ஊண் என்பது புலாலைக் குறிக்கும்
1. சொல் பொருள்
(பெ) 1. உணவு, 2. புலால், 3. ஒரே வகையாக அமைந்த உணவு ஊண் ஆகும்
2. சொல் பொருள் விளக்கம்
ஊன் என்பது புலாலைக் குறிக்கும். வேலைக்குச் செல்வோர் ஒரு தூக்குச் சட்டி நிறைய பழைய சோற்றை, சில உரித்த சின்ன வெங்காயத்துடன் எடுத்துப்போவதை கிராமப்புறங்களில் காணலாம். அவ்வாறான உணவைத்தான் இலக்கியங்கள் ஊண் என்கின்றன.
ஒருவர் பலவிதப் பண்டங்களோடு உண்டால் அது அவருக்கு உண்டி. மிகக் குறைந்த எண்ணிக்கையினாலான பண்டங்களுடன், ஒரே வகை உணவை ஒருவர் உண்டால் அது அவருக்கு ஊண்.
மொழிபெயர்ப்புகள்
3. ஆங்கிலம்
food
4. தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு
பாத்தூண் மரீஇ யவனைப் பசியென்னும்
தீப்பிணி தீண்டல் அரிது – குறள் 227
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை.
உடைசெல்வம் ஊண்ஒளி கல்விஎன்று ஐந்தும்
அடையாவாம் ஆயங் கொளின் – குறள் 939
சூதாடுதலை ஒருவன் மேற்கொண்டால், புகழ், கல்வி, செல்வம், உணவு, உடை ஆகிய ஐந்தும் அவனைச் சேராமல் ஒதுங்கும்.
தொழுது ஊண் சுவையின் உழுது ஊண் இனிது – கொன்றை வேந்தன், ஔவையார்
பல் வேறு பண்டமோடு ஊண் மலிந்து கவினி – மது 503
பலவாய் வேறுபட்ட பண்டங்களோடே பல உணவுகளும் மிக்கு அழகுபெற்று,
உயிர்ப்பிடம் பெறாஅது ஊண் முனிந்து ஒரு நாள் – பொரு 119
மூச்சு விடுவதற்கும் இடம்பெறாமையால், அவ்வுணவுகளை வெறுத்து, ஒருநாள்,
கை ஊண் இருக்கையின் தோன்றும் நாடன் – நற் 22/7
கையில் வாங்கிய உணவுடன் குந்தி இருப்பதைப் போல காட்சியளிக்கும் நாட்டையுடையவன்
நிறை பெயல் அறியா குறைத்து ஊண் அல்லில் – நற் 33/5
நிறைந்த மழையை அறியாத, குறைந்த உணவையுடைய இரவினில்
உணங்கு ஊண் ஆயத்து ஓர் ஆன் தெண் மணி – நற் 37/2
காய்ந்துபோன புல்லைத் தின்னும் ஆநிரைகளினின்றும் தனித்துப்போன ஒரு பசுவின் தெள்ளிய மணி
வேட்ட செந்நாய் கிளைத்து ஊண் மிச்சில் – குறு 56/1
வேட்டையாடும் செந்நாய்கள் தோண்டி உண்ட மிச்சமாகிய
அல்கு அறை கொண்டு ஊண் அமலை சிறுகுடி – கலி 50/13
வீழ்ந்திருக்கும் பாறையில் எடுத்துண்ணும் உணவையும், திரண்ட சோறினையும் கொண்ட சிறுகுடியிலிருக்கும்
ஊண் யாதும் இலள் ஆகி உயிரினும் சிறந்த தன் – கலி 147/8
உணவு ஏதும் உண்ணாதவளாகி, உயிரினும் சிறந்த தன்
ஊண் ஒலி அரவம் தானும் கேட்கும் – புறம் 173/4
உணவு பரிமாறுவதாலும் உண்பதாலும் உண்டான மிகுந்த ஆரவாரம் கேட்கிறது;
நீள் நெடும் பந்தர் ஊண் முறை ஊட்டும் – புறம் 331/8
நீண்ட நெடிய பந்தலின் கீழ் அவர்களை இருத்தி உணவை முறையாக அளித்து உண்பிக்கும்
ஊண் ஒலி அரவமொடு கைதூவாளே – புறம் 334/7
அவர்கள் உண்பதனால் உண்டாகும் ஆரவாரத்திற்கிடையே கை ஓய்ந்திருக்கமாட்டாள்:
ஊண் முறை ஈத்தல் அன்றியும் கோள் முறை – புறம் 392/18
உண்ணும் முறைப்படி அளித்தது மட்டுமல்லாமல், கொள்வார் கொள்ளும் முறைப்படி
5. பயன்பாடு
ஊண் மிக விரும்பு (புதிய ஆத்திசூடி, பாரதியார்)
ஊண் அற்றபோது உடல் அற்றது (பழமொழி)
ஊண் பொங்கும் நேரத்தில் உலைப்பானை கவிழ்ந்தது போலாகி (ஊரின் பெருமை உணர்த்தினாள் ஒருத்தி!, கலைஞர் கருணாநிதி)
இனி இந்த ஊண் உயிர் நினைவில்லை
தடையில்லை சாவிலுமே உன்னோடு வர
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால் (திரைப்பாடல்)
குறிப்பு
இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது
நன்றி
இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.
நன்றி.
அன்புடன்