Skip to content

சொல் பொருள்

(பெ) இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆடப்பெறும் ஆட்டம்.

சொல் பொருள் விளக்கம்

இந்த உள்ளிவிழவு என்பது சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி ஆடுதலேயாம் என்பர். இந்தச்
சலங்கை கட்டி ஆடுதல் என்பது இப்போது இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆடப்பெறும் ஆட்டம்.

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

சான்றோர் வருந்திய வருத்தமும் நுமது
வான் தோய்வு அன்ன குடிமையும் நோக்கி
திரு மணி வரன்றும் குன்றம் கொண்டு இவள்
வரு முலை ஆகம் வழங்கினோ நன்றே
அஃதான்று அடை பொருள் கருதுவிர் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நல் தேர் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே – நற் 234

தலைவனுக்காகப் பெண்கேட்டு வந்தோரின் வழிநடை வருத்தத்தையும், உமது
வானத்தைத் தொடுவதுபோன்ற குலப்பெருமையையும் நினைத்துப்பார்த்து,
அழகிய மணிகளைத் தேய்த்து அடித்துக்கொண்டு செல்லும் இவரின் குன்றத்தின் பெருமையைக் கொண்டு,
வளர்கின்ற முலைகளையுடைய மார்பினையுடையவளை வழங்கினால் நல்லது;
அதைவிட்டு, இவர் கொண்டுவந்த பரிசப்பொருள்களை எண்ணுவீராகில், பகைவரின் வெண்கொற்றக்குடையோடு
கழுமலம் என்ற ஊரைக் கைப்பற்றிய நல்ல தேரையுடைய சோழனின்
பங்குனி விழாவின்போதான உறந்தைநகரோடு
உள்ளி விழாக் காலத்து வஞ்சியும் மிகவும் சிறியதே.

கொங்கர்
மணி அரை யாத்து மறுகின் ஆடும்
உள்ளி_விழவின் அன்ன
அலர் ஆகின்றது பலர் வாய்ப்பட்டே – அகம் 368/16-19

கொங்கு நாட்டினர்
மணியினை இடையில் கட்டிக்கொண்டு தெருவில் ஆடும்
உள்ளி விழவின் ஆரவாரம் போன்ற
அலராகாநின்றது பலர் வாயிலும் பேசப்பட்டு

’ஊர் துஞ்சாமை என்பது – ஊர்கொண்ட பெருவிழா நாளாய்க் கண்படை யில்லையாமாக, அதுவும் இடையீடாம்
என்பது. அவை, மதுரை ஆவணியவிட்டமே, உறையூர்ப் பங்குனியுத்திரமே, கருவூர் உள்ளிவிழாவே என
இவை போல்வன. பிறவும் எல்லாம் அப் பெற்றியானபொழுதும் இடையீடாம் என்பது’ என்கிறது
இறையனார் களவியலுரை. எனவே பாண்டிநாட்டு ஆவணி அவிட்டம், சோழநாட்டு பங்குனி உத்திரம் போல சேரநாட்டில் உள்ளிவிழா புகழ்பெற்றது என அறிகிறோம். இந்த உள்ளிவிழவு என்பது சேர கொங்கர்தம் பாரம்பரிய ஆட்டமான சலங்கை கட்டி ஆடுதலேயாம் என்பர். இந்தச் சலங்கை கட்டி ஆடுதல் என்பது இப்போது இரண்டு கால்களிலும் சலங்கை கட்டி ஆடப்பெறும் ஆட்டம்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *