவருள்ளும் – பெரும் 32,33 அகன்ற இடத்தையுடைய உலகத்தில் நிலைபெற்ற உயிரினத்தைப் புரக்கும் முரசு முழங்குகின்ற படைகளையுடைய மூவேந்தர்க்குள்ளும் இன் உயிர் அன்ன பிரிவு அரும் காதலர் – நற் 237/3 இனிய உயிர் போன்ற பிரிவதற்கு அரிய காதலர் வள் உயிர் தெள் விளி இடையிடை பயிற்றி கிள்ளை ஓப்பியும் – குறி 100,101 பெருத்த ஓசையுடன் தெளிந்த சொற்களை நடுநடுவே சொல்லி, கிளியை ஓட்டியும் கண் இடை விடுத்த களிற்று உயிர் தூம்பின் – மலை 6 கண்களின் நடுவே வெளியாகத் திறந்த யானை நெட்டுயிர்ப்புக் கொண்டாற்போலும் ஓசையையுடைய நெடுவங்கியத்தோடே கண் விடு தூம்பின் களிற்று உயிர் தொடு-மின் – புறம் 152/15 கண் திறக்கப்பட்ட தூம்பாகிய களிற்றினது கை போலும் வடிவையுடைய பெருவங்கியத்தை இசையுங்கோள் உயிர் – ஆகுபெயர் – நச்.உரை மலை. நெல்லும் உயிர் அன்றே நீரும் உயிர் அன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம் – புறம் 186/1,2 இவ் உலகத்தார்ர்கு நெல்லும் உயிரன்று, நீரும் உயிர் அன்று வேந்தனாகிய உயிரை உடைத்து பரந்த இடத்தையுடைய உலகம்.
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்