Skip to content

சொல் பொருள்

(வி) 1. முற்று, முதிர்வடை, 2. மலர் 3. உதிர்,  4. போடு, பெய்,

2. (பெ) 1. முறை, பொழுது, 2. முறைமை, வழக்கு, 3. முதிர்வு,  4. தடவை, 5.விதி,தலைவிதி

சொல் பொருள் விளக்கம்

செயல்கள் பின்னொரு காலத்தில் பயன் கூட்டுவதற்காக உருத்துவரும் நிலையில் செய்தவனைச் செய்த முறையே தாக்குதலால் அம்முறைமை கருதி அவை ஊழ் எனப் பெயர் பெற்றன. ஊழ்த்துதல், முற்றுதல். ஊழ், முறைமை. ஊழ் என்னும் சொல்லுக்கு இந்த பொருளும் உண்டு. திட்டப்படி ஊழ் நடந்து வருதலால் ‘விதி’ என்றும் அதற்குப் பெயர் மற்றொன்று சூழினும் தான் முந்துறுகின்ற எதிரற்ற வலிமை படைத்ததாதலால், அந்த விதி தலைமையான விதி என்னுங் கருத்தில் ‘ தலைவிதி’ என்றும் சொல்லப்படும். (திருக்குறள் அறம். 255.)

மொழிபெயர்ப்புகள்

ஆங்கிலம்

mature, blossom, fall off, pour out, turn, occasion, established usage, aging, maturity turn, number of times

தமிழ் இலக்கியங்களில் பயன்பாடு:

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
மனை நடு மௌவலொடு ஊழ் முகை அவிழ – நற் 115/6

மயிலின் காலடி போலும் இலைகளை உடைய கரிய கொத்துக்களோடு கூடிய நொச்சியும்
மனையில் நட்டு நொச்சியில் படரவிட்டிருக்கும் முல்லையும் முற்றிய அரும்புகள் மலர்ந்து மணம் கமழ

பருவம் வாரா அளவை நெரிதர
கொம்பு சேர் கொடி இணர் ஊழ்த்த – குறு 66/3,4

பருவம் இன்னும் வராதபோது, மிகச் செறிவாக
கிளைகளில் சேர்ந்த கொடிபோல் கொத்தாகப் பூத்தன

மயில் அடி இலைய மா குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே – குறு 138/3,4,5

மயிலின் அடியைப் போன்ற இலையையுடைய கரிய பூங்கொத்துக்களையுடைய நொச்சியின்
அழகுமிக்க மெல்லிய கிளைகளிலிருந்து உதிர்ந்த
நீல மணி போன்ற பூக்களின் ஓசையை மிகவும் கேட்டு

இன் புளி கலந்து மா மோர் ஆக
கழை வளர் நெல்லின் அரி உலை ஊழ்த்து – மலை 179, 180

மனதிற்குகந்த புளிப்பையும் கலந்து, விலங்கின் மோர் (உலைநீர்)ஆக,
மூங்கிலில் வளர்ந்த நெல்லின் அரிசியை உலையில் பெய்து,

தழலும் தட்டையும் குளிரும் பிறவும்
கிளி கடி மரபின ஊழூழ் வாங்கி – குறி 43,44

கவணும், தட்டையும், குளிரும், ஏனையவும்(ஆகிய)
கிளிகளை விரட்டும் இயல்புடையவற்றை முறை முறையாகக் கையில் எடுத்து,

கொடும் தாள் முதலையும் இடங்கரும் கராமும்
நூழிலும் இழுக்கும் ஊழ் அடி முட்டமும்

வளைந்த கால் முதலைகளும், இடங்கர் இன முதலைகளும், கராம் இன முதலைகளும்,
(வழிப்பறி செய்வோர்)கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கு நிலமும், புழங்கின தடங்களுள்ள முட்டுப்பாதைகளும்

கடுவன்
ஊழ் உறு தீம் கனி உதிர்ப்ப – குறு 278/4,5

ஆண் குரங்கு
பழுத்து முதிர்வடைந்த இனிய பழங்களை உதிர்க்க

வித்தா வல்சி வீங்கு சிலை மறவர்
பல் ஊழ் புக்கு பயன் நிரை கவரும் – அகம் 377/4,5

விதைத்து உண்டாக்காத உணவினைக் கொள்ளும் பெருத்த வில்லையுடைய மறவர்கள்
பல முறை புகுந்து பாற்பசுக் கூட்டங்களைக் கவர்ந்ததால்

குறிப்பு

இது சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளது

நன்றி

இந்த வலைத்தளம் பற்றிய உங்கள் எண்ணங்களைத் ⭐️⭐️⭐️⭐️⭐️ தயவுசெய்து பதிவு செய்யுங்கள். ஆக்கபூர்வமான உங்கள் கருத்துக்களும் விமர்சனங்களும் இத்தமிழ் வலைத்தளத்தை மேலும் மெருகூட்ட உதவியாக இருக்கும்.

நன்றி.

அன்புடன்

சொலல்வல்லன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *